வெள்ளி, 21 ஜனவரி, 2011

சித்தர்கள் என்பவர்கள் யார்?(விளக்கம் )


சித்தர்கள்என்ற சொல்லின் பொருளைப்பற்றி முதலில் தெரிந்து கொள்வோம்.சித்தர்கள்என்ற சொல் பொதுவானதாகும். மெய்ஞ்ஞானத்தை உண்மையிலேயே தேடுகிற அனைவரையும் இந்தச் சொல் குறிக்கிறது எனலாம். இருந்தாலும், வைத்தியம், வான சாஸ்திரம், மாந்திரீகம், இரசவாதம், சூத்திர சாஸ்திரம், யோகம் போன்ற நுட்பமான விஷயங்கள் பற்றிய நூல்களை இயற்றியவர்கள் சித்தர்கள் என்றும் கூறலாம். நம்நாட்டுச் சித்தர் கணங்களில் உள்ள வெளிநாட்டவர்களான சீனர்கள், அராபியர்களும் சித்தர்கள் எனப்படுகின்றனர். சித்தர்கள் என்பவர்கள் தெய்வமரபைச் சார்ந்தவர்கள் ஆவர். அவர்கள் தூய்மையின் சிகரமாகவும் தெய்வீகத்தன்மையையும் கொண்டவர்கள்.

சித்தன் என்பவன் மூன்று விதமான கட்டுப்பாடுகளை தன்னுள் கடைப்பிடித்துக் கொண்டு அதன்படி வாழ்தலில் வெற்றிகண்டு சமத்துவத்தையும் சமநிலையையும் ஏற்படுத்திக் கொள்பவன் ஆவான். அந்த மூவகைக் கட்டுப்பாடுகளாவன மூச்சை அடக்குதல் (பிரானாயாமம்), விந்துவை வெளியிடாது அடக்கிக் காமத்தை வென்று எந்தவித ஆசைகளும் இல்லாத நிலையை அடைதல், இறுதியாக மனதை அடக்குதல் என்பவைகளாகும். சித்தர்கள் எங்கிருந்து எதை உண்டாலும் எப்படித் தோற்றமளித்து எதைச் செய்தாலும் உலகியல் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்திருந்தாலும் அவர்களுடைய சிந்தனை சிவம்ஆகிய பரம்பொருளோடு ஒன்றாயிருக்கும். இல்லறவாழ்வெனும் உலகியலில் இருந்தாலும் பற்றுகளகன்று ஆசைகள் அவர்களைப் பாதிப்பதில்லை. அவர்கள் புளியம்பழமும் ஓடும் போல் ஒட்டாமல் இருப்பர். எனவே, சித்தர் நிலையைத் தொட்டவர்கள் காட்டிலோ குகையிலோ வாழவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.கடவுளைக்காண முயல்பவர்கள் பக்தர்கள். தெளிந்தவர்கள் சித்தர்கள்.

மனிதர்களிடத்தே நிலவும் சாதிவேற்றுமைகளையும் ஏற்றதாழ்வுகளையும் கடுமையாகச் சாடிப் புரட்சி செய்தவர்கள் சித்தர்கள். சித்தத்தில் சிவனைக்காணும் வரை உடலைக் காக்கும் பொருட்டு திட ஆரோக்கியத்துடன் வைத்திருக்கக் காயகல்பம் உண்டவர்கள். மேலும், ஏழைகளின் நோய்களைத் தீர்ப்பதற்கு சித்தர்கள் எளிய மருந்துகளைக் கண்டறிந்து அவர்களின் துன்பம் தீர்த்தனர். சித்தர்களில் பலர் யோகப்பயிற்சியாலும் சிலர் ஞானயோகப் பயிற்சியாலும் சித்த ஒழுக்கம் கண்டு சிவநிலை அடைந்தவர்கள் ஆவர். இவர்கள் மனோ சக்தியால் நினைத்ததை சாதித்தவர்கள். இவர்கள் கண்ட சராசர ரகசியங்களை அறிந்து அவற்றை வெளி உலகிற்கு அளித்தவர்கள்.

சித்தர்கள் யோகசாதனத்தால் பெற்ற பயன்களை மக்கள் நன்மைக்காக பயன்படுத்தினார்களே ஒழிய, தங்களுக்காக எதுவும் செய்து கொண்டதாக தெரியவில்லை. பதினெண் சித்தர்களுக்கு முன்னே நவநாத சித்தர்கள் என்ற ஆதி தமிழ்ச்சித்தர்கள் இருந்ததாக வரலாறு கூறுகிறது. அகத்தியர் வருகைக்குப் பின்பே சித்தர் மார்க்கத்தின் மீது ஆரியவண்ணம் பூச்சப்பட்டு விட்டது. சித்தர்கள் தாங்கள் கண்ட அனுபவங்களை மக்கள் பயன்படுத்தும் மிக மிக, எளிமையான இலக்கண நடையில் பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் ஓலைச்சுவடிகளில் நூல்களாக எழுதியுள்ளார்கள்.

இத்தகைய சிறப்புப் பெற்ற சித்தர்கள், தங்கள் திருமேனியை மறைத்துக் கொண்ட இடமாகக்கருதப்படும் இடங்கள் எல்லாம் தெய்வீக சக்திமிக்க திருக்கோயில்களாகக் கருதப்பட்டு போற்றப்படுகின்றன.

இந்தத்திருத்தலங்கள் பதினெண் சித்தர்களின் சமாதித்தலங்கள் எனப்பின்வரும் பாடல்மூலமாக அறியலாம்:

ஆதிகாலத்திலே தில்லையில் திருமூலர்
அழகர் மலை இராமதேவர்
அனந்தசயனம் கும்பமுனி திருப்பதி
கொங்கணவர் கமலமுனியாகி
சோதிரக் கஞ்சட்டமுனி கருவை கருவூரார்
சுந்தரானந்தர் கூடல்
சொல்லுமெட்டுக் குடியில் வான்மீகரோடு ஒர்
நெல்காசியில் நந்திதேவர்
பாதியரிச் சங்கரன் கோவில் பாம்பாட்டி
பழனிமலை யோகநாதர்,
பரங்குன்ற மதில், மச்ச முனிபொய்யூர் கோரக்கர்
பதஞ்சலி இராமேசுவரம்
சோதி வைத்தீசுவரன்கோயிலில் தன்வந்திரி
திகழ் மயூரங்குதம்பை
சித்தருணை யோரிடைக்காடன் சமாதியிற்
சேர்ந்தன ரெமைக் காக்கவே
எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. எண்ணற்ற சித்தர்கள் தமிழகத்தில் வாழ்ந்ததாகப் பல வரலாற்று நூல்கள் எடுத்துரைத்துள்ளன. அகத்தியர் என்ற பெயரில் மட்டும் 37 பேர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் நம் தமிழ் மரபைப் சேர்ந்த அகத்தியர் திருக்குற்றால மலையில் சிவபெருமானை எண்ணிக் கடும் தவமிருந்து திருமாலைச் சிவபெருமானாக அங்கு ஆலயம் அமைத்து வழிபட்டவர். இவரது காலம் கி பி. 13 ஆம் நூற்றாண்டாகும். அகத்தியர் தமிழ்மொழி, தமிழ் இலக்கணங்களைப் பரமசிவனிடத்தில் இருந்தும், முருகப்பெருமானிடத்திலிருந்தும் கற்றுத்தமிழ் மொழியைத் தமிழ் நாட்டில் நன்கு வளர்த்தார். இவர் மார்கழி மாதம் ஆயில்யநட்சத்திரம் 3ம் மாதத்தில் பிறந்ததாகப் போகர் தமது 7000 ஆம் நூலில் கூறுகிறார்.

அகத்தியர் அருளிய நூல்கள்:
அகத்தியர் 21,000 அகத்தியர் 12,000 அகத்தியர் பரிபூரணம் அகத்தியர் ஆயுர்வேதம் அகத்தியர் நயனவிதி அகத்தியர் குணயாடம் அகத்தியர் அமுதக்கலை ஞானம் அகத்தியர் செந்தூரம் 300 அகத்தியர் வைத்திய காவியம் 1500
முதலியவையாகும். இவர் கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் கோயிலில் சமாதி கொண்டதாகக் கூறப்படுகிறது. இமயமலையில் வசிப்பதாகவும் கூறுவர்.

சித்தர்கள் என்பவர் யார்?


எனது நண்பன் ஒரு கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவனாக இருந்தபோதும் ,அவனின் சித்தர் தேடலில் கிடைத்தவைத்தான் இந்த அறிய வகை முத்துகள்.
சித்தர்களின் வாழ்க்கை முறையை அனைத்துதரப்பு மக்களுக்கும் கொண்டு செல்வதே எனது நோக்கம் என்று கூறி இக்கட்டுரையை நான் சமர்ப்பிக்கிறேன். 
இக்கட்டுரையை தொகுத்த சித்தர்மக்கள் பின்வருமாறு...  
தமிழ்ச்சித்தர் வம்சம்

கட்டுரையாளர்: திரு. பரந்தாமன்,விருது நகர்தமிழகம் (ஸ்ரீசித்தர் யோக மையம்),கட்டுரையைத் தட்டச்சு செய்து வழங்கியவர்: திருமதி.கீதா சாம்பசிவம்

நான் இதை பதிவு மட்டுமே செய்கிறேன் , மதிப்பிற்குரிய ஐயா பரந்தாமன் மற்றும் அன்னை கீதா சாம்பசிவம் இதனைப்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

வியாழன், 20 ஜனவரி, 2011

ஞான பிதாவின் பார்வையில்..

அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
  அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ
பின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ
  பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ

முன்னை எத்தனை எத்தனை சென்மமோ
   மூடனாய் அடியேனும்  அறிந்திலேன்
இன்னம்  எத்தனை எத்தனை சென்மமோ
   என்செய் வேன்கச்சி ஏகம்ப நாதனே....

செவ்வாய், 18 ஜனவரி, 2011

சித்தர்,முத்தர், ஞானியர்..கோரக்க சித்தர்..

ஐயா பா. கமலகண்ணன் அவர்கள் எழுதிய ஞானக்கனலிருந்து .....
.
சித்தர்,முத்தர், ஞானியர் என்ற சொல்லுக்கு கோரக்க சித்தர் கூறும் பதில்...

பேராம் பிரமானந்த மடைந்தோனே சித்தன்
    பிரம மூப்பைக் கண்டவனே தவசிரேஷ்டன்
கூரான வாசி மறித்தவனே சித்தன்
   குறிக்கண்டு மாயை வென்றவனே முத்தன்

பூராயம் தெரிந்தவனே கிரியை பெற்றோன்
   பூவுலகில் வசித்தவனே சரியை மார்க்கன்
நேரான தீட்சை பெற்றோன் சீவ முத்தன்
நிறை சிவயோகம் புரிந்தோன் ஞானியாமே...

புதன், 12 ஜனவரி, 2011

கடவுளைக் காணமுடியுமா..?

கடவுளைக் காணமுடியுமா..? என்ற கேள்விக்கு சித்தர்கள் தரும் விளக்கம்.
உள்ளும் புறம்புமாய் உடலுக்குள் நீ இருந்தது
எள்ளளவும் நான் அறியாதே இருந்தேனே பூரணமே! --பட்டினத்தார்.

என்னைவிட்டு நீங்காமல் என்னிடத்து  நீ இருக்க
உன்னைவிட்டு நீங்காது ஒருப்படுவது எக்காலம் ?----பத்திரகிரியார்.

என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ?--சிவவாக்கியர்.

இந்த பாடல்களின் மூலம் கடவுளைக் காணமுடியும் என்று உறுதியாக நம்புவோம்.

செவ்வாய், 11 ஜனவரி, 2011

சித்தர் நூல்கள் யாருக்கு கிடைக்கும்..(2)

அகத்தியர் அருளிய பரிபாஷைத்திரட்டு நூலில் இருந்து ....

அருளினதோர் ஐநூறும் யாருக்கென்றால்
    அகங்கடந்த மெய்ஞானியருள்  பெற்றோர்க்குக்
குரு முகமாய்க் கொடுப்பதெல்லாம் மற்றோர் கையில்
    கொடுத்தவர்க்கும் பெற்றவர்க்கும் சாபம் எனக்கூறிப்
பெருமையுள்ள சித்தர்தமை வணங்கிப் போற்றிப்
    பிரமன் தன் உத்தரவு தன்னால் இந்நூல்
கருவறிய ஞானி கட்கே வெளியிட்டேனால்
   கையடக்கமாக வைத்துக்கொண்டு தேறே !

சித்தர் நூல்கள் யாருக்கு கிடைக்கும்....

அகத்தியர் அருளிய பரிபாஷைத்திரட்டு நூலில் இருந்து ....

கெதியறியாப் பாவிகட்கு  இந்நூல் கிட்டாது
கிருபையுள்ள  ஞானிகட்கே எய்தும் எய்தும்
பதியறிய நன்மௌன யோகி கட்கே
பரிசுத்த நூலிது தான் பதனம் பண்ணும்
விதி இல்லை என்றெண்ணாதே நூலைத்தேடு
விண்டு  மிண்டு பேசாதே வேண்டாம் வேண்டாம்
நிதி பெறுவார் உபசாரம் நீக்கிப் போடு
நினைவு கொண்டு சூத்திரத்தின் நிலையைப்பாரே!

ஞானமார்க்கம் நாட்டமுள்ளவர்கள் மட்டும் குரு முகமாய் அறிந்து கொள்வதற்காக  பெரியோர்கள் பாடி வைத்தனர் என்றும் எல்லாருக்கும் பொதுவாக அவர்கள் தம்முடைய நூல்களை இயற்றவில்லை என்று புலப்படுகிறது.

திங்கள், 10 ஜனவரி, 2011

வாசியைப்பற்றி நான் கொள்ள இருக்கும் ஆய்வு..

வாசியைப்பற்றி நான் கொள்ள இருக்கும் ஆய்வுக்கு பதினெண் சித்தர்களும் துணை என்று என் வாழ்கையை அவர்களின் கமலபாதங்களுக்கு சமர்பிக்கிறேன்.
ஆய்வுக்கு கொள்ள இருக்கும் நூல்களில் குருப்பிடதக்கவை . காகபுசன்டரின் பெருநூல் காவியம் மற்றும் அகத்தியரின் நூல்களில் சில. 
என்னும் ஓரிரு தினங்களில் இந்த சேவையை நான் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன் . குருவருளினால் இது அனைவருக்கும் போய் சேரும் .

என்றும் சிவனடிமை(குருவருளால்)- பாலா -சென்னை .

புதன், 5 ஜனவரி, 2011

யோகம்(வாசி) செய்ய வேண்டிய நேரம்..

காகபுசன்டரின் பாடலில் யோகம்(வாசி) செய்ய வேண்டிய நேரத்தைப்பற்றி ....

அக்கினியே  மூலதழல்  நெருப்பைக்கண்டு
அசைவாசி மேலெழும்ப யோகநித்திரை
மக்கினியே வயர்நிறைய அன்னமுண்டு
மந்ததத்தால்  மூலஅனல் அபனாமாச்சு
தக்கினியே யபாணவாய் வாடாமற்றான்
தாதுநஷ்டி  பிலப்படுவும் உச்சிநோக்கு
சொக்கினிய ராக்காலம் மல்லாந்தேதான்
துடர்வாசி பார்த்திடவும் நடுவேபாரே .

செவ்வாய், 4 ஜனவரி, 2011

காகபுசண்டரின் பெருநூல் காவியம் 1000 -ல் யோகியின் நிலை

யோகிதான் ஞானபதம் பெற்றுமேலே
உறவினர்போலே இருப்பார் விருந்துண்பார்போல்
யோகிதான் வருங்கால மெடுத்துரைப்பார் 
ஊணுறக்க மின்பதுன்ப மொத்திருப்பார்
யோகிதான் ஞானபதம் மேலேயோகம்
உற்றமனம் பட்டதனால் யோகவானாம்
யோகிதான் யோகவான் சித்தஞானி
உறமான ரிஷியிவனும் முனியாவானே