செவ்வாய், 26 ஜூலை, 2011

சித்தர்களின் மாந்திரிகம்...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

கடந்த இரண்டு ,மூன்று வாரங்களாக என்னால் எந்தவொரு பதிப்பினையும் பதிவு செய்ய முடியவில்லை .  சித்தர்களின் மாந்திரிகம் என்ற ஆராய்ச்சியில்  கொஞ்சம் மூழ்கியதால் பதிவுகளை செய்ய முடியவில்லை . அதே வேலை எமது  பாஸ்போர்ட் காலாவதி  ஆகிவிட்டதால் அதனை புதிப்பிக்கவே எனக்கு இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது .
 
நல்ல அனுபவங்கள் நமது அரசாங்க அலுவலகங்களில் எனக்கு கிடைத்தது  நண்பர் குருசாமி அடிக்கடி  தமது வலைப்பூவில் இன்றைய அரசியல் மற்றும் அரசாங்க அலுவலல்களில் நடக்கும் நிகழ்சிகளை குறிப்பிடுவதை  என்னால் அனுபவபூர்வமாக உணரமுடிந்தது .
 
சென்னைக்கும் திருச்சிக்கும் ஏறக்குறைய 4  தடவை செல்லவேண்டிய சூழ்நிலை ஆகிவிட்டது .இது தான் நான் பதிவுகளை  பதிவு செய்ய முடியாதற்க்கான காரணாமாகும் .  அதேவேளை இந்த குறிப்பிட்ட காலத்தில் எனக்கு மூன்று சித்தர்களின்  மாந்திரிக நூல்கள் கிடைத்தது .
 
1 ) அகத்தியரின் மாந்திரிக காவியம்
2 ) கருவூரரின் அட்டமா சித்து
3 ) பிருகு முனிவரின் மாந்திரிக அரிசுவடி.
 
இந்த மூன்று நூல்களுக்கும் விரிவுரை இல்லை . இருப்பினும் அவர்களின் கருணையால் கொஞ்சம் கொஞ்சம் என்னால் படிக்க முடிகிறது .  இன்றைய போலி சாமியார்களின் நிலை மற்றும் அவர்கள் கூறும் வார்த்தை வித்தைகளை சித்தர்கள் பாடி இருப்பதை கண்டு வியந்து போனேன் .
 
வருகின்ற  30 ஜுலை அன்று ஆடி அமாவாசை விழா  சதுரகிரியில் நடைபெற  இருப்பதால் என்னால் பதிவுகளை  பதிவு செய்ய  கொஞ்சம் கால  தாமதமாகும் என நினைக்கின்றேன்.  சித்தர்களின் தலைமையிடம் மற்றும் அனைத்து சித்தர்களும் கண்டிப்பாக வரவேண்டிய இடமும் நாளும்  அந்த நாள் ஆகும் . இந்த நிகழ்வுக்கும் அவர்களின் ஆசி இருந்தால் மட்டுமே போக முடியும் .
 
எமக்கு மாந்திரகத்தில் நம்பிக்கை கிடையாது இருப்பினும் சித்தர்களே அதனைப்பற்றி பாடி இருப்பதால் கொஞ்சம் தெரிந்து கொள்ள ஆசையாக தான் இருக்கிறது .
 
வரும் பதிவுகளில் சில பாடல்களை பார்ப்போம்.


என்றும்-சிவனடிமை-பாலா.

செவ்வாய், 5 ஜூலை, 2011

சதுரகிரியில் நாங்கள் ....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  , 

நேற்றைய தொடர்ச்சி ,

மகாலிங்கத்தின் பிறந்த நாள் அன்று இரவு என்னுடைய அனைத்து நண்பர்களையும் மற்றும் சுற்றத்தில் உள்ளவர்களை அழைத்து ஒரு சிறிய விருந்தினை கொடுத்து மகிழ்ந்தேன் .

அன்று எதிர்பார்த்த பலர் வரவில்லை அவர்களின் சூழ்நிலை அப்படி இருக்க வந்தவர்களோ மனமார மகாலிங்கத்தை வாழ்த்தினார்கள் .

அன்று இரவே நாங்கள் சதுரகிரிக்கு புறப்பட்டு விட்டோம். என் மனதில் ஒரே ஒரு ஆசை இருந்தது  என் மகனின் பிறந்த நாள் அன்று அவனுக்கு ஒரு ருத்ராட்சை வாங்கி கழுத்தில் அணிய வேண்டும் என்று.

இதனை என் மனைவியிடம் சொல்லியபோது ,மகாலிங்கம் கண்டிப்பா கொடுப்பார் கவலைபடாதிங்க என்று ஆறுதல்வார்த்தை கூறினாள்.
 நாங்கள் மதுரை வந்தடைந்துவுடன் எங்கள் சதுரகிரி வழிகாட்டி ஐயா வெங்கடேஷன் எங்களை வரவேற்றார் . அதற்குபின் அவர் இமயமலையில் இருந்து வாங்கிவந்த ஒரு அற்புதமான ருத்ராச்யை என் மகனின் கழுத்தில் கட்டினார் . அதனை கண்ட நான் ஆச்சயர்ப்பட்டு போனேன்.
 நாம் நினைப்பதை இறைவன் எவ்வகையாலவது நம்மிடம் சேர்த்து விடுகிறார் என்பதனை உணர்ந்தேன் .

அதற்குபின் சுந்தர மகாலிங்கத்திடம் சென்றபோது என் மகனை பார்த்த பூசாரிகள் அவனை பார்த்து கையெடுத்து கும்பிட்டார்கள் . பின் அவனை தூக்கிக்கொண்டு சுந்தர மகாலிங்கத்தின் அருகே படுக்க வைத்துவிட்டு அவனுக்கு ஒரு மாலையை அவன் கழுத்தில் போட்டு என்னிடம் கொடுத்தார்கள் .  எனக்கு ஒன்றுமே புரியவில்லை ,எல்லாம் அவன் செயல் என்று உணரபெற்றேன் .

பிறகு கும்பகிரி அகத்தியர் மடத்தை சேர்ந்த சித்தர்களிடம் ஆசி பெற்று அங்கு காலை உணவினை உண்டோம் . பின் சந்தன மகாலிங்கத்தை பார்க்க புறப்பட்டோம் .

அங்கும் நல்ல வரவேற்பு ,அனைவரும் மகாலிங்கத்தை வாழ்த்தினார்கள் .
 நான் அங்கு சென்று ஏறக்குறைய எட்டு மாதங்கள் ஆகிவிட்டது அவனின்றி அவன் தாள் வணங்க முடியாது என்பது போல் அவன் அருளின்றி சதுரகிரி மலை ஏற முடியாது என்பதனை நான் உணர்ந்தேன் . அன்று மாலை அருமையான அபிஷேகங்கள் நடந்தது . அதற்க்கு பின் மகாலிங்கத்திடம் என் மகனுக்காக வேண்டி கொண்டோம் .

அங்கு அபிசேகம் நடந்த போது சந்தன மகாலிங்கத்தின் முகத்தில் பல உருவங்கள் தோன்றி மறைந்ததை எங்களால்  காண முடிந்தது . நந்திக்கு ரொம்ப முக்கியத்துவம் ஏன் கொடுக்கப்படுகிறது என்ற ஞானம் எனக்கு அன்று தான்
கிடைத்தது .

பிறகு மெதுவாக மழை பெய்ய தொடங்கியது , இதுவும் ஒரு அதிசயம் தான் .
பக்தர்களின் குறையை கேட்பதில் மகாலிங்கத்துக்கு நிகர் யாரும் இல்லை .

நாங்கள் மலை ஏறும்போது என் மனைவி வெங்கட் ஐயாவிடம் கூறினாள்  , இன்னைக்கு மழை பெய்தால் நாங்க வந்தத அவர் ஏற்றுக்கொண்டு விட்டார் என்று . அதே போல் மழையும் பெய்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது .
மறுநாள் காலை என் மகனை சந்தன மகாலிங்கத்திடம் ஒப்படைத்துவிட்டேன்.

அவனை மகாலிங்கத்தின் முன் படுக்க வைத்து சித்தர்களிடம் ஒப்படைத்துவிட்டு பின் தத்து எடுத்துகொண்டோம் . இனிமேல் அவன் எங்கள் சொத்து இல்லை என்றும் இனிமேல் அவன் சித்தர்களின் சொத்து என்று கூறி  சத்திய பிரமாணம் எடுத்து கொண்டோம்.

இனிமேல் நாங்கள் வளர்ப்பு தந்தையும் தாயுமாக மகாலிங்கத்தை பார்க்கும் பொறுப்பினை சித்தர்கள் எங்களிடம் தந்து விட்டார்கள் .

பிறகு மதுரை வந்து அன்னை மீனாட்சியை தரிசினம் செய்து கொண்டோம்.
என் மகன் மதுரை கோயில் இறங்கி தானே நடக்க ஆரம்பித்து விட்டான்.
யார் கூப்பிட்டும் அவன் செல்லவில்லை அதுவும் எனக்கு ஒரு ஆச்சர்யமாக இருந்தது .

நாளைய பதிவில் இருந்து சித்தர்களின் பாடல்களையும் அதற்க்கான விளக்கத்தையும் நாம் மீண்டும் தொடருவோம் ...

 http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

திங்கள், 4 ஜூலை, 2011

மகாலிங்கத்தின் பிறந்த நாள் .....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

எனது மகனின் பிறந்த நாளுக்கு ஆசிர்வதித்த அனைத்த நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

முகம் தெரியாத உள்ளங்கள் வாழ்த்துவது என்பது உண்மையிலே மிகச் சிறந்தது. 
எவ்வித எதிர்ப்பார்ப்பையும் எதிர்பாராமல் வாழ்த்துவது அதைவிடச் சிறந்தது.

எனது மகனின் பிறந்த நாளன்று மதியம் கௌதம புத்தர் அறக்கட்டளையில் அன்னத்தானம் நடைப்பெற்றது . காது கேளாதோர் மற்றும் பேச முடியாத நிறைய குழந்தைகள் அங்கு இருக்கிறார்கள்.  அவர்கள் கூறிய நன்றி வார்த்தையும் ,அவர்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்ததையும் நான் கண்டபோது எனது இரண்டு கண்களும் குளமாகி விட்டது .

அழகான பெண் குழந்தைகள் ஆனால் பேசமுடியவில்லை இருப்பினும் மகாலிங்கத்தை(என் புதல்வன் ) தூக்கி கொண்டு அவர்கள் கொஞ்சியத்தை என்னால் மறக்க முடியாது.

அங்குள்ள முதியவர்களிடம் அவன் விளையாடியதை நினைக்கும் போது ரொம்ப சந்தோசமாக இருந்தது. அவர்களுடன் நாங்களும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவினை உண்டோம். 
வாழ்வில் மிக சந்தோசமான நாளாக அது அமைந்தது.  இந்த நிகழ்ச்சி எனக்கு ஒரு மருந்தாக (மன நோய்க்கு )அமைந்தது .

என்னை ஈன்ற என் பெற்றோர்கள் கூட என்னை கூப்பிட மனமில்லாதவர்களாக உள்ள இந்த நிலையில் யாரும் ஆதரவற்ற பிஞ்சு உள்ளங்களை பார்த்த போது எனக்கு உலகமே ஒரு மாயை என்ற தத்துவம் உணர்ந்தது.

சித்தர்களை வழிபடுவதும் அவர்களின் வாழ்வியல் பாதையில் நடப்பதும் என்பது சாதாரண விஷயம் அல்ல .

அவர்களின் வழிகாட்டுதல் படி நான் சாதி , சமயங்களை வெறுத்து கலப்பு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறேன். திருமணத்தினால்  நான் அனைத்தையும்(பெற்றோர்களை ) இழந்துவிட்டேன்.

உயிருடன் இருக்கும் என்  ஐயா மற்றும்  அம்மாவை(பெற்றோர்கள் )வாயார கூப்பிட முடியாத அளவிருக்கு நான் பாவியாகிவிட்டேன் . ஆகையால் தான்  நான் உலகில் உள்ள அனைத்து உள்ளங்களையும் ஐயா என்றும் அம்மா என்றும் கூப்பிட்டு வருகிறேன்.

பெற்ற தாயே ஆயினும் கலப்பு என்பதை விரும்பமாட்டாள் போல் இருக்கிறது.

உண்மையிலே எனக்கு சித்தர்கள் நடத்துக்கின்ற ஒவ்வொரு பரிட்சையும் வித்தியாசமாக தான் இருக்கிறது. அதில் இதுவும் ஒன்று.  இருப்பினும் அவர்களின் கருணையால் அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி அடைந்து வருகிறேன்.

இதனையே பட்டினத்தார் பின்வருமாறு கூறுகிறார்..

பிறக்கும்பொழுது  கொண்டுபோவதில்லைப்  பிறந்துமண் மேல்
இறக்கும்பொழுது  கொண்டுபோவதில்லைப்  இடை நடுவில்
குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்த தென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக்கென் சொல்லுவேன் கச்சி ஏகம்பனே ..

அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
  அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ
பிள்ளை எத்தனை எத்தனை பெண்டிரோ
   பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ
    மூடனாய் அடியேனும் அறிந்திலேன்
இன்னம் எத்தனை எத்தனை சன்மமோ
    என்செய்வேன் கச்சி ஏகம்ப நாதனே ..
  
மகாலிங்கத்துடன் சதுரகிரி சென்றதை நாளைய பதிவில் காணாலாம் ...

என்றும்-சிவனடிமை-பாலா.

செவ்வாய், 28 ஜூன், 2011

எனது மகனின் முதலாமாண்டு பிறந்த நாள்(29/06)

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

எனது மகனின் முதலாமாண்டு பிறந்த நாள் வருகின்ற புதன்கிழமை (29 /06  ) எனது இல்லத்தில் நடைபெறுகிறது .

சித்தர்  முழக்கங்களை படித்து வரும் சித்தர்களின் ஆசி பெற்ற உங்களின் ஆசிர்வாதங்களை   என்னுடைய புதல்வனுக்கு வழங்கும்படி அடியவர்களின் அடியை பற்றி வேண்டிகொள்கிறேன்.

அவருடைய பெயர் ஜெயசிவமகாலிங்கம்.

எல்லா தடைகளையும் உடைத்தெறிந்து முழுக்க முழுக்க சதுரகிரியின் சந்தனத்தில் விழைந்தவர் .

அவர் அவதரித்தே ஒரே சுவாரஷ்யமான கதை தான். அதைப்பற்றி வரும் நாள்களில் பகிர்ந்து கொள்கிறேன்.  இப்புவியில் ஜனனம் எடுப்பதற்கு முன்பே சித்தர்களின் ஞான கோவையை முழுவதும் அறிந்தவர்.

உங்களின் பூரண ஆசிகளை மனமார எதிர்ப்பார்க்கும் .....


நாளை மதியம் பெரம்பலூரில் உள்ள  கௌதம புத்தர் அறக்கட்டளையில் இருக்கும் காது கேளாதோர் மற்றும் முதியோர்களுக்கு அன்னத்தானம் நடைபெறும்.

இது விளம்பரத்திற்கு அல்ல , அவர் அவதரித்தருக்கு பின் தான் என் வாழ்வில் நிறைய மாற்றம் ஏற்பட்டது அதில் இதுவும் ஒன்று ..

என்றும்-சிவனடிமை-பாலா.

வியாழன், 23 ஜூன், 2011

பட்டினத்து அடிகளின் பூரணமாலை தொடர்ச்சி 61-->102

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு , 

இன்றைய பதிவுடன் பட்டினத்து அடிகளின் பூரணமாலை முற்றுபெறுகிறது . இதற்க்கான விளக்கம் கூடிய விரைவில் வரைய முயற்ச்சிக்கிறேன் .  இதுகாறும் இப்பதிவினை படித்து வந்தும், பலருடன் இதனை பற்றி பேசியவர்களும் நிச்சயம் கூடிய விரைவில் ஞானத்தை பெறுவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை .
உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளிலும் இறைவன் நீக்கமற நிறைந்துள்ளார் என்பதை தான் பின்வரும் பாடல்கள் கூறுகிறது. 

இறைத்தன்மையை  அகத்திலும் புறத்திலும் காண முயலுங்கள் . இதுவே ஞானத்தின் ஆரம்பம்.
 61 ) வானில் கதிர்மதியாய் வளர்ந்த பின் ஒன்று ஆனது போல்
         ஊன் உடலுக்குள்ளிருந்த உயிர்ப்பறியேன் பூரணமே !

 62 ) பொய்யும் புலையும் மிகப்பொருந்தி வீண் பேசலின்றி
         ஐயோ உனை உரைக்க அறிகிலேன் பூரணமே !

 63 ) நிரந்தரமாய் எங்கும் நின்று விளையாடினதைப்
        பரம் அதுவே எனைப் பதம் அறியேன் பூரணமே !

 64 ) கொல்வாய் பிறப்பிப்பாய் கூட இருந்தே சுகிப்பாய்
         செல்வாய் பிறர்க்குள் செயல் அறியேன் பூரணமே !

 65 ) வாரிதியாய்  வையம் எல்லாம் மன்னும் அண்டபிண்ட எல்லாம்
         சாரதியாய் நின்ற தலம் அறியேன் பூரணமே !

 66 ) வித்தாய் மரமாய் வெளியாய் ஒளியாய் நீ
         சத்தாய் இருந்த தரம் அறியேன் பூரணமே !

 67 ) தத்துவத்தைப்  பார்த்து மிகத் தன்னை அறிந்த அறிவால்
         உய்த்து உனைத்தான் பாராமல் உய்வாரோ பூரணமே !

 68 ) ஒன்றாய் உயிராய் உடல் தோறும் நீ இருந்தும்
         என்றும் அறியார்கள் ஏழைகள் தாம் பூரணமே !

 69 ) நேற்றும் என்றும் நாளை என்றும் நினைப்பு மறப் பாய்படைத்தும்
         மாற்றமாய் நின்ற வளம் அறியேன் பூரணமே !

 70 ) மனம் புத்தி சித்தம் மகிழ் அறிவு ஆங்காரமதாய்
         நினைவாம் தலமான நிலை அறியேன் பூரணமே !

 71 ) உருப்பேதம் இன்றி உய்ந்த சப்த பேதமாய்க்
         குருப்பேதமாய் வந்த குணம் அறியேன் பூரணமே !

 72 ) சட்சமய பேதங்கள் தான் வகுத்துப் பின்னும் ஒரு
         உட்சமயம் உண்டென்று உரைத்தனையே பூரணமே !

 73 ) முப்பத்திரண்டு உறுப்பாய் முனைந்து படைத்த உள்ளிருந்த
         செப்பிடு வித்தைத் திறம் அறியேன் பூரணமே !

 74 ) என்னத்தான் கற்றால் என் ? எப்பொருளும் பெற்றால் என் ?
        உன்னை அறியாதார் உய்வரோ ?  பூரணமே !

 75 ) கற்றறிவோம் என்பார் காணார்கள் உன்பதத்தைப்
         பெற்றரியார் தங்களுக்குப் பிறப்பு அறுமோ பூரணமே !

 76 ) வான் என்பார் அண்டம் என்பார் வாய் ஞானமே பேசித்
         தான் என்பார் வீணர்  தனை அறியார் பூரணமே !

 77 ) ஆதி என்பார் அந்தம் என்பார் அதற்குள் நடுவாய் இருந்த
         சோதி என்பார் நாதத் தொழில் அறியார் பூரணமே !

 78 ) மூச்சென்பார் உள்ளம் என்பார் மோனம் எனும் மோட்சம் என்பார்
         பேச்சென்பார்  உன்னுடைய பேர் அறியார் பூரணமே !

 79 ) பரம் என்பார் பானு என்பார் பாழ் வெளியாய் நின்ற
         வரம் என்பார் உன்றன் பேர் அறியார் பூரணமே !

 80 ) எத்தனை பேரோ எடுத்தெடுத் தான் உரைத்தார்
         அத்தனை பேருக்கு ஒன்றானது அறிகிலேன் பூரணமே !

 81 ) நகார மகாரம் என்பார் நடுவே சிகாரம் என்பார்
        வகார யகாரம் என்பார் வகை அறியார் பூரணமே !

 82 ) மகத்துவமாய்க்  காம மயக்கத்துக் குள்ளிருந்து
         பகுத்தறிய மாட்டாமல் பயன் இழந்தேன் பூரணமே !

 83 ) உண்மைப் பொருளை உகந்திருந்து பாராமல்
         பெண் மயக்கத்தாலே பிறந்து இறந்தேன் பூரணமே !

 84 ) வாயார வாழ்த்தி மகிழ்ந்து உனைத்தான் போற்றாமல்
         காயம் எடுத்து கலங்கினேன் பூரணமே !

 85 ) சந்திரனை மேகமது தான் மறைத்த வாறது போல்
         பந்தமுற யானும் உனைப் பார்க்கிலேன் பூரணமே !

 86 ) செந் தாமரைத்தாளை தினந்தினமும்  போற்றாமல்
         அந்தரமாய் நின்றங்கு அலைந்தேன் நான் பூரணமே !

 87 ) நீர்மேல் குமிழி போல் நிலையற்ற காயம் இதைத்
        தாரகம் என்றெண்ணி நான் தட்டழிந்தேன் பூரணமே !

 88 ) நெஞ்சம் உருகி நினைந்து உனைத்தான் போற்றிநெடு
         வஞ்சககத்தைப் போக்க வகை அறியேன் பூரணமே !

 89 ) எள்ளுக்குள் எண்ணெய்போல்  எங்கும் நிறைந்திருந்து
         உள்ளம் அறியாது உருகினேன் பூரணமே !

 90 ) மாயாப் பிரபஞ்ச மயக்கத்திலே விழுந்தே
         ஓயாச் சனனம் ஒழிந்திலேன் பூரணமே !

 91 ) பூசையுடன் புவன போகம் எனும் போக்கியத்தால்
         ஆசையுற்றே நானும் அறிவழிந்தேன் பூரணமே ! 

 92 ) படைத்தும் அழித்திடுவாய் பார்க்கில் பிரமாவெலுத்தைத்
         துடைத்துச் சிரஞ்சீவியாய்த் துலங்குவிப்பாய் பூரணமே !

 93 ) மந்திரமாய்ச் சாத்திரமாய் மறைநான்காய் நீ இருந்த
         தந்திரத்தை நான் அறிய தகுமோ தான் பூரணமே !

 94 ) அல்லாய்ப் பகலாய் அனவரது காலம் எனும்
         சொல்லாய்ப் பகுத்த தொடர்பறியேன் பூரணமே !

 95 ) நரகம் சுவர்க்கம் என நண்ணும் இரண்டு உண்டாயும்
        அரகரா என்பது அறிகிலேன் பூரணமே !

 96 ) பாவபுண்ணியம் என்னும் பகுப்பாய்ப் படைத்து அழித்திங்கு
         ஆவலையுண்டாக்கி வைத்த அருள் அறியேன் பூரணமே !

 97 ) சாந்தம் என்றும் கோபம் என்றும் சாதிமதங்கள் என்றும்
         பாந்தம் என்றும் புத்தி என்றும் படைத்தனையே பூரணமே !

 98 ) பாசம் உடலைப் பசு அதுவும் தான் உயிராய்
        நேசமுடன் நீ பொருளாய் நின்றனையே பூரணமே!

 99 ) ஏதில் அடியார் இரங்கி இகத்துள் வந்துன்
         பாதம் அதில் தாழப் பரிந்தருள்வாய் பூரணமே !

 100 ) நானேநீ நீயே நான் நாம் இரண்டும் ஒன்றானால்
           தேனின் ருசியது போல் தெவிட்டாய் பூரணமே !

 101 ) முடிவில் ஒரு சூனியத்தை முடித்து நின்று பாராமல்
           அடியில் ஒரு சூனியத்தில் அலைந்தேன் பூரணமே !.

 102 ) பூரணமாலை தனை புத்தியுடன் ஒதினருக்கு
           தாரணியில் ஞானம் தழைப்பிப்பாய் பூரணமே !.

                                    பூரணமாலை முற்றும்.
 என்றும்-சிவனடிமை-பாலா.

புதன், 22 ஜூன், 2011

பட்டினத்து அடிகளின் பூரணமாலை -->51-60

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

சித்தர்களை பற்றி எழுவது என்பது சாதாரண செயல் அல்ல ,அவர்களின் கருணையால் மட்டும் தான் எழுத முடியும் இந்த பூரனமாலையை எழுத ஆரம்பித்த போது இருந்த வேகம் இப்போது என்னிடம் இல்லை . இருப்பினும் அடியேனின் பிழையை மன்னித்து அவர்களின் கருணை பார்வை எம்மேல் பட்டு மீண்டும் ஆவலுடன் பல சித்தர்களின் பாடல்களை தொடர்ந்து எழுத வேண்டும் என்ற எண்ணத்தை நடைமுறை படுத்த வேண்டும் என்று பதிநென்மர் சித்தர்களின் பாதங்களை தொட்டு வணங்கி  கேட்டு கொள்கிறேன்.

விளக்கம் : 41 -->50 ..
//நரம்பு தசை தோல் எலும்பு நாற்றத்துக்குள்ளிருந்து//-இந்த ஜீவன் வாழும் இடத்தினை பற்றி குறிப்பிடுகிறார்
//சிலந்தியிடை நூல்போல்  சீவசெந்துக் குள்ளிருந்த //-பந்த பாசங்களை பற்றி குறிப்பிடுகிறார் .
//குருவாய் பரமாகிக் குடிலை சத்தி நாதவிந்தாய் //-பரம்பொருள் வாழும் குடில் என்று குறிப்பிடுகிறார்.
//ஒளியாய் கதிர்மதியாய் உன் இருளாய் அக்கினியாய் //-இறைவனின் உருவமானது எப்படி வெளிப்படும் என்பதை குறிப்பிடுகிறார்.

//இடையாகிப் பிங்கலையாய் எழுந்த சுழுமுனையாய்//-இங்கு உடலை இடைகலையாகவும் உயிரை பிங்கலையாகவும் ஜீவனை சுழுமுனையாகவும் குறிப்பிடுகிறார்.
//மூலவித்தாய் நின்று முளைத்து உடல்தோறும் இருந்து//-தாம் எவ்வாறு கருத்தரித்து இந்த உலகில் வாழ்ந்து வளர்கிறோம் ஆனால் எமன் வரும் நாளை நம்மால் அறிந்து கொள்ளமுடியாமல் போகிறது. அவன் வரும் நாளை அறியும் கணக்கு தெரிந்தவர்கள் தான் சித்தர்கள். வாசியை கொண்டு அவனை வெல்ல முடியும் வேறொரு வழி எதுவும் கிடையாது. .

//உள்ளும் புறம்புமாய் உடலுக்குள் நீ இருந்தது//-உடலில் சிவனை காணுதல் .
//தாயாகித் தந்தையாய்த் தமர் கிளைஞர் சுற்றம் எல்லாம் //-பந்த பாசங்களில் சிவனை காணுதல்.
//குலங்கள் எழு வகையில் நின்ற குறிப்பு அறியேன்//-சிவனை அறிதல்
//ஆணாகிப் பெண்ணாய் அலியாகி வேற்றுருவாய் //-ஆண் ,பெண் பேதமின்றி கூறுதல் .

பூரணமாலை தொடர்ச்சி....

51 ) வாலையாய்ப் பக்குவமாய் வளர்ந்து கிழம் தானாகி
       பாலையாய் நின்ற பயன் அறியேன் பூரணமே !

52 ) பொய்யாய்ப் புவியாய்ப் புகழ்வா ரிதியாகி
       மெய்யாகி நின்ற வியன் அறியேன் பூரணமே!

53 ) பூவாய் மணமாகிப் பொன்னாகி  மாற்றாகி
       நாவாய்ச் சொல்லான நயம் அறியேன் பூரணமே !

54 ) முதலாய் நடுவாகி முப்பொருளாய் மூன்றுலகாய்
       இதமாகி நின்ற இயல் அறியேன் பூரணமே !


55 ) ஊனாய் உடல் உயிராய் உள் நிறைந்த கண்ணொளியாய்த்
       தேனாய் ருசியான திறம் அறியேன் பூரணமே !

56 )  வித்தாய் மரமாய் விளைந்த கனியாய்ப் பூவாய்ச்
        சித்தாகி நின்ற திறம் அறியேன் பூரணமே !

57 ) ஐவகையும் பெற்றுலக அண்டபகிரண்டம்  எல்லாம்
       தெய்வமென நின்ற திறம் அறியேன் பூரணமே !


58 ) மனமாய்க் கனவாகி மாய்கையாய் உள்ளிருந்து
       நினைவாகி நின்ற நிலை அறியேன் பூரணமே !

59 ) சத்திசிவம் இரண்டாய்த் தான் முடிவில் ஒன்றாகிச்
       சித்திரமாய் நின்ற திறம் அறியேன் பூரணமே !

      
60 ) பொறியாய்ப்  புலன் ஆகிப் பூதபேதப் பிரிவாய்
        அறிவாகி நின்ற அளவறியேன் பூரணமே !..



http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

திங்கள், 20 ஜூன், 2011

பட்டினத்து அடிகளின் பூரண மாலை தொடர்பில் பின்னடைவு....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு   ,

 கடந்த ஒரு வாரமாக என்னால் எந்தவொரு பதிவுகளையும் பதிவு செய்ய முடியவில்லை . இதற்காக முதலில் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.  தினந்தோறும் எனக்கு சித்தர்களின் உத்தரவு வந்தால் தான் என்னால் எழுதமுடியும் . 

பல அன்பர்கள் என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கடந்த வாரம் பேசினார்கள். எல்லாருக்கும் உள்ள ஒரே ஆவல் புண்ணிய ஆத்மாக்களுடன் எப்படி தொடர்பு கொள்வது என்று தான் ?. 

இந்த தொடர்பு பூர்வ  ஜென்ம பலனை கொண்டுதான் வரும். இதனை விட்டுவிட்டாலும் இதன் தாக்கம் இன்று வரை எனக்குள் நடந்து கொண்டு தான் இருக்கிறது .  எனக்கு மிகவும்  வேண்டப்பட்ட இரண்டு நண்பர்கள் கடந்த மாதம் வந்து இக்கலையை கற்றுகொண்டார்கள் . இதில் ஒருவருக்கு கொஞ்சம் தான் அதிர்வலைகள் வந்தது. 
மற்றொரு நண்பருக்கு நல்ல அதிர்வலைகள் வந்தது .

நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை பாதிக்கப்பட்டபோது அவரின் நிலையை பற்றி அருமையான தகவல்கள் அவருக்கு கிடைத்தது. எல்லாரும் கைவிட்ட நிலையில் மகா அவதார் பாபாஜியின் கருணையால் இன்று நலமாக உள்ளார் . ஏனெனில் அந்த நண்பருக்கு வழிகாட்டியாக பாபாஜி வந்துள்ளார்.

எல்லாமே பூர்வ ஜென்ம பலம் .

நம்ப முடியாத பல ஆச்சர்ய தகவல்கள் நமக்கு வழிக்காட்டிகளின் மூலம் நமக்கு கிடைக்கும். 

இது ஒரு வகையான மருத்துவ முறை தான் . இதனால் மனதில் தோன்றும் எண்ணங்களை களைய முடியும், எதிர்கால திறனை அறிந்து கொண்டு நமது வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக்கொள்ள முடியும்.

"கலைகள் உம்மை தேடிவரும் காலன் வருமுன் "

"எம்மை பற்றி "-இந்த வலைப்பூவில் உள்ள நிழற்படமானது நான் அல்ல ஆனால் அதனைப்போல் நான் ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் பதஞ்சலி சித்தர் அவர்களின் உருவ படத்தினை வைத்திருக்கிறேன். 

இந்த படத்தை யாரோ ஒரு ஓவியன் வரைந்து இருக்கிறான் என்ற எண்ணம் என் மனதிலும் ,எல்லார் மனதிலும் உள்ள ஒரு மிகப்பெரிய சந்தேகம் ஆகும்.

ஆனால் உண்மையிலே இந்த உருவத்தை போல் ஒரு உருவத்தை நேரில் நீங்கள் தரிசிக்க நினைத்தால் உங்கள் நிலை எப்படி இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள் .

பதஞ்சலியாரின் தெய்வ தரிசனம் எமக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் 
( ஞாயிற்று கிழமை) கிடைத்து . அதன் அனுபவத்தை கூடிய விரைவில் பகிர்ந்து கொள்கிறேன். 


அந்த சித்தரின் தரிசனம் இனிமேல் யாருக்கும் கிடைக்காமல் போய்விட்டதே  என்ற மன ஆதங்கம் தான் என்னை கடந்த நான்கு நாட்களாக பாடாய்ப்படுத்துகிறது .

பட்டினத்து அடிகளின் பூரணமாலை முடிந்த பிறகு பதஞ்சலியாரின் தரிசனத்தை பற்றி எழுதுகிறேன்.

தொடரும்....
 என்றும்-சிவனடிமை-பாலா.

வியாழன், 9 ஜூன், 2011

பட்டினத்து அடிகளின் பூரணமாலை 41 -> 50

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

பூரணமாலை தொடர்ச்சி...

41 ) நரம்பு தசை தோல் எலும்பு நாற்றத்துக்குள்ளிருந்து
        வரம்பரிய மாட்டாமல் மயங்கினேன் பூரணமே !

42 ) சிலந்தியிடை நூல்போல்  சீவசெந்துக் குள்ளிருந்த
        நலந்தனைத் தான் பாராமல் நலம் அழிந்தேன் பூரணமே !

43 ) குருவாய் பரமாகிக் குடிலை சத்தி நாதவிந்தாய்
        அறுவை உருவானது அறிகிலேன் பூரணமே !

44 ) ஒளியாய் கதிர்மதியாய் உன் இருளாய் அக்கினியாய்
        வெளியாகி நின்ற வியன் அறியேன் பூரணமே !

45 ) இடையாகிப் பிங்கலையாய் எழுந்த சுழுமுனையாய்
        உடல் உயிராய் நீ இருந்த உளவறியேன் பூரணமே !


46 ) மூலவித்தாய் நின்று முளைத்து உடல்தோறும் இருந்து
        காலன் என அழிக்கும் கணக்கு அறியேன் பூரணமே !

47 ) உள்ளும் புறம்புமாய் உடலுக்குள் நீ இருந்தது
       எள்ளளவும் நான் அறியாது இருந்தேனே பூரணமே !

48 ) தாயாகித் தந்தையாய்த் தமர் கிளைஞர் சுற்றம் எல்லாம்
        நீயாகி நின்ற நிலை அறியேன் பூரணமே !

49 ) விளங்கு புள்ளூர் வன அசரம் விண்ணவர் நீர்ச் சாதிமனுக்
       குலங்கள் எழு வகையில் நின்ற குறிப்பு அறியேன் பூரணமே !

50 ) ஆணாகிப் பெண்ணாய் அலியாகி வேற்றுருவாய்
        மாணாகி நின்ற  வகையறியேன் பூரணமே !

விளக்கத்தை நாளைய பதிவில் காணலாம். ...

என்றும்-சிவனடிமை-பாலா.

புதன், 8 ஜூன், 2011

பட்டினத்து அடிகளின் பூரணமாலை 31 -> 40

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  ,

பூரணமாலை தொடர்ச்சி ....
31 ) கருவாய் உருவாய்க் கலந்து உலகெல்லாம் நீயாய்
         அருவாகி நின்றது அறிகிலேன் பூரணமே !.

விளக்கம்  : நாம் எவ்வாறு உருவானோம் என்று உணரபெற்றாலே இந்த பாடலுக்கான விளக்கம் புரியும்.  பெற்றோர்களின் உறவினால் அவர்களுக்கு தெரியாமல் அருவமாகி பின் உருவமாகி பின் தான் நாம் இவ்வுலகில் பிறக்கிறோம்.   நம் உடலில் இருந்து வெளியாகும் கோடிகணக்கான சுக்கிலத்தில் இருந்து ஒரே ஒரு அணு மட்டும் சென்று ஒரு அழகிய உயிரை உருவாக்க கருவாக அமைகிறது.  இதனையே தான் சித்தர்களும் ,ஞானிகளும் இறைவனை உருவமாக வழிபடுவதை விட அருவமாகவே அதிகம் வழிப்பட்டதாக காண்கிறோம்.  இறைவன் எல்லா உயிர்களிலும் மறைமுகமாகவே உள்ளான் என்பதை அறியாமல் போனேனே என்று புலம்புகிறார். இதனையே தான் கொல்லா நோன்பு இருக்கவேண்டும் என்று இராமலிங்க அடிகளார் கூறுகிறார். எல்லாவுயிர்களையும் தம்முயிர்களை போல என்ன வேண்டும்.

32 ) செம்பொன் கமலத் திருவடியைப்  போற்றாமல்
        பம்பை கொட்ட ஆடும் பிசாசானேன் பூரணமே !

விளக்கம் : இறைவனின் திருவடியை  போற்றி வணங்கவேண்டும் .

33 ) எனக்குள்ளே நீ இருக்க  உனக்குள்ளே நான் இருக்க
        மனக்கவலை தீர வரம் அருள்வாய் பூரணமே !

விளக்கம் : மனக்கவலை தீர வேண்டும். ஏனெனில் இறைவன் வாழும் இந்த உடல் அமைதியாக இருக்க வேண்டும்.  மருந்தினால் குணப்படுத்த முடியாத ஒரே நோய் மன நோய் தான்.  நம் உடம்பினுள்ளே இறைவன் இருக்கும்போது நாம் ஏன் கவலை கொள்ளவேண்டும்.  நடப்பது கண்டிப்பாக நடந்தே தீரும் அதில் எந்த வித மாற்றம் இல்லை. அப்படி இருக்க என்ன தான் நடக்கும் என்று பார்க்க நினைத்தாலே நம்மை சுற்றி எந்த நோயும் , பிரச்சனையும் அணுகாது.

 
34 ) எழுவகைத் தோற்றத்து இருந்து விளையாடினதை
        பழுதறவே பாராமல் பயன் இழந்தேன் பூரணமே !

விளக்கம் : நாம் வாழும் இந்த தேகத்தை ஏழு வகையாக பிரிக்கிறார்கள். இதனைப்பற்றி இராமலிங்க அடிகளார் அருமையாக பாடி உள்ளார் . அதனையே ஏழு வண்ணங்கள் ஆகவும் பிரிக்கிறார்.  அந்த நிகழ்ச்சி தான் ஒவ்வொரு வருடம் தைப்பூசம் அன்று நடைபெறுவதாக கேள்விப்பட்டு இருக்கிறேன்.

கறுப்புத்திரை -மாயசக்தி
நீலத்திரை -கிரியா சக்தி
பச்சைத்திரை -பராசக்தி
சிவப்புத்திரை - இக்சா சக்தி
பொன்மைத்திரை - ஞான சக்தி
வெண்மைத்திரை - ஆதி சக்தி
கலப்புத்திரை - சிற் சக்தி

இதற்க்கான ஒரு நீண்ட விளக்கத்தை வரும் பதிவுகளில் காணலாம்.

35 ) சாதி பேதங்கள் தனை அறிய மாட்டாமல்
        வாதனையால் நின்று மயங்கினேன் பூரணமே !
 
விளக்கம் : எல்லா சித்தர்களும் சாதி பேதங்களை முற்றிலும் வெறுத்தவர்கள் ஆவார்கள்.  இதனையே குதம்பை சித்தர் பின்வருமாறு கூறுவார்.

"ஆண்சாதி பெண்சாதி யாகும் இருசாதி
  வீண்சாதி மற்றவெல்லாம்  குதம்பாய்
  வீண்சாதி மற்றவெல்லாம் "

"சாதி வேறு என்றே தரம் பிரிப்போருக்கு
 சோதி வேறாகுமடி குதம்பாய் "
 சோதி வேறாகுமடி "


 
36 ) குலம் ஒன்றாய் நீ படைத்த குறியை அறியாமல் நான்
        மலப்பாண்டத்  துள்ளிருந்து மயங்கினேன் பூரணமே !

விளக்கம் : இறைவன் நம்மை படைக்கும்போது ஒரு உயிராக தான் படைக்கிறான் .ஆனால்  நாமோ சாதி வெறி பிடித்து நம்மையே நாம் அழித்து கொள்கிறோம்.

இதனை குதம்பை சித்தர் பின்வருமாறு  கூறுகிறார்.
"ஆதி பரப்பிரமம் ஆக்கும் மக்காலையில்
 சாதிகள் இல்லையடி குதம்பாய்
 சாதிகள் இல்லையடி "

"பார்ப்பாரைக் கர்த்தர் பறையறைப் போலவே
 தீர்ப்பைப் படைத்தாரடி குதம்பாய்
 தீர்ப்பைப் படைத்தாரடி "

37 ) அண்டபிண்ட  எல்லாம் அணுவுக்கு அணுவாய் நீ
        கொண்ட வடிவின் குறிப்பறியேன் பூரணமே !

விளக்கம் : இறைவன் கொண்ட வடிவினை பற்றி குறிப்பு அறியாததை பற்றி கூறுதல் .
38 ) சகத்திரத்தின் மேல் இருக்கும் சற்குருவைப் போற்றாமல்
        அகத்தினுடை ஆணவத்தால் அறிவழிந்தேன் பூரணமே !

விளக்கம் : சற்குருவை போற்றுதல் .
39 ) ஐந்து பொறியை அடக்கி உனைப் போற்றாமல்
        நைந்துருகி நெஞ்சம் நடுங்கினேன் பூரணமே !

விளக்கம் : மெய், வாய், கண் , காது ,மூக்கு ஆகிய ஐம்பொறிகளை அடக்கி உன்னை வணங்கவில்லையே  என்று நெஞ்சம் நடுங்கி புலம்புகிறார்.
40 ) என்னைத் திருக்கூத்தால் இப்படி நீ ஆட்டுவித்தாய்
        உன்னை அறியாது உடல் அழிந்தேன் பூரணமே !

விளக்கம் : விதி எனும் வழியில் நடக்கும் அனைத்தும் உந்தன் திருவிளையாட்டே என்று
     உணரமால் இறைவனை நொந்து கொள்ளுதல் .
தொடரும்...
என்றும்-சிவனடிமை-பாலா.

செவ்வாய், 7 ஜூன், 2011

பட்டினத்து அடிகளின் பூரணமாலை 21 -> 30

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

நேற்றைய பதிவிற்க்கான பின்னூட்டத்தில் ஐயா சங்கர் குருசாமி கேட்டதற்கான விளக்கத்தை பூரண மாலை முடிந்த பிறகு தருகிறேன்.  ஏனெனில் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு பதிவு எழுதவேண்டிய நிலை இருக்கிறது.  எம்மால் முடிந்த வரை விளக்கம் தருகிறேன்.

21 ) வாசிதனைப் பார்த்து மகிழ்ந்து உனைத்தான் போற்றாமல்
        காசிவரை போய்திரிந்து கால் அலுத்தேன் பூரணமே !.

விளக்கம் : வாசி என்றால் சிவா என்பர் சித்தர்கள் . உண்மையான சிவனை அறிந்து கொள்ளவேன்டினால் காசி போக வேண்டிய அவசியம் இல்லை . வாசியை கவனித்தால் போதும் காசிக்கு போக தேவை இல்லை.  பொதுவாக எதுக்கு காசிக்கு நாம் யாத்திரை செல்கிறோம் என்றால் அங்குள்ள சுடலை மயானத்தை பார்க்கிறோம். எண்ணற்ற பிணங்கள் எரிக்கப்படுகிறது . கங்கையும் அங்கு செல்கிறாள் அவர்களின் பாவத்தை கழுவ .இதுப்போன்ற பல அனுபவங்களை நமது மூதாதையர்கள் பாடி சென்று இருக்கிறார்கள். 

காசியில் எரிக்கப்படும் பிணத்தை நாம் பார்க்கும்போது மெய்யென்ற இந்த உடல் பொய் ஆகும் என்பதனை  உணரவேண்டும்  .இதற்காக நாம் காசி வரை செல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை.
நம் உடலில் உள்ள கங்கை என்பது கைலாயத்தில்  உள்ளிருந்து வரும் அமுதமாகும் .அதனை அருந்தி நாம் வாழ ஆரம்பித்தால் பொய் என்ற  இந்த உடலும் மெய் ஆகும். நமது பாவங்களும் அழிக்கப்படும்.  இந்த விளக்கம் தெரியாமல் காசி வரை சென்று கால் அலுத்தேன் என்று புலம்புகிறார்.


22 ) கருவிகள் தொண்ணுற்றாரில் கலந்து விளையாடினதை
        இருவிழியால் பாராமல் ஈடழிந்தேன் பூரணமே !

விளக்கம் :  நமது உடலில் அக கருவிகள் மற்றும் புற கருவிகள் மொத்தம் 96  உள்ளது. அதனைப்பற்றிய விளக்கம் வரும் நாட்களில் காணலாம்.  இத்தகைய கருவிகளில் சிவன் கலந்து விளையாடினதை எனது இரு விழிகளால் காணாமல் அழிந்தேனே என்று கூறுகிறார்.

23 ) உடலுக்குள் நீ நின்று உலாவினதைக் காணமல்
        கடல் மலை தோறும் திரிந்து கால் அழுத்தேன் பூரணமே !

விளக்கம் : சிவன் எங்குள்ளான் என்று தெரியாமல் காடு , மலை ,நகரம் அலைந்து இறுதியில் என்னுள் உலாவினதை அறியாமல் போனேனே என்று புலம்புகிறார்.


24 ) எத்தேச காலமும் நாம் இறவாது இருப்பும்  என்று
        உற்றுனைத்தான் பாராமல் உருவழிந்தேன் பூரணமே ! 
       
விளக்கம் :  நாம் இறக்கமாடோம் என்ற எண்ணத்தை கொண்டு நீ இருக்கும் இடத்தை உற்று பாராமல் என் உடலை அழித்தேன் என கூறுகிறார்.  நாம் சிவனை கண்டால் இறப்பின்றி வாழ முடியும்.  அதற்க்கான வழிமுறையை சித்தர்கள் பாடி சென்றுள்ளார்கள் . உற்றுப்பார்த்தல் என்றல் தியான முறையில் சிவன் இடத்தை அதாவது அருட்பெருஞ்சோதியை காணுதல் என்று விளக்கம் கொள்ளுதல் நல்லது.

25 ) எத்தனை தாய் தந்தை இவர்களிடத்தே இருந்து
        பித்தனாய் யானும் பிறந்து இறந்தேன் பூரணமே !

விளக்கம் : நாம் பல பிறவிகள் எடுத்து இருக்கிறோம் என்று எண்ணும்போது நாம் எத்தனை தந்தை , தாயை பெற்று இருக்கிறோம் என்று நமக்கு தெரியாது.  இதனை நானும் தெரியாமல் பிறந்து இறந்தேன் என புலம்புகிறார். இதனை பார்க்கும்போது நமக்கு பிறக்கும் குழந்தை நமது மூதாதையர்கள் போல இருப்பதாக சொல்லி பெருமை  கொள்கிறோம் . சித்தர்களின் வாக்குப்படி நமது ஐந்து தலைமுறைகளில் இருப்பவர்களில் யாரேனும் ஒருவர் தான் நமக்கு மகனாவோ அல்லது மகளாகவோ பிறக்க வாய்ப்பு  இருப்பதாக கூறுகிறார்கள்.


26 )  பெற்று அலுத்தார்  தாயார் , பிறந்து அலுத்தேன் யானும் ,உன்றன்
        பொன் துணைத்தாள் தந்து புகழ் அருள்வாய் பூரணமே !.

விளக்கம் : பல பிறவிகள் இருப்பதால் என் தாய் என்னை பெற்று அலுத்தார்கள் நானோ பிறந்தே அலுத்தேன் இத்தகைய செயல்கள் மீண்டும் நிகழாமல் என்னை காப்பாற்றி அருள் தருவாய் என புலம்புகிறார்.


27 ) உற்றார் அழுது அலுத்தார் , உறன் முறையார் சுட்டலுத்தார்
        பெற்று அலுத்தார்  தாயார் , பிறந்து அலுத்தேன் பூரணமே !

விளக்கம் :  எனது பிணத்தை பார்த்து என் உற்றோர்கள் அழுதே அலுத்தார்கள் மற்றும் என்னை சுட்டு எரித்தும் அலுத்துபோனார்கள் .  என் தாயார் பெற்றும் நான் பிறந்தும் அலுத்தே போனேனே என்று புலம்புகிறார்.

28 ) பிரமன் படைத்து அலுத்தான் ,பிறந்து இறந்து நான் அலுத்தேன்
        உரமுடைய அக்கினிதான் உண்டு அலுத்தான் பூரணமே !

விளக்கம் : என்னை படைத்த பிரமன் என்னை படித்தே அலுத்து போனான் . நானும் பிறந்தும் இறந்தும் அலுத்து போனேன். என்னை எரித்து எரித்து அக்கினியும் அலுத்து போனான் என்று புலம்புகிறார்.

29 ) எண்பத்து நான்கு நூறாயிரம் செனனமும் செனித்துப்
        புண்பட்டு நானும் புலம்பினேன் பூரணமே !

விளக்கம் : நமது பிறவிகள் மொத்தம் 84000  என்று இதன் மூலம் குறிப்பிடுகிறார். இத்தனை பிறவிகளிலும் நான் புண்பட்டு தான் மாண்டு போனேன் என்றும் கூறுகிறார். பாருங்கள் ஒரு பிறவிக்கே  நாம் எத்தனை பாடுபடுகிறோம் . இன்னும் எத்தனை உள்ளதோ ?

30 ) என்னை அறியாமல் எனக்குள்ளே நீ இருக்க
        உன்னை அறியாமல் உடல் இழந்தேன் பூரணமே !.

விளக்கம் : எனக்குள் நீ இருப்பதை அறியாமல் உடல் இளைத்தேன் என்று புலம்புகிறார்.

என்றும்-சிவனடிமை-பாலா.