சனி, 31 டிசம்பர், 2011

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்-2012

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

உலகில் உள்ள அனைத்து உள்ளங்களுக்கும்  எமது புத்தாண்டு நல்வாழ்த்துகள் .

பழையன கழிதலும் புதியன புகுதலும் -என்ற கோட்பாட்டில் வாழும் நாம் கடந்த ஆண்டில் நடந்த கசப்பான அனுபவங்களின் துணை கொண்டு இனி வரும் நாட்களில் அதுப்போன்ற அனுபவங்களை மீண்டும் ஏற்படுத்தி கொள்ளாமல் வாழ்ந்தால் போதும்.

குருவின் துணை கொண்டு தான் நாம் இந்த பிறவியை முடித்து பிறவா
வாழ்க்கையை  மேற்கொள்ளவேண்டும் .

பாம்பாட்டி சித்தரின் பாடல் -குருவணக்கம்

பொய்ம்மதங்கள்  போதனைசெய் பொய் குருக்களைப்
புத்தி  சொல்லி நன்னெறியிற் போக விடுக்கும்
மெய் மதந்தான் இன்னதென்றும் மேவ விளம்பும்
மெய்குருவின் பதம் போற்றி ஆடாய் பாம்பே

மதம் பிடிப்பது என்பது விலங்குகளுக்கு தான் மனிதர்களுக்கு அல்ல . மதங்களை தாண்டி மனித உள்ளங்களை  நேசித்தால் போதும் .  எல்லா  மதங்களும்   மனிதனால் உருவாக்கப்பட்டவை தான் .

உண்மையான மதத்தை நமக்கு விளக்கம் கூற சற்குருவினால் மட்டும்  தான் முடியும் .

இவ்வாண்டில் எந்தவித  சாதி  சண்டையும், மதக்கலவரங்களும் ஏற்படாமல்
இருக்க எல்லாவல்ல சித்தர்களின் பாதங்களை தொட்டு வணங்கி வேண்டி கொள்வோம் .

http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

வியாழன், 29 டிசம்பர், 2011

நெஞ்சறி விளக்கம்-சிவன் உறையும் இடம்

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

மதிப்பிற்குரிய ஐயா சங்கர் குருசாமி கேட்டுதர்க்கிணங்க எனக்கு தெரிந்த
விளக்கத்தை இங்கே தருகிறேன்.

முதல் பாடலில் நாடு,நகரம்,  வீடு ,நல்ல வாழ்க்கை ,இல்லாள் , மைந்தர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் நம்முடன் இருக்கிறார்கள் என்று நினைத்து கொண்டு இருக்கின்றாயே ,இந்த கூடும் ஒரு நாள் அழிந்து போகுமே , இப்படி அழிந்து போகும் கூட்டினை வைத்து கொண்டால் பிறவிகள் பல எடுக்க வேண்டி இருக்குமோ கூறு நெஞ்சே என்று கேட்கிறார் . இந்த கூட்டினை அழியாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?


இரண்டாவது பாடலில் கூறுவது , என்னதான் படித்தாலும் ,எத்தனை ஏடுகள் படித்தாலும் எத்தனை  நூல்கள் படித்தாலும் ஒன்றும் புண்ணியம் இல்லை என கூறுகிறார்.  இன்று நிறைய ஏடுகள் தியானத்தை பற்றி நமக்கு கிடைக்கிறது ,ஆனால் ஏடுகளை படித்துவிட்டு நாம் தியானத்தை தொடர்ந்தால் பல விளைவுகளை தான் சந்திக்க வேண்டீருக்கும் . எனவே குருவினை கொண்டு இது போன்ற
பயிற்சிகளை கற்று கொள்ளவேண்டும் .

முற்காலத்திலும் சரி, தற்காலத்திலும் சரி மனிதன் தனது இறுதி காலத்தினை கழிக்க கானகத்தை தான் தேர்வு செய்து கொள்கிறான் .ஏனெனில் அங்கு தான் மன  நிம்மதி கிடைக்கும் என நினைக்கிறான். பல சித்திகளை பெறுவதற்காக பல மாதங்களாக காட்டில்
தவம் செய்து கொண்டு மாண்டு போனவர்கள் எண்ணிலா கோடி ஆகும். இதுவும் நமக்கு தேவை இல்லை . இங்கு கானல் நீரினை உண்மையான நீர் என நினைத்துகொண்டு நாம் அலைவதை குறிப்பிடுகிறார். அதுபோல நாட்டிலே தெய்வம் இங்கு இருக்கிறது அங்கு இருக்கிறது என்று மக்கள் அலைவதை பார்த்து தெய்வம் என்பது நமது கூட்டினுள் தான் இருக்கிறது என்று தெளிவாக கூறுகிறார்.

இது உண்மையும் கூட தான் , நமது ஜீவன் நம்மை விட்டு போனால் நாம் சடம் ஆவோம் .இந்த உடலையும் உயிரையும் ஆட்டுவிப்பவனே இறைவன் ஆவான் .


மூன்றாம் பாடலில் நாம் எவ்வாறு இந்த ஆக்கையை அழியாமல் பாதுகாக்க முடியும் என்று கூறுகிறார்  . இதற்க்கு முதலில் நமக்கு ஞானம் கிடைக்கவேண்டும்,  ஞானம் கிடைக்க நல்ல குரு வேண்டும் , நல்ல குரு கிடைத்தால் வாசி போன்ற பயிற்சிகளை நமக்கு கற்று கொடுத்து உண்மையான கயிலையை நமக்கு காட்டுவார்கள் , அவ்வாறு கண்ட கயிலையில் குண்டலினி மூலம் தீபத்தை நெற்றியின் புருவ மையத்தில் எப்படி ஏற்றுவது என்று கற்று கொடுப்பார்கள் . அவ்வாறு ஏற்றிய தீபத்தின் மூலம் உண்மையான சிவலிங்கத்தை நமக்கு காட்டுவார்கள் .

நமது உயிரின் வடிவம் சிவலிங்கம் ஆகும். இதை தான் நமது சித்தர்கள்
எல்லா கோவிலிலும் நாகலிங்கத்தை பிரதிஸ்டை பண்ணி இருப்பார்கள் .
குண்டலினி மூலம் நமது ஜீவனை நம்மால் அடைய முடியும்.

இது எமக்கு தெரிந்த கருத்துகள் .


http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

செவ்வாய், 27 டிசம்பர், 2011

நெஞ்சறி விளக்கம் -இறைவன் உறையும் இடம்

அன்புள்ள சித்த  உள்ளங்களுக்கு ,

நெஞ்சறி விளக்கம் -இறைவன் உறையும் இடம்

நாடென்றும் நகரமென்றும் நலந்திகழ் வாழ்வதென்றும்
வீடென்றும் மனையாளேன்றும் மிக்கதோர் மைந்தரென்றும்
மாடன்றுஞ்  சம்பத்தென்றும் வாஞ்சை கொண்டலைந்தாய் இந்தக் கூடொன்றும் அழிந்தாற் கூடத்தொடருமோ கூறு நெஞ்சே.

 ஏட்டிலே எழுதும் நூல்கள் எத்தனை படித்தும் தீதான்
 காட்டிலே எறித்த திங்கள் கானலிற்  சலம்போலானாய்
நாட்டிலே தெய்வமென்று நடந்தலை யாமாலுன்றன்
கூட்டினுலே நாகைநாதர் குறிப்பறிந் துணர்வாய் நெஞ்சே ...

கிட்டுமோ ஞானயோகம்  கிடைக்குமோ குருவின் பாதம்
கட்டுமோ மூல வாசி காணுமோ கயிலை வீடு
எட்டுமோ நாகலிங்கம் ஏற்றுமோ தீப ஜோதி
தட்டுமோ பளிங்குமேடை தனையரி யார்க்கு நெஞ்சே ...

இறைவன் நம்முள்ளே இருக்கிறான் ....

இந்த சான்று ஒன்றே போதும் என நினைக்கிறேன் ...

http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

நெஞ்சறி விளக்கம்-எண்ணத்தின் வலிமை

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

கீழ்காணும் பாடலில் தெளிவான விளக்கங்கள் உள்ளதால்
எமது விளக்கம் தேவைப்படாது என நினைக்கிறேன்.


குளத்திலே கிடக்கும் ஆமை குளக்கரை முட்டையிட்டு
குளத்துநீர்க்  குள்ளிரிந்து குறிப்புடன் நினைக்கும்போது
குளத்திலே புதைத்த முட்டை கருவுரு வானாற் போலுன்
உளத்திலே நாகை நாதர் உருவறிந்து உணர்வாய் நெஞ்சே .


மருவிய சிலந்திப் பூச்சி வயிற்றினில் நூலுண்டாக்கி
உருவுடன் கூடுக்கட்டி உகந்ததிலிருக்கு மாபோல்
குருபர னுனது கூட்டில் குடியிருப்பதனைப் பார்த்துப்
பெருவெளி நாகை நாதர் பெருமை கண்டருள் சேர்  நெஞ்சே . 

தண்ணீரிலிருக்கும் மீன்கள் தண்ணீரிற் கருவைப்பித்திக்
கண்ணினாற் பார்க்கும்போது கயலுருவானாற் போல
நண்ணிய குருவைக்கண்டு  நாதனல் லுருவைச் சேர்த்து
விண்ணின்மேல் நாகை நாதர் மெல்லடி வெளியார் நெஞ்சே.


எண்ணம் போல் வாழ்க்கை என்பது உண்மை தான் . உயிர்கள் உருவாகும் விதத்தை உவமையாக கூறிய நமது சித்தர்களை நம்மால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை .

பதிநென்மர் சித்தர் பாதம் போற்றி ...
http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

வியாழன், 8 டிசம்பர், 2011

கார்த்திகை தீபவாழ்த்துகள்...

அன்புள்ள சித்தஉள்ளங்களுக்கு ,

நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. 
எனக்கு பணியில் சிறிது இடமாற்றம் ஏற்பட்டுள்ளதால் தங்களை சந்திக்க முடியவில்லை, தினந்தோறும்    காலை 3 மணி நேரம் பயணம் செய்து அலுவலகத்திற்கு செல்வதும் அதற்குபின் 10 மணி நேரம் அலுவலக
வேலை பார்ப்பதும் ,பின் 3 மணி நேரம் பயணம் செய்து வீட்டுக்கு திரும்ப வேண்டியாகி உள்ளது. 

இருப்பினும் இதுவும் அந்த ஆதி சித்தனின் வேலையாக தான் இருக்கும் . நடப்பது நன்மைக்கே என்ற கோட்பாட்டில் மீண்டும் எழுத முயற்சிக்கிறேன்.

இன்று கார்த்திகை தீபம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த கார்த்திகை தீபவாழ்த்துகள்.

திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம் போல உங்கள் மனதிலும் ஆன்ம ஜோதியை ஏற்றுங்கள் . இறையருள் பெறுங்கள் .

நெஞ்சறி விளக்கம் -10

வீட்டிருள் போகவென்றே விளக்கினை ஏற்றி வைத்தால்
வீட்டிருள் எங்கே போச்சு விளக்கொளி எங்கே போச்சு
கூட்டினுள் நடஞ்செய் ஈசன் குறிப்பறியாமல் நீதான்
நாட்டினுள் அலைந்தால் நாகை நாதரை வணங்கு நெஞ்சே ..


http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

செவ்வாய், 22 நவம்பர், 2011

நெஞ்சறி விளக்கம் 1 -5

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
     
கணபதி தாசர் அருளிச்செய்த  நெஞ்சறி விளக்கம் 1 -5 

விநாயகர் காப்பு

வஞ்சக மனத்தினாசை மாற்றிய பெரியோர் தாளில்
கஞ்சமா மலரிட் டோதுங் கணபதி தாசன் அன்பால்
நெஞ்சறி விளக்க ஞான நீதிநூல் நூரும்பாடக்
குஞ்சர முகத்து மூலக் குருபரன் காப்ப தாமே .

பாடல் : 1
பூமியிற் சவுந்தர ப்பெண் புணர்ந்திடு நாகை நாதர்
நாமெந்  நாளும் நாவினவின்று செந் தமிழாற் பாடிக்
காமமு மாசா பாசக் கன்ம முமகற்றி மூல
ஓமெனு மெழுத்தை ந்தாலே யுனையறிந்துணர்வாய் நெஞ்சே..

பாடல்: 2 
தந்தை தாய் நிசமுமல்ல சனங்களும் நிசமுமல்ல
மைந்தரும் நிசமுமல்ல மனைவியும் நிசமுமல்ல
இந்தமெய் நிசமுமல்ல இல்லறம் நிசமுமல்ல
சுந்தர நாகை நாதர் துணையடி நிசம்பார் நெஞ்சே..

பாடல் :3 
காண்பது மழிந்துபோகும் காயமு மழிந்துபோகும்
ஊண்பொருள் அழிந்து போகும் உலகமும் அழிந்து போகும்
பூண்மணி நாகை நாதர் பொற்பாதம் அழியாதென்று
வீண்பொழு தினைப்போக்காமல்  வெளிதனில் ஒளிபார் நெஞ்சே.

பாடல் :4 
மனமெனும் பேயினாலே மாய்கையாம் இருடான் மூடச்
சனமெனும் ஆசா பாசந் தலைமிசை ஏற்றிக் கொண்டு
கனமெனுஞ் சுமையைத் தூக்கிக் கவலையுற்றிட்டாய் நீயும்
பனமெனும் நாகை நாதர் பதம்பணிந் தருள்சேர் நெஞ்சே ..

பாடல் : 5 

இருவினைப் பகுதியாலே எடுத்திந்தத் தேகந்தன்னை
மருவிய நானான் என்று  மாயையில் அழிந்தாய் நீதான்
குருவினாற் குறியைப்பார்த்துக்  குண்டலி வழியே சென்றங்கு
உருவினால் நாகை நாதர் உண்மையை  உணர்வாய் நெஞ்சே ..


விளக்கம் :

ஓமெனும் எழுத்துடன் ஐந்தெழுத்து மந்திரத்தை சேர்த்து செந்தமிழால் தினந்தோறும்
மனதில் தோன்றும் ஆசாபாசங்களையும் காமத்தையும் கன்மத்தையும் அகற்றி நாகை நாதரின்
பாதத்தை நெஞ்சினால் உணர்ந்து அவர் பாதம் சரணடையவேண்டும் .

இவ்வுலகில் நிலையானவர் யாரென்று இரண்டாம் பாடலில் கூறியுள்ளார் . நம்மை ஈன்ற பெற்றோர்களும் ஒரு நாள் இறந்து போவார்கள் , நாம் ஈன்ற மக்களும் ஒரு நாள் அழிந்து போவார்கள் . நம்முடன் வாழ்ந்து நமது வம்சத்தை விருத்தி செய்யும் மனைவியும் ,ஏன் நமது இந்த உடலும் கூட ஒரு நாள் அழிந்து போகும்  ஆனால் நாகை நாதரின் துணை ஒரு நாளும்
அழிந்துபோகாது  என்று கூறுகிறார்.  இது உண்மையும் கூட நமது சித்தர்கள் கட்டிய கோவில்கள் இன்றும் நிலைத்து நிற்க தான் செய்கிறது.

தொடரும் .....
     

http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

திங்கள், 21 நவம்பர், 2011

கணபதி தாசர் எழுதிய நெஞ்சறி விளக்கம்....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

கணபதி தாசர் எழுதிய நெஞ்சறி  விளக்கம்....

இந்த சித்தரைப்பற்றிய வாழ்க்கை விபரம் ஒன்றும் எனக்கு தெரியாது . இருப்பினும் இவர் நாகை நாதரின் மீது அளவு கடந்த பக்தி கொண்டுள்ளதாக பாடல்இயற்றப்பட்டுள்ளது . இதன் மூலம் இவர் நாகை  அருகே வசித்து இருக்கலாம் என நான் கருதுகிறேன் .  இவரைப்பற்றிய விபரம் எவருக்காவது தெரிந்து இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் .

இவர் எழுதிய நெஞ்சறி விளக்கம் 100  பாடல்களை படிப்பதால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பின்வரும் பாடல் மூலம் நம்மால் காணமுடிகிறது.

நூற்பயன் :

கதிதரும்மூலா  தாரக் கணபதி தாசன் சொன்ன
நிதிமணி மாலை யான நெஞ்சறி விளக்கம் நூறும்
துதிசெயும்  அறிவோர் ஞான சோதியின் வடிவமாக
மதியணி நாகை நாதர் மலர்ப்பாதம் பெற்று வாழ்வார் .

நித்தியப் பொருள தான நெஞ்சறி விளக்கம் நூறும்
பத்தியாப் மனத்தில் எண்ணிப் படித்ததன் பயன் காண்போர்கள்
முத்தி மெய்ஞானம் பெற்று மூவர்க்கும் முதல்வராகிச்
சத்தியுஞ் சிவமுந் தோன்றுந் தற்பர மதனுட் சார்வார்

கனகமார் மணிசேர் மூல கணபதி தாசனாக
நினைவினா லறிகட்செப்பும் நெஞ்சறி விளக்கம் நூறும்
வினவியே படிப்போர் கேட்போர் வினையெல்லாம்  அகன்று மெய்யுற்
பணமெனும்   மோட்ச நாலாம் பதம்பெற்றுப் பதத்துள் வாழ்வார் .


வரும் நாட்களில் அவர் இயற்றிய நூறு பாடல்களில் சிலவற்றை நாம் காணலாம்.

  http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

வியாழன், 27 அக்டோபர், 2011

பதினெண்பேரை காணும் மந்திரம்...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
    
"பதினெண்பேரை காணும் மந்திரம்" என்றதும் நமக்கு ஞாபகம் வருவது நமது பதினெட்டு சித்தர்களை தான் அதில் நமக்கு எந்தளவும் சந்தேகம் இல்லை.  இருப்பினும் இந்த பதினெட்டு என்பதில் பலவித கருத்துகள் உள்ளன.  இவற்றை கடந்தவர்கள் தான் சித்தர்கள் என்று ஒரு சாரர் கூறுவார். ஆகையால் தான் ஐயப்பசுவாமிக்கு பதினெட்டு படிகள் அமைத்தனர் . இந்த பதினெட்டு படியின் தன்மையை உணர்ந்தால் தான் ஐயப்ப சுவாமி போல் மரணமில்லா பெருவாழ்வை நம்மால் அடையமுடியும் என்ற தத்துவத்தை தான் நமது மூதாதையார்கள் செய்துவிட்டு போயிருக்கிறார்கள். ஆனால் அதனை உணர்ந்தவர்கள் வெகு சிலரே இவ்வுலகில் உள்ளனர்.

தமிழர்களின் ஞான பொக்கிஷமான ஞானக்கோவையில் இருந்து பதினெட்டு சித்தர்களை தரிசிக்கும் முறையை நிஜானந்த போதம் பின்வருமாறு கூறுகிறது.

நிஜானந்த போதம் : 41 

செய்ததமிழ் தனையறிந்து  பதினெண் பேரைச்
   செம்மையுடன் காண்பதற்கு மூலங் கேளு
சைதன்ய மானதொரு தன்னைப் போற்றிச்
   சதாகாலம் ஓம் சிங்ரங் அங்சிங் கென்று
மெய்தவறாப் பூரணமா யுருவே செய்தால்
   வேதாந்த சித்தரைத்தான் வசமாய்க் காண்பாய்
உய்தமுடன் அவர்களைத்தான்  வசமாய்க் கண்டால்
   உத்தமனே சகலசித்துக் குதவியாமே...


"ஓம் சிங்ரங் அங்சிங் " -என்று குறிப்பிட்டு உள்ளார்கள் .

முயற்சித்து பார்ப்போம் சித்தர்களை காண. ....

 
என்றும்-சிவனடிமை-பாலா.

புதன், 26 அக்டோபர், 2011

அனைத்து உள்ளங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  ,

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ....

இத்திருநாளில் மனதில் உள்ள  அனைத்து தீய எண்ணங்களையும் சுட்டெரித்துவிட்டு நல்ல எண்ணங்களுடன் ஒரு இனிய வாழ்க்கையை தொடருங்கள் .

உங்களால் மனதில் உள்ள தீய எண்ணங்களை குறைக்கமுடியவில்லைஎன்றால் பதிநென்மர் சித்தர்களின் பாதங்களை இத்திருநாளில் சரணடையுங்கள் .

குரு யாரென்று தெரியாதவர்களுக்கும் ஆன்மிகம் என்றால் என்ன என்று தெரிய விரும்புவர்களும் சற்குரு அகத்தியரின் பாதங்களை சரணடையுங்கள் .

அவரை அடைய விரும்பும் உள்ளங்கள் கீழ்வரும் மந்திரங்களை கூறலாம் .

சத்தியமே அகத்தியம் ,அகத்தியமே சத்தியம் .

ஓம் அகத்தியரே போற்றி ஓம் .

ஓம் குருமுனியே போற்றி ஓம்

குருநாதரின் காயத்ரி மந்திரம் ..

ஓம் தத்புகுஷ்யா வித்மஹே
லோபமுத்ரா சமேதாயே தீமஹி
தன்னோ அகஸ்திய ப்ரோசோத்யாத்..

ஓம் அகத்தீசாய வித்மஹே
பொதிகை சஞ்சார தீமஹி
தன்னோ ஞானகுரு ப்ரோசோத்யாத்.


மேற்கண்ட மந்திரங்களை தினந்தோறும் 108 முறை காலையும் ,மாலையும்  செபிப்பவர்களுக்கு வேண்டும் வரங்களை அள்ளி தருவார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.  இது அனுபவ வாக்காகும்.

கடந்த பதிவில் கூறிய கதவு என்பது லலாட கதவாகும். வாசி பயிற்சியை கொண்டு அந்த கதவினை திறந்தால் மரணமில்லா பெருவாழ்க்கையை நம்மால்  அடைய முடியும் என்பது சித்தர்களின் கூற்றாகும் . இதனைப்பற்றி காகபுசண்டர் தமது பெருநூல் காவியம் -1000 த்தில் வெகு தெளிவாக கூறியுள்ளார்.


 http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

வியாழன், 20 அக்டோபர், 2011

குரு என்பவர் யார் ?

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  ,

குரு என்பவர் யார் ? என்ற கேள்வியை பார்க்கும்போதே எனக்கு தலை சுற்றுகிறது. எனக்கு தெரிந்த கருத்துகளை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

யாரையும் நாம்  தரக்குறைவாக  பேசக்கூடாது . ஏனென்றால் நமக்கு தெரிந்த விசயங்களை விட நமக்கு தெரியாத விஷயங்கள் தான் இவ்வுலகில் அதிகம் உள்ளது.

இதை தான் அவ்வை அம்மையாரும் அழகாக கூறுவார் //கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு //.

பொதுவாக நதிமூலம் ரிஷி மூலம் பார்க்க கூடாது என்று கூறுவார்கள் . இதற்க்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தினை கூறுவார்கள் .  நதி என்பது மலைகளில் தோன்றி பல நாடு நகரங்களை வளம் கொழிக்க வைத்துவிட்டு இறுதியில் கடலில் கலக்கிறது.
மலையில் அதன் குணம் மூலிகை நிறைந்ததாக இருக்கும் . நகரங்களில் அது மாசுப்பட்டு இருக்கும் இறுதியில் எப்படி இருக்கும் என்பதை நம்மால்  கணிக்க முடியாது.

இதனை ஏன் ரிஷிகளுடன் ஒப்பிட்டு பார்த்தார்கள் என்று பார்த்தால் நமக்கு ஆச்சர்யமாக தான் இருக்க செய்கிறது .   ஒருவன் எப்படி வாழ்ந்தான் ?எப்படி வாழ்ந்து கொண்டு இருக்கிறான் ? எப்படி வாழ்வான் ? போன்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தாலே போதும் ரிஷி என்பது என்னவென்று புரியும் .

நதி -பாரபட்சமின்றி எல்லா இடத்தில் பாய்ந்து அனைவரையும் வாழ வைக்கும்.
ரிஷி -பாரபட்சமின்றி எல்லா மக்களையும் நேசித்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவேண்டும்.

இவ்வுலகில் எல்லாரும் கூறும் மந்திரம் ...

       மாதா பிதா குரு தெய்வம்.- இதனை எந்த மதத்தினாராலும் மறுக்க முடியாது.

மாதா -இவ்வுலகில் நம்மை முதலில் அறிமுக படுத்துபவள் .
பிதா  -இவ்வுலகில் நமக்கு வெளியுலக வாழ்க்கையை அறிமுக படுத்துபவர் .
குரு   -இவ்வுலகில் தெய்வம்/வாழ்க்கை  என்ற தத்துவத்தை விளக்குபவர் .
தெய்வம் - குருவின் அருளோடும் துணையோடும் தெய்வத்துடன் ஒன்றி போதல் .

//ஒன்றும் இல்லாத பரவெளியே தெய்வம்//

ஆகையால் தான் இவ்வுலகில் பிறக்கும் எல்லாரும்  முதலில் அம்மா என்றும் பின் அப்பா என்றும் கூறி பிற்காலத்தில் படிக்கும் காலத்தில் ஐயா என்று வணங்கி இறுதியில் சிவசிவ என்றோ கோவிந்தா என்றோ வாழ்க்கை முடித்து கொள்கிறோம்.
அம்மா -> அப்பா -> ஐயா ->இறைவா
மேற்கூறியதில் ஒன்று குறைந்தாலும் கூட நமக்கு சிக்கல் தான் .

நமது வாழ்க்கை எப்படி ஒத்து போகிறது என்று நீங்களே பாருங்கள் . இதில் இடையில் வரும் "குரு " என்பது தான் பிரச்சனையே . எப்படி இந்த பிரச்னையை சமாளிப்பது என்பது தான் மதி.

கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகளை நினைத்து பெற்றோர்கள் அஞ்சுவார்கள் ஏனென்றால் ரெண்டாம்கெட்ட வயசு என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என்று .  அதுபோல தான் குருவை தேர்ந்து எடுப்பதிலும் நமக்கு நிறைய பயம். என்னவேண்டுமானாலும் நடக்கலாம்.

இன்று எந்த செய்தித்தாளை எடுத்தாலும் போலி சாமியார்கள் கைது , கற்பழிப்பு வழக்கு , கொலை வழக்கு போன்ற செய்திகள் தான் நமது கண்களில் படுகிறது.  அப்படி இருக்க எப்படி உண்மையான குருவினை எப்படி  கண்டுபிடிப்பது ? ரொம்ப கஷ்டமான கேள்வி .

"கதவை திற காற்று வரட்டும் "- என்ற வார்த்தையில் பல அர்த்தங்கள் உண்டு. இதில் எந்த கதவு என்பது தான் பிரச்சனையே !. ஆக மொத்தம் கதவை திறக்க வேண்டும்.

நாளை திறக்கலாம் ...


http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.