திங்கள், 4 ஜூலை, 2011

மகாலிங்கத்தின் பிறந்த நாள் .....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

எனது மகனின் பிறந்த நாளுக்கு ஆசிர்வதித்த அனைத்த நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

முகம் தெரியாத உள்ளங்கள் வாழ்த்துவது என்பது உண்மையிலே மிகச் சிறந்தது. 
எவ்வித எதிர்ப்பார்ப்பையும் எதிர்பாராமல் வாழ்த்துவது அதைவிடச் சிறந்தது.

எனது மகனின் பிறந்த நாளன்று மதியம் கௌதம புத்தர் அறக்கட்டளையில் அன்னத்தானம் நடைப்பெற்றது . காது கேளாதோர் மற்றும் பேச முடியாத நிறைய குழந்தைகள் அங்கு இருக்கிறார்கள்.  அவர்கள் கூறிய நன்றி வார்த்தையும் ,அவர்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்ததையும் நான் கண்டபோது எனது இரண்டு கண்களும் குளமாகி விட்டது .

அழகான பெண் குழந்தைகள் ஆனால் பேசமுடியவில்லை இருப்பினும் மகாலிங்கத்தை(என் புதல்வன் ) தூக்கி கொண்டு அவர்கள் கொஞ்சியத்தை என்னால் மறக்க முடியாது.

அங்குள்ள முதியவர்களிடம் அவன் விளையாடியதை நினைக்கும் போது ரொம்ப சந்தோசமாக இருந்தது. அவர்களுடன் நாங்களும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவினை உண்டோம். 
வாழ்வில் மிக சந்தோசமான நாளாக அது அமைந்தது.  இந்த நிகழ்ச்சி எனக்கு ஒரு மருந்தாக (மன நோய்க்கு )அமைந்தது .

என்னை ஈன்ற என் பெற்றோர்கள் கூட என்னை கூப்பிட மனமில்லாதவர்களாக உள்ள இந்த நிலையில் யாரும் ஆதரவற்ற பிஞ்சு உள்ளங்களை பார்த்த போது எனக்கு உலகமே ஒரு மாயை என்ற தத்துவம் உணர்ந்தது.

சித்தர்களை வழிபடுவதும் அவர்களின் வாழ்வியல் பாதையில் நடப்பதும் என்பது சாதாரண விஷயம் அல்ல .

அவர்களின் வழிகாட்டுதல் படி நான் சாதி , சமயங்களை வெறுத்து கலப்பு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறேன். திருமணத்தினால்  நான் அனைத்தையும்(பெற்றோர்களை ) இழந்துவிட்டேன்.

உயிருடன் இருக்கும் என்  ஐயா மற்றும்  அம்மாவை(பெற்றோர்கள் )வாயார கூப்பிட முடியாத அளவிருக்கு நான் பாவியாகிவிட்டேன் . ஆகையால் தான்  நான் உலகில் உள்ள அனைத்து உள்ளங்களையும் ஐயா என்றும் அம்மா என்றும் கூப்பிட்டு வருகிறேன்.

பெற்ற தாயே ஆயினும் கலப்பு என்பதை விரும்பமாட்டாள் போல் இருக்கிறது.

உண்மையிலே எனக்கு சித்தர்கள் நடத்துக்கின்ற ஒவ்வொரு பரிட்சையும் வித்தியாசமாக தான் இருக்கிறது. அதில் இதுவும் ஒன்று.  இருப்பினும் அவர்களின் கருணையால் அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி அடைந்து வருகிறேன்.

இதனையே பட்டினத்தார் பின்வருமாறு கூறுகிறார்..

பிறக்கும்பொழுது  கொண்டுபோவதில்லைப்  பிறந்துமண் மேல்
இறக்கும்பொழுது  கொண்டுபோவதில்லைப்  இடை நடுவில்
குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்த தென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக்கென் சொல்லுவேன் கச்சி ஏகம்பனே ..

அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
  அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ
பிள்ளை எத்தனை எத்தனை பெண்டிரோ
   பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ
    மூடனாய் அடியேனும் அறிந்திலேன்
இன்னம் எத்தனை எத்தனை சன்மமோ
    என்செய்வேன் கச்சி ஏகம்ப நாதனே ..
  
மகாலிங்கத்துடன் சதுரகிரி சென்றதை நாளைய பதிவில் காணாலாம் ...

என்றும்-சிவனடிமை-பாலா.

3 கருத்துகள்:

  1. மனமார வாழ்த்துகிறோம் பாலா அவர்களே,

    சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே

    என்னும் முதுமொழியையும் தாண்டி
    தங்கள் மகாலிங்கத்துக்கு புண்ணிய பயனையும்
    சேர்த்து தரும் தாங்கள் வணக்கத்துக்குரியவரே.

    நன்றி.

    சிவயசிவ
    http://sivaayasivaa.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. நம்பிக்கையோடு இருக்கும் நல்லோரை இறைவன் என்றும் கைவிடுவதில்லை.

    வாழ்த்துக்கள்.

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு