வியாழன், 8 டிசம்பர், 2011

கார்த்திகை தீபவாழ்த்துகள்...

அன்புள்ள சித்தஉள்ளங்களுக்கு ,

நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. 
எனக்கு பணியில் சிறிது இடமாற்றம் ஏற்பட்டுள்ளதால் தங்களை சந்திக்க முடியவில்லை, தினந்தோறும்    காலை 3 மணி நேரம் பயணம் செய்து அலுவலகத்திற்கு செல்வதும் அதற்குபின் 10 மணி நேரம் அலுவலக
வேலை பார்ப்பதும் ,பின் 3 மணி நேரம் பயணம் செய்து வீட்டுக்கு திரும்ப வேண்டியாகி உள்ளது. 

இருப்பினும் இதுவும் அந்த ஆதி சித்தனின் வேலையாக தான் இருக்கும் . நடப்பது நன்மைக்கே என்ற கோட்பாட்டில் மீண்டும் எழுத முயற்சிக்கிறேன்.

இன்று கார்த்திகை தீபம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த கார்த்திகை தீபவாழ்த்துகள்.

திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம் போல உங்கள் மனதிலும் ஆன்ம ஜோதியை ஏற்றுங்கள் . இறையருள் பெறுங்கள் .

நெஞ்சறி விளக்கம் -10

வீட்டிருள் போகவென்றே விளக்கினை ஏற்றி வைத்தால்
வீட்டிருள் எங்கே போச்சு விளக்கொளி எங்கே போச்சு
கூட்டினுள் நடஞ்செய் ஈசன் குறிப்பறியாமல் நீதான்
நாட்டினுள் அலைந்தால் நாகை நாதரை வணங்கு நெஞ்சே ..


http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

செவ்வாய், 22 நவம்பர், 2011

நெஞ்சறி விளக்கம் 1 -5

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
     
கணபதி தாசர் அருளிச்செய்த  நெஞ்சறி விளக்கம் 1 -5 

விநாயகர் காப்பு

வஞ்சக மனத்தினாசை மாற்றிய பெரியோர் தாளில்
கஞ்சமா மலரிட் டோதுங் கணபதி தாசன் அன்பால்
நெஞ்சறி விளக்க ஞான நீதிநூல் நூரும்பாடக்
குஞ்சர முகத்து மூலக் குருபரன் காப்ப தாமே .

பாடல் : 1
பூமியிற் சவுந்தர ப்பெண் புணர்ந்திடு நாகை நாதர்
நாமெந்  நாளும் நாவினவின்று செந் தமிழாற் பாடிக்
காமமு மாசா பாசக் கன்ம முமகற்றி மூல
ஓமெனு மெழுத்தை ந்தாலே யுனையறிந்துணர்வாய் நெஞ்சே..

பாடல்: 2 
தந்தை தாய் நிசமுமல்ல சனங்களும் நிசமுமல்ல
மைந்தரும் நிசமுமல்ல மனைவியும் நிசமுமல்ல
இந்தமெய் நிசமுமல்ல இல்லறம் நிசமுமல்ல
சுந்தர நாகை நாதர் துணையடி நிசம்பார் நெஞ்சே..

பாடல் :3 
காண்பது மழிந்துபோகும் காயமு மழிந்துபோகும்
ஊண்பொருள் அழிந்து போகும் உலகமும் அழிந்து போகும்
பூண்மணி நாகை நாதர் பொற்பாதம் அழியாதென்று
வீண்பொழு தினைப்போக்காமல்  வெளிதனில் ஒளிபார் நெஞ்சே.

பாடல் :4 
மனமெனும் பேயினாலே மாய்கையாம் இருடான் மூடச்
சனமெனும் ஆசா பாசந் தலைமிசை ஏற்றிக் கொண்டு
கனமெனுஞ் சுமையைத் தூக்கிக் கவலையுற்றிட்டாய் நீயும்
பனமெனும் நாகை நாதர் பதம்பணிந் தருள்சேர் நெஞ்சே ..

பாடல் : 5 

இருவினைப் பகுதியாலே எடுத்திந்தத் தேகந்தன்னை
மருவிய நானான் என்று  மாயையில் அழிந்தாய் நீதான்
குருவினாற் குறியைப்பார்த்துக்  குண்டலி வழியே சென்றங்கு
உருவினால் நாகை நாதர் உண்மையை  உணர்வாய் நெஞ்சே ..


விளக்கம் :

ஓமெனும் எழுத்துடன் ஐந்தெழுத்து மந்திரத்தை சேர்த்து செந்தமிழால் தினந்தோறும்
மனதில் தோன்றும் ஆசாபாசங்களையும் காமத்தையும் கன்மத்தையும் அகற்றி நாகை நாதரின்
பாதத்தை நெஞ்சினால் உணர்ந்து அவர் பாதம் சரணடையவேண்டும் .

இவ்வுலகில் நிலையானவர் யாரென்று இரண்டாம் பாடலில் கூறியுள்ளார் . நம்மை ஈன்ற பெற்றோர்களும் ஒரு நாள் இறந்து போவார்கள் , நாம் ஈன்ற மக்களும் ஒரு நாள் அழிந்து போவார்கள் . நம்முடன் வாழ்ந்து நமது வம்சத்தை விருத்தி செய்யும் மனைவியும் ,ஏன் நமது இந்த உடலும் கூட ஒரு நாள் அழிந்து போகும்  ஆனால் நாகை நாதரின் துணை ஒரு நாளும்
அழிந்துபோகாது  என்று கூறுகிறார்.  இது உண்மையும் கூட நமது சித்தர்கள் கட்டிய கோவில்கள் இன்றும் நிலைத்து நிற்க தான் செய்கிறது.

தொடரும் .....
     

http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

திங்கள், 21 நவம்பர், 2011

கணபதி தாசர் எழுதிய நெஞ்சறி விளக்கம்....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

கணபதி தாசர் எழுதிய நெஞ்சறி  விளக்கம்....

இந்த சித்தரைப்பற்றிய வாழ்க்கை விபரம் ஒன்றும் எனக்கு தெரியாது . இருப்பினும் இவர் நாகை நாதரின் மீது அளவு கடந்த பக்தி கொண்டுள்ளதாக பாடல்இயற்றப்பட்டுள்ளது . இதன் மூலம் இவர் நாகை  அருகே வசித்து இருக்கலாம் என நான் கருதுகிறேன் .  இவரைப்பற்றிய விபரம் எவருக்காவது தெரிந்து இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் .

இவர் எழுதிய நெஞ்சறி விளக்கம் 100  பாடல்களை படிப்பதால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பின்வரும் பாடல் மூலம் நம்மால் காணமுடிகிறது.

நூற்பயன் :

கதிதரும்மூலா  தாரக் கணபதி தாசன் சொன்ன
நிதிமணி மாலை யான நெஞ்சறி விளக்கம் நூறும்
துதிசெயும்  அறிவோர் ஞான சோதியின் வடிவமாக
மதியணி நாகை நாதர் மலர்ப்பாதம் பெற்று வாழ்வார் .

நித்தியப் பொருள தான நெஞ்சறி விளக்கம் நூறும்
பத்தியாப் மனத்தில் எண்ணிப் படித்ததன் பயன் காண்போர்கள்
முத்தி மெய்ஞானம் பெற்று மூவர்க்கும் முதல்வராகிச்
சத்தியுஞ் சிவமுந் தோன்றுந் தற்பர மதனுட் சார்வார்

கனகமார் மணிசேர் மூல கணபதி தாசனாக
நினைவினா லறிகட்செப்பும் நெஞ்சறி விளக்கம் நூறும்
வினவியே படிப்போர் கேட்போர் வினையெல்லாம்  அகன்று மெய்யுற்
பணமெனும்   மோட்ச நாலாம் பதம்பெற்றுப் பதத்துள் வாழ்வார் .


வரும் நாட்களில் அவர் இயற்றிய நூறு பாடல்களில் சிலவற்றை நாம் காணலாம்.

  http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

வியாழன், 27 அக்டோபர், 2011

பதினெண்பேரை காணும் மந்திரம்...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
    
"பதினெண்பேரை காணும் மந்திரம்" என்றதும் நமக்கு ஞாபகம் வருவது நமது பதினெட்டு சித்தர்களை தான் அதில் நமக்கு எந்தளவும் சந்தேகம் இல்லை.  இருப்பினும் இந்த பதினெட்டு என்பதில் பலவித கருத்துகள் உள்ளன.  இவற்றை கடந்தவர்கள் தான் சித்தர்கள் என்று ஒரு சாரர் கூறுவார். ஆகையால் தான் ஐயப்பசுவாமிக்கு பதினெட்டு படிகள் அமைத்தனர் . இந்த பதினெட்டு படியின் தன்மையை உணர்ந்தால் தான் ஐயப்ப சுவாமி போல் மரணமில்லா பெருவாழ்வை நம்மால் அடையமுடியும் என்ற தத்துவத்தை தான் நமது மூதாதையார்கள் செய்துவிட்டு போயிருக்கிறார்கள். ஆனால் அதனை உணர்ந்தவர்கள் வெகு சிலரே இவ்வுலகில் உள்ளனர்.

தமிழர்களின் ஞான பொக்கிஷமான ஞானக்கோவையில் இருந்து பதினெட்டு சித்தர்களை தரிசிக்கும் முறையை நிஜானந்த போதம் பின்வருமாறு கூறுகிறது.

நிஜானந்த போதம் : 41 

செய்ததமிழ் தனையறிந்து  பதினெண் பேரைச்
   செம்மையுடன் காண்பதற்கு மூலங் கேளு
சைதன்ய மானதொரு தன்னைப் போற்றிச்
   சதாகாலம் ஓம் சிங்ரங் அங்சிங் கென்று
மெய்தவறாப் பூரணமா யுருவே செய்தால்
   வேதாந்த சித்தரைத்தான் வசமாய்க் காண்பாய்
உய்தமுடன் அவர்களைத்தான்  வசமாய்க் கண்டால்
   உத்தமனே சகலசித்துக் குதவியாமே...


"ஓம் சிங்ரங் அங்சிங் " -என்று குறிப்பிட்டு உள்ளார்கள் .

முயற்சித்து பார்ப்போம் சித்தர்களை காண. ....

 
என்றும்-சிவனடிமை-பாலா.

புதன், 26 அக்டோபர், 2011

அனைத்து உள்ளங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  ,

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ....

இத்திருநாளில் மனதில் உள்ள  அனைத்து தீய எண்ணங்களையும் சுட்டெரித்துவிட்டு நல்ல எண்ணங்களுடன் ஒரு இனிய வாழ்க்கையை தொடருங்கள் .

உங்களால் மனதில் உள்ள தீய எண்ணங்களை குறைக்கமுடியவில்லைஎன்றால் பதிநென்மர் சித்தர்களின் பாதங்களை இத்திருநாளில் சரணடையுங்கள் .

குரு யாரென்று தெரியாதவர்களுக்கும் ஆன்மிகம் என்றால் என்ன என்று தெரிய விரும்புவர்களும் சற்குரு அகத்தியரின் பாதங்களை சரணடையுங்கள் .

அவரை அடைய விரும்பும் உள்ளங்கள் கீழ்வரும் மந்திரங்களை கூறலாம் .

சத்தியமே அகத்தியம் ,அகத்தியமே சத்தியம் .

ஓம் அகத்தியரே போற்றி ஓம் .

ஓம் குருமுனியே போற்றி ஓம்

குருநாதரின் காயத்ரி மந்திரம் ..

ஓம் தத்புகுஷ்யா வித்மஹே
லோபமுத்ரா சமேதாயே தீமஹி
தன்னோ அகஸ்திய ப்ரோசோத்யாத்..

ஓம் அகத்தீசாய வித்மஹே
பொதிகை சஞ்சார தீமஹி
தன்னோ ஞானகுரு ப்ரோசோத்யாத்.


மேற்கண்ட மந்திரங்களை தினந்தோறும் 108 முறை காலையும் ,மாலையும்  செபிப்பவர்களுக்கு வேண்டும் வரங்களை அள்ளி தருவார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.  இது அனுபவ வாக்காகும்.

கடந்த பதிவில் கூறிய கதவு என்பது லலாட கதவாகும். வாசி பயிற்சியை கொண்டு அந்த கதவினை திறந்தால் மரணமில்லா பெருவாழ்க்கையை நம்மால்  அடைய முடியும் என்பது சித்தர்களின் கூற்றாகும் . இதனைப்பற்றி காகபுசண்டர் தமது பெருநூல் காவியம் -1000 த்தில் வெகு தெளிவாக கூறியுள்ளார்.


 http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

வியாழன், 20 அக்டோபர், 2011

குரு என்பவர் யார் ?

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  ,

குரு என்பவர் யார் ? என்ற கேள்வியை பார்க்கும்போதே எனக்கு தலை சுற்றுகிறது. எனக்கு தெரிந்த கருத்துகளை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

யாரையும் நாம்  தரக்குறைவாக  பேசக்கூடாது . ஏனென்றால் நமக்கு தெரிந்த விசயங்களை விட நமக்கு தெரியாத விஷயங்கள் தான் இவ்வுலகில் அதிகம் உள்ளது.

இதை தான் அவ்வை அம்மையாரும் அழகாக கூறுவார் //கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு //.

பொதுவாக நதிமூலம் ரிஷி மூலம் பார்க்க கூடாது என்று கூறுவார்கள் . இதற்க்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தினை கூறுவார்கள் .  நதி என்பது மலைகளில் தோன்றி பல நாடு நகரங்களை வளம் கொழிக்க வைத்துவிட்டு இறுதியில் கடலில் கலக்கிறது.
மலையில் அதன் குணம் மூலிகை நிறைந்ததாக இருக்கும் . நகரங்களில் அது மாசுப்பட்டு இருக்கும் இறுதியில் எப்படி இருக்கும் என்பதை நம்மால்  கணிக்க முடியாது.

இதனை ஏன் ரிஷிகளுடன் ஒப்பிட்டு பார்த்தார்கள் என்று பார்த்தால் நமக்கு ஆச்சர்யமாக தான் இருக்க செய்கிறது .   ஒருவன் எப்படி வாழ்ந்தான் ?எப்படி வாழ்ந்து கொண்டு இருக்கிறான் ? எப்படி வாழ்வான் ? போன்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தாலே போதும் ரிஷி என்பது என்னவென்று புரியும் .

நதி -பாரபட்சமின்றி எல்லா இடத்தில் பாய்ந்து அனைவரையும் வாழ வைக்கும்.
ரிஷி -பாரபட்சமின்றி எல்லா மக்களையும் நேசித்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவேண்டும்.

இவ்வுலகில் எல்லாரும் கூறும் மந்திரம் ...

       மாதா பிதா குரு தெய்வம்.- இதனை எந்த மதத்தினாராலும் மறுக்க முடியாது.

மாதா -இவ்வுலகில் நம்மை முதலில் அறிமுக படுத்துபவள் .
பிதா  -இவ்வுலகில் நமக்கு வெளியுலக வாழ்க்கையை அறிமுக படுத்துபவர் .
குரு   -இவ்வுலகில் தெய்வம்/வாழ்க்கை  என்ற தத்துவத்தை விளக்குபவர் .
தெய்வம் - குருவின் அருளோடும் துணையோடும் தெய்வத்துடன் ஒன்றி போதல் .

//ஒன்றும் இல்லாத பரவெளியே தெய்வம்//

ஆகையால் தான் இவ்வுலகில் பிறக்கும் எல்லாரும்  முதலில் அம்மா என்றும் பின் அப்பா என்றும் கூறி பிற்காலத்தில் படிக்கும் காலத்தில் ஐயா என்று வணங்கி இறுதியில் சிவசிவ என்றோ கோவிந்தா என்றோ வாழ்க்கை முடித்து கொள்கிறோம்.
அம்மா -> அப்பா -> ஐயா ->இறைவா
மேற்கூறியதில் ஒன்று குறைந்தாலும் கூட நமக்கு சிக்கல் தான் .

நமது வாழ்க்கை எப்படி ஒத்து போகிறது என்று நீங்களே பாருங்கள் . இதில் இடையில் வரும் "குரு " என்பது தான் பிரச்சனையே . எப்படி இந்த பிரச்னையை சமாளிப்பது என்பது தான் மதி.

கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகளை நினைத்து பெற்றோர்கள் அஞ்சுவார்கள் ஏனென்றால் ரெண்டாம்கெட்ட வயசு என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என்று .  அதுபோல தான் குருவை தேர்ந்து எடுப்பதிலும் நமக்கு நிறைய பயம். என்னவேண்டுமானாலும் நடக்கலாம்.

இன்று எந்த செய்தித்தாளை எடுத்தாலும் போலி சாமியார்கள் கைது , கற்பழிப்பு வழக்கு , கொலை வழக்கு போன்ற செய்திகள் தான் நமது கண்களில் படுகிறது.  அப்படி இருக்க எப்படி உண்மையான குருவினை எப்படி  கண்டுபிடிப்பது ? ரொம்ப கஷ்டமான கேள்வி .

"கதவை திற காற்று வரட்டும் "- என்ற வார்த்தையில் பல அர்த்தங்கள் உண்டு. இதில் எந்த கதவு என்பது தான் பிரச்சனையே !. ஆக மொத்தம் கதவை திறக்க வேண்டும்.

நாளை திறக்கலாம் ...


http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

புதன், 19 அக்டோபர், 2011

தமிழ் மந்திரங்களின் தொடர்ச்சி...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

தமிழ் மந்திரங்களின்  தொடர்ச்சி..

தமிழ் மொழியின் தொன்மையை உணர்ந்தவர்கள் சாகாவரம் பெற்றவர்கள் ஆவார்கள் .
தமிழ் மொழியில் உள்ள உயிர் எழுத்துகள் மற்றும் மெய் எழுத்துகளை தெரிந்து கொண்டு அதனுடன் "ம் " மற்றும் "ங்" போன்ற எழுத்துகளை(பீஜங்கள்)  சேர்த்து கொண்டு உச்சரிக்கும்போது பலவித சித்திகளும் ,முக்தியும் கிடைக்கும் என பிருகு முனிவர் கூறுகிறார்.

முதலில் "அம்" என்று செபம் செய்து ,பிறகு "ஆம்" என்றும் ,"இம்", "ஈம்" ,"உம்", "ஊம்","எம்",
"ஏம்","ஐம்", "ஓம்", "ஔம்" என்றும் பதினோரு வகையான உயிர் பீசங்களை தனித் தனியாக
செபம் செய்யவேண்டும் . மனதிற்குள் செபித்தால் தான் மந்திரத்திருக்கு பலன் அதிகம் .
இவ்வாறு ஒவ்வொரு மந்திரத்தையும் மனதிற்குள் ஒரு லட்சம் முறை கூறவேண்டும் என கூறுகிறார். 

பிறகு மெய் எழுத்துகளுடன் "ங்" பீஜத்தை சேர்த்து கொண்டு செபிக்கவேண்டும் எனவும் கூறுகிறார்.  முதலில் "கங்" என்றும், பிறகு தொடர்ச்சியாக எல்லா மெய் எழுத்துகளுடன் இந்த பீஜத்தை சேர்த்து லட்சம் முறை செபிக்க வேண்டும் என கூறுகிறார்.


உதாரணமாக :
முதலில் "ஓம்"  பிறகு "அம்" இறுதியில் "நம:" என்று உச்சரிக்கலாம் .
"ம்" பீஜத்தை சேர்த்து மந்திரம் கூறும் முறை ..
"ஓம் அம் நம: "-என்று உச்சரித்தால் சித்தி கிடைக்கும்.
"ங்" பீஜத்தை சேர்த்து  மந்திரம் கூறும் முறை ..
 "ஓம் அங் நம: " என்று உச்சரித்தால் முக்தி கிடைக்கும்.

நமக்கு சித்திகள் வேண்டும் என்றால் "ம்" பீஜத்தையும் முக்தி வேண்டுமென்றால் "ங்" பீஜத்தையும் சேர்த்து உச்சரித்து பலன்களை பெறலாம் என்று கூறுகிறார்.

இவ்வாறு பீசங்களை செபிக்கும்போது மைவிழியாள் போகத்தை நிறுத்த வேண்டும் என கூறுகிறார் இவ்வாறு செய்தால் அறுபத்து நான்கு வகையான சித்திகளும் நிச்சயம் கிடைக்கும் என கூறுகிறார்.

சில முக்கிய தமிழ் மந்திரங்கள் உங்களுக்காக....
ஓம் அம் நம: -சித்து விளையாடும் தன்மை கிடைக்கும்,மரணத்தை வெல்லலாம் . 
ஓம் அங் நம: -முக்தி வழியான ஞானம் கிடைக்கும்

ஓம் ஆம் நம:- நினைத்தை வரவழைக்கும் ஆகர்ஷண தொழில் சித்தியாகும்.
ஓம் இம் நம: -உடல் புஷ்டி ஆகும்.
ஓம் ஈம் நம: -சரஸ்வதியின் கடாட்சம் கிடைக்கும் .
ஓம் உம் நம: -சகல தொழிலுக்கும் பலமுண்டாகும்.
ஓம் ஊம் நம:-உச்சாடன தொழில் சித்தியாகும்.
ஓம் எம் நம: சத்வ குணம் உண்டாகும்.
ஓம் ஏம் நம:-சர்வமும் வசியமாகும்.
ஓம் ஐம் நம:- ஆண்களை வசியபடுத்தும்.
ஓம் ஓம் நம: வாக்கு பலித சித்தி உண்டாகும்.
ஓம் ஔம் நம: - வாக்கில் ஒளி உண்டாகும்.

பிருகு முனிவரின் அருள்(உங்களுக்கு ) இருந்தால் மேற்கூறிய மந்திரங்களை  உச்சரித்து
பலன்களை பெறவேண்டுகிறேன்.


என்றும்-சிவனடிமை-பாலா.

திங்கள், 17 அக்டோபர், 2011

தமிழ் மந்திரங்களை உச்சரிக்கும் முறை ...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

மந்திரத்தைப்பற்றிய ஆராய்ச்சியில் இறங்கிய என்னால் பதிவுலகத்தை பற்றிய 
சிந்தனை கூட வரமுடியாத  அளவுக்கு ஆகிவிட்டது. 

தமிழ் மந்திரங்களை பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியபோது  எமது வர்மானிய  நண்பர் ஒருவரை சந்திக்க நேரிட்டது . அவர் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர் என்பதால் அவருக்கு தமிழ் மந்திரம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்று நினைத்து  கொண்டேன். பிறகு உரையாடி கொண்டு இருக்கும் போது தமிழில் உள்ள மந்திரங்கள் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா என்று வினவினேன் . 

அவர் சித்தர்கள் காட்டிய வழியில் வாழ்ந்து கொண்டு இருப்பவர் .  அவர் சிரித்து கொண்டு தமிழ் மொழியை  தெரிந்து கொண்டவனுக்கு இறப்பு என்பதே கிடையாது என்று கூறினார்.  இதை என்னால் நம்ப முடியவில்லை . இருப்பினும்   நான் அனுமார் மந்திரம் ஒன்றினை ஆராய்ச்சி செய்து கொண்டு இருப்பதாக அவரிடம்  கூறினேன்.   என்னை பொறுத்த வரை அவர்க்கு எந்த மந்திரமும் தெரியாது என்ற எண்ணத்தில் கூறினேன் . அவர் என்னை பார்த்து அந்த மந்திரத்தை கூறும்படி சொன்னார் . 

நான் அந்த மந்திரத்தை சொல்ல  ஆரம்பித்தேன் அவ்வளவு தான் அதற்குள் அவரிடம் ஒரு மாற்றம் ஏற்பட்டு  பட பட வென்று  அந்த மந்திரத்தை கூறிவிட்டு அதனை உச்சரிக்கு்ம் முறையையும் அதன் பலனையும் கூறினார் .
என்னால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை . 

ஒரு வாரம் காலமாக நான்  அதைப்பற்றி சிந்தனையில் இருந்து கடைசியில் ஒரு கிறித்துவர்  மூலமாக அதன்  உட்கருத்தை தெரிந்து கொண்ட போது சித்தர்களின் வல்லமையை நினைக்கவே ஆச்சர்யமாக இருந்தது. 

அவர் சித்தர்களை பற்றி கூறும்போது
 " மனிதர்களுக்காக என்றும் வாழ்ந்த கொண்டு இருப்பவர்கள் "" -
"மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் ", 
"சாதி மதங்களை வெறுத்தவர்கள் ",
"புற சடங்குகளை ஒதுக்குபவர்கள் (மூடநம்பிக்கைகள் ) 
 என்று "சொல்லி எங்களை ஆச்சர்ய்படுத்தினார் . 
இன்றும் நோயால் வாடும் பல மக்களுக்கு மூலிகை வைத்தியத்தை இலவசமாக செய்து வருகிறார். 
 குறிப்பாக புற்று நோயால் வாடும் மக்களுக்கு சிறந்த மருத்துவத்தை அளித்து வருகிறார்.  

பிறகு என் மந்திர ஆராய்ச்சியை சொன்ன போது தமிழ் மொழியை உச்சரிக்க கற்று கொள் என்று கூறி சில மந்திரங்களை கூறினார். அவர் கூறிய மந்திரங்களும் பிருகு முனிவர் கூறிய மந்திரங்களும் ஒன்று போய் இருந்தது .

அவற்றில் சில  உங்களுக்காக..

பிருகு முனிவர் பாடல் : 41 

பாரப்பா அகரத்தை முந்தி நாட்டு
     பகடில்லை  ஆகாரம் பின்னே நாட்டே 
சேரப்பா இகாரத்தை செபிப்பாய் பின்னே 
    செயமான ஈகாரம் உகாரம் கேளு  

மாரப்பா ஊ -எ -ஏ-ஐ-ஒ -என்று 
    மகிமையுள்ள  ஔம் தனிலே முடித்துப்போடு 
காரப்பா பீசமிவை பதினொன்றாகும் 
   கண்மணியே இதைக்கடந்து மெய்யை நோக்கே ..

இதற்க்கான விளக்கத்தை நாளைய பதிவில் காணலாம் ...

என்றும்-சிவனடிமை-பாலா.

வியாழன், 22 செப்டம்பர், 2011

மந்திரத்தைப்பற்றி ஒரு அலசல் ,

அன்புள்ள  சித்த உள்ளங்களுக்கு ,

மந்திரம் என்றால் என்ன ? என்ற கேள்விக்கு பொருள் கூறுவது கொஞ்சம் கடினமாக தான் இருக்கிறது. இருப்பினும் என் சிற்றறிவுக்கு எட்டியதை இங்கு பகிர்கிறேன்.

என் குருநாதர் அகத்தியர் சொல்கிறார் .

  "மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம் . "

இந்த வரிகளை பார்க்கும் போது நமக்கு எதுக்கு வம்பு என்று மந்திரம் செபிக்காமல்  ஒதுங்கி கொள்வதும் உண்டு. ஏனென்றால் மனம் எங்கே இருக்கிறது என்பதை சொல்வதற்கு யாருமில்லை அப்படி இருந்தாலும் அந்த மனதை செம்மையாக எப்படி வைத்து கொள்வது என்பதற்கான பயிற்சி முறையை யார் தான் நமக்கு கற்றுகொடுப்பார் என்ற எண்ணமும் என் மனதில் ஏற்பட்டதுண்டு .

ஆகையால் முதலில் மனம் என்ற சொல்லை ஆராய்ந்து  பின்   மந்திரத்தை பற்றி ஆராய்ச்சி செய்யலாம் என்ற எண்ணத்திற்கு வந்து விட்டேன்.  மற்றும் பொருள் தெரியாமல் கூறும் மந்திரத்தால் பயன் எதுவும் இல்லை என்ற எண்ணத்தினால் பொதுவாக சமஸ்க்ருத மொழியில் உள்ள மந்திரங்களை நான் படிப்பதும் இல்லை உபயோகிப்பதும் இல்லை .ஏனெனில் மந்திரங்களை தவறாக கூறினால் அதற்க்குண்டான விளக்கம் மாறி நாம் கூறும் மந்திரம் நமக்கே திரும்பி வந்து விடும் என்ற எண்ணமும் எனக்கு  உண்டு.( சமஸ்க்ருத மொழிக்கு எதிரிகள் நாங்கள் அல்ல .ஏனென்றால் அதன் பலன் ,சூட்சமம் ,அதனை உச்சரிக்கும்  முறை  போன்றவற்றை   எல்லாருக்கும் கிடைக்காமல் சிலர் செய்துவிட்டார்கள் )

மந்திரங்களை செபித்தால் ஏற்படும் பலன்கள்  மிக அதிகம் என்று பல நூல்களில் நமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள் . அப்படி இருக்க நமது ஆலயங்களில் தினந்தோறும் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்கள் அனைத்துவித பலன்களையும் பெற்றவர்களாக தானே இருக்கவேண்டும்.  அதற்கு மாறாக அவர்களும் நம்மை போலவே தான் வாழ்ந்து வறுமையில் உழல்கிறார்கள்.

பொதுவாக சிவன் கோவில் அர்ச்சகரை பார்த்தாலே தெரியும் அவருடைய உடலில் உள்ள எலும்புகள் தெரியும் அளவிருக்கு ஒல்லியாக இருப்பார்கள் . இதருக்கு மாறாக பெருமாள் கோவில் உள்ள அர்ச்சகரை பார்த்தால் நன்று  வாட்ட சாட்டமாக கழுத்தில் தங்க நகை தொங்கும் அளவிருக்கு வசதி படைத்தவர்களாக இருப்பார்கள்(பொதுவாக) .

இதற்க்கு காரணம் என்ன ? என்று வினவினால் பதில் சொல்வது கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கிறது.   இதற்க்கு மந்திரமும் ஒரு காரணமாக இருக்கலமா என்ற எண்ணமும் எனக்கு தோன்றுகிறது .

சிவனை கும்பிட்டால் முதலில்  ஞானம் கிடைக்கும் பின் சித்தி அதற்குபின் முக்தி கிடைக்கும். ,
பெருமாளை கும்பிட்டால் பொன்னும் பொருளும் கிடைக்கும் பின் முக்தி கிடைக்கும்.
ஆக மந்திரங்கள் மனிதனின் வாழ்வில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற எண்ணத்திருக்கு
நாம் வந்து தான் ஆகவேண்டும்.

அன்பு சித்தரை( இயேசு கிறிஸ்து ) வழிபடும் மக்களும் எல்லா நன்மைகளையும் பெற்று நன்றாக தான் வாழ்ந்து வருகிறார்கள் . நமது தமிழகத்தில் உள்ள எல்லா தேவாலயங்களிலும் அழகான தமிழ் மொழியிலே தான் திருப்பலியை அவர்கள் நடத்துகிறார்கள் .

"அல்லா' -வை வழிபடும் முகமதிய மக்களும் சீரும் சிறப்பாக தான் வாழ்ந்து வருகிறார்கள் .
அப்படி இருக்க மந்திரங்கள் எப்படி அவர்களுக்கு உதவி செய்யும்.  அவர்கள் உருது மொழியில் அல்லவா இறைவனை வழிபடுகிறார்கள் .

உலகில் கடவுள் என்றால் என்ன என்று தெரியாத மக்களும் பல நாடுகளில்(ஆப்ரிக்க) வாழ்ந்து வருகிறார்கள் . அப்படி இருக்க மந்திரங்களை நாம் எப்படி கண்டு பிடித்தோம் ,யார் கண்டு பிடித்தார்கள் என்ற விபரமும் நம்மிடம் இல்லை(அதிகாரபூர்வமாக ).

இதன் மூலம் இறைவனை அடைவதற்கு பல மொழிகளில் பல வகையான மந்திரங்கள் உள்ளது என்ற முடிவிற்கு நம்மால் வர முடிகிறது. 

நமக்கு தெரிந்த தாய் மொழியில் இறைவனை வழிப்பட்டால் போதும் என்ற எண்ணத்திற்கு  நான் வந்து விட்டேன். 

இருப்பினும் சித்தர்களின் பார்வையில் இந்த கருத்தை எடுத்து வைப்பது கொஞ்சம் கடினம் தான்.

மந்திரங்களினால் பயன் ஏதும் இல்லை என்று கூறும் சித்தர்களே பலவகையான மந்திரங்களை எழுதி அதன் பயன்களையும் நமக்கு விளக்கி உள்ளார்கள் .


அலசல் தொடரும்....

என்றும்-சிவனடிமை-பாலா.

புதன், 21 செப்டம்பர், 2011

ஞானம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் ?

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  ,

ஞானம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் ? என்று பிருகு முனிவர் பின்வருமாறு கூறுகிறார் .

பாடல் : 39 

ஆச்சப்பா இதைவென்றால் ஞானங் கூடும்
    அல்லாட்டால்  தேறுதருக்கு ஏது மார்க்கங்
காச்சப்பா கோபத்தை ஞானத்தீயால்
    கண்மணியே என்போலே  யார்தான் சொல்வார்
போச்சப்பா பிறவிதான் ஞானம் நின்றால்
     பொல்லாத பிறப்பிறப்பு மழிந்து போகும்
பாச்சப்பா மனந் தன்னை மந்திரத்தில்
    பகடில்லா சித்தி பெற்றால் தெளிவுண்டாமே !

விளக்கம் :
                    காமமும், கோபமும், மிகுந்த போகமும் மனிதனை நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும் . காமத்தையும் ,கோபத்தையும் வென்றால் ஞானமுண்டாகும் .
ஞானம் பெற்றால் பிறப்பும் ,இறப்பும்  அகலும் . எனவே காமத்தையும் கோபத்தையும் ஞானம் என்ற தீயால் சுட்டு அழித்துவிடு என்று கூறுகிறார் .

எப்படி இந்த காமத்தையும் கோபத்தையும் மனதில் இருந்து அழிப்பது என்று நீ கேட்பாயாகில் அதற்க்கான விளக்கத்தையும் ,மந்திர முறைகளையும் உனக்கு சொல்கிறேன்.  அதன் மூலம் நீ சித்தியும் முத்தியும் அடையலாம்  என்று சீடனுக்கு கூறுவதாக கூறுகிறார்.

தாம் கூற இருக்கும் மந்திரங்களை சொல்வதினால் நமக்கு கிடைக்கும் பயன்களை பின்வருமாறு கூறுகிறார் .

சகல சித்திகளும் கிடைக்கும் என்றும் ,
சரிரத்தில் திவ்வியமான ஒருவித ஒளிவுன்டாகும் என்றும்,
கர்ம வினைகளும் ,சூனியமும் ,ஏவல் , பிசாசு ,துர்தேவதைகள் போன்றவை மந்திரத்தை செபித்த மாத்திரத்திலே விலகி ஓடும் என்றும் ,
வேதாந்த பொருளான பரம்பொருள் நம் முன்னே பிரகாசிக்கும் என்றும் கூறுகிறார்.

அவர் கூற இருக்கும் மந்திரங்களை  நாளைய பதிவில் காணலாம்( உத்தரவு இருப்பின் ).


 என்றும்-சிவனடிமை-பாலா.