செவ்வாய், 28 ஜூன், 2011

எனது மகனின் முதலாமாண்டு பிறந்த நாள்(29/06)

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

எனது மகனின் முதலாமாண்டு பிறந்த நாள் வருகின்ற புதன்கிழமை (29 /06  ) எனது இல்லத்தில் நடைபெறுகிறது .

சித்தர்  முழக்கங்களை படித்து வரும் சித்தர்களின் ஆசி பெற்ற உங்களின் ஆசிர்வாதங்களை   என்னுடைய புதல்வனுக்கு வழங்கும்படி அடியவர்களின் அடியை பற்றி வேண்டிகொள்கிறேன்.

அவருடைய பெயர் ஜெயசிவமகாலிங்கம்.

எல்லா தடைகளையும் உடைத்தெறிந்து முழுக்க முழுக்க சதுரகிரியின் சந்தனத்தில் விழைந்தவர் .

அவர் அவதரித்தே ஒரே சுவாரஷ்யமான கதை தான். அதைப்பற்றி வரும் நாள்களில் பகிர்ந்து கொள்கிறேன்.  இப்புவியில் ஜனனம் எடுப்பதற்கு முன்பே சித்தர்களின் ஞான கோவையை முழுவதும் அறிந்தவர்.

உங்களின் பூரண ஆசிகளை மனமார எதிர்ப்பார்க்கும் .....


நாளை மதியம் பெரம்பலூரில் உள்ள  கௌதம புத்தர் அறக்கட்டளையில் இருக்கும் காது கேளாதோர் மற்றும் முதியோர்களுக்கு அன்னத்தானம் நடைபெறும்.

இது விளம்பரத்திற்கு அல்ல , அவர் அவதரித்தருக்கு பின் தான் என் வாழ்வில் நிறைய மாற்றம் ஏற்பட்டது அதில் இதுவும் ஒன்று ..

என்றும்-சிவனடிமை-பாலா.

வியாழன், 23 ஜூன், 2011

பட்டினத்து அடிகளின் பூரணமாலை தொடர்ச்சி 61-->102

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு , 

இன்றைய பதிவுடன் பட்டினத்து அடிகளின் பூரணமாலை முற்றுபெறுகிறது . இதற்க்கான விளக்கம் கூடிய விரைவில் வரைய முயற்ச்சிக்கிறேன் .  இதுகாறும் இப்பதிவினை படித்து வந்தும், பலருடன் இதனை பற்றி பேசியவர்களும் நிச்சயம் கூடிய விரைவில் ஞானத்தை பெறுவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை .
உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளிலும் இறைவன் நீக்கமற நிறைந்துள்ளார் என்பதை தான் பின்வரும் பாடல்கள் கூறுகிறது. 

இறைத்தன்மையை  அகத்திலும் புறத்திலும் காண முயலுங்கள் . இதுவே ஞானத்தின் ஆரம்பம்.
 61 ) வானில் கதிர்மதியாய் வளர்ந்த பின் ஒன்று ஆனது போல்
         ஊன் உடலுக்குள்ளிருந்த உயிர்ப்பறியேன் பூரணமே !

 62 ) பொய்யும் புலையும் மிகப்பொருந்தி வீண் பேசலின்றி
         ஐயோ உனை உரைக்க அறிகிலேன் பூரணமே !

 63 ) நிரந்தரமாய் எங்கும் நின்று விளையாடினதைப்
        பரம் அதுவே எனைப் பதம் அறியேன் பூரணமே !

 64 ) கொல்வாய் பிறப்பிப்பாய் கூட இருந்தே சுகிப்பாய்
         செல்வாய் பிறர்க்குள் செயல் அறியேன் பூரணமே !

 65 ) வாரிதியாய்  வையம் எல்லாம் மன்னும் அண்டபிண்ட எல்லாம்
         சாரதியாய் நின்ற தலம் அறியேன் பூரணமே !

 66 ) வித்தாய் மரமாய் வெளியாய் ஒளியாய் நீ
         சத்தாய் இருந்த தரம் அறியேன் பூரணமே !

 67 ) தத்துவத்தைப்  பார்த்து மிகத் தன்னை அறிந்த அறிவால்
         உய்த்து உனைத்தான் பாராமல் உய்வாரோ பூரணமே !

 68 ) ஒன்றாய் உயிராய் உடல் தோறும் நீ இருந்தும்
         என்றும் அறியார்கள் ஏழைகள் தாம் பூரணமே !

 69 ) நேற்றும் என்றும் நாளை என்றும் நினைப்பு மறப் பாய்படைத்தும்
         மாற்றமாய் நின்ற வளம் அறியேன் பூரணமே !

 70 ) மனம் புத்தி சித்தம் மகிழ் அறிவு ஆங்காரமதாய்
         நினைவாம் தலமான நிலை அறியேன் பூரணமே !

 71 ) உருப்பேதம் இன்றி உய்ந்த சப்த பேதமாய்க்
         குருப்பேதமாய் வந்த குணம் அறியேன் பூரணமே !

 72 ) சட்சமய பேதங்கள் தான் வகுத்துப் பின்னும் ஒரு
         உட்சமயம் உண்டென்று உரைத்தனையே பூரணமே !

 73 ) முப்பத்திரண்டு உறுப்பாய் முனைந்து படைத்த உள்ளிருந்த
         செப்பிடு வித்தைத் திறம் அறியேன் பூரணமே !

 74 ) என்னத்தான் கற்றால் என் ? எப்பொருளும் பெற்றால் என் ?
        உன்னை அறியாதார் உய்வரோ ?  பூரணமே !

 75 ) கற்றறிவோம் என்பார் காணார்கள் உன்பதத்தைப்
         பெற்றரியார் தங்களுக்குப் பிறப்பு அறுமோ பூரணமே !

 76 ) வான் என்பார் அண்டம் என்பார் வாய் ஞானமே பேசித்
         தான் என்பார் வீணர்  தனை அறியார் பூரணமே !

 77 ) ஆதி என்பார் அந்தம் என்பார் அதற்குள் நடுவாய் இருந்த
         சோதி என்பார் நாதத் தொழில் அறியார் பூரணமே !

 78 ) மூச்சென்பார் உள்ளம் என்பார் மோனம் எனும் மோட்சம் என்பார்
         பேச்சென்பார்  உன்னுடைய பேர் அறியார் பூரணமே !

 79 ) பரம் என்பார் பானு என்பார் பாழ் வெளியாய் நின்ற
         வரம் என்பார் உன்றன் பேர் அறியார் பூரணமே !

 80 ) எத்தனை பேரோ எடுத்தெடுத் தான் உரைத்தார்
         அத்தனை பேருக்கு ஒன்றானது அறிகிலேன் பூரணமே !

 81 ) நகார மகாரம் என்பார் நடுவே சிகாரம் என்பார்
        வகார யகாரம் என்பார் வகை அறியார் பூரணமே !

 82 ) மகத்துவமாய்க்  காம மயக்கத்துக் குள்ளிருந்து
         பகுத்தறிய மாட்டாமல் பயன் இழந்தேன் பூரணமே !

 83 ) உண்மைப் பொருளை உகந்திருந்து பாராமல்
         பெண் மயக்கத்தாலே பிறந்து இறந்தேன் பூரணமே !

 84 ) வாயார வாழ்த்தி மகிழ்ந்து உனைத்தான் போற்றாமல்
         காயம் எடுத்து கலங்கினேன் பூரணமே !

 85 ) சந்திரனை மேகமது தான் மறைத்த வாறது போல்
         பந்தமுற யானும் உனைப் பார்க்கிலேன் பூரணமே !

 86 ) செந் தாமரைத்தாளை தினந்தினமும்  போற்றாமல்
         அந்தரமாய் நின்றங்கு அலைந்தேன் நான் பூரணமே !

 87 ) நீர்மேல் குமிழி போல் நிலையற்ற காயம் இதைத்
        தாரகம் என்றெண்ணி நான் தட்டழிந்தேன் பூரணமே !

 88 ) நெஞ்சம் உருகி நினைந்து உனைத்தான் போற்றிநெடு
         வஞ்சககத்தைப் போக்க வகை அறியேன் பூரணமே !

 89 ) எள்ளுக்குள் எண்ணெய்போல்  எங்கும் நிறைந்திருந்து
         உள்ளம் அறியாது உருகினேன் பூரணமே !

 90 ) மாயாப் பிரபஞ்ச மயக்கத்திலே விழுந்தே
         ஓயாச் சனனம் ஒழிந்திலேன் பூரணமே !

 91 ) பூசையுடன் புவன போகம் எனும் போக்கியத்தால்
         ஆசையுற்றே நானும் அறிவழிந்தேன் பூரணமே ! 

 92 ) படைத்தும் அழித்திடுவாய் பார்க்கில் பிரமாவெலுத்தைத்
         துடைத்துச் சிரஞ்சீவியாய்த் துலங்குவிப்பாய் பூரணமே !

 93 ) மந்திரமாய்ச் சாத்திரமாய் மறைநான்காய் நீ இருந்த
         தந்திரத்தை நான் அறிய தகுமோ தான் பூரணமே !

 94 ) அல்லாய்ப் பகலாய் அனவரது காலம் எனும்
         சொல்லாய்ப் பகுத்த தொடர்பறியேன் பூரணமே !

 95 ) நரகம் சுவர்க்கம் என நண்ணும் இரண்டு உண்டாயும்
        அரகரா என்பது அறிகிலேன் பூரணமே !

 96 ) பாவபுண்ணியம் என்னும் பகுப்பாய்ப் படைத்து அழித்திங்கு
         ஆவலையுண்டாக்கி வைத்த அருள் அறியேன் பூரணமே !

 97 ) சாந்தம் என்றும் கோபம் என்றும் சாதிமதங்கள் என்றும்
         பாந்தம் என்றும் புத்தி என்றும் படைத்தனையே பூரணமே !

 98 ) பாசம் உடலைப் பசு அதுவும் தான் உயிராய்
        நேசமுடன் நீ பொருளாய் நின்றனையே பூரணமே!

 99 ) ஏதில் அடியார் இரங்கி இகத்துள் வந்துன்
         பாதம் அதில் தாழப் பரிந்தருள்வாய் பூரணமே !

 100 ) நானேநீ நீயே நான் நாம் இரண்டும் ஒன்றானால்
           தேனின் ருசியது போல் தெவிட்டாய் பூரணமே !

 101 ) முடிவில் ஒரு சூனியத்தை முடித்து நின்று பாராமல்
           அடியில் ஒரு சூனியத்தில் அலைந்தேன் பூரணமே !.

 102 ) பூரணமாலை தனை புத்தியுடன் ஒதினருக்கு
           தாரணியில் ஞானம் தழைப்பிப்பாய் பூரணமே !.

                                    பூரணமாலை முற்றும்.
 என்றும்-சிவனடிமை-பாலா.

புதன், 22 ஜூன், 2011

பட்டினத்து அடிகளின் பூரணமாலை -->51-60

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

சித்தர்களை பற்றி எழுவது என்பது சாதாரண செயல் அல்ல ,அவர்களின் கருணையால் மட்டும் தான் எழுத முடியும் இந்த பூரனமாலையை எழுத ஆரம்பித்த போது இருந்த வேகம் இப்போது என்னிடம் இல்லை . இருப்பினும் அடியேனின் பிழையை மன்னித்து அவர்களின் கருணை பார்வை எம்மேல் பட்டு மீண்டும் ஆவலுடன் பல சித்தர்களின் பாடல்களை தொடர்ந்து எழுத வேண்டும் என்ற எண்ணத்தை நடைமுறை படுத்த வேண்டும் என்று பதிநென்மர் சித்தர்களின் பாதங்களை தொட்டு வணங்கி  கேட்டு கொள்கிறேன்.

விளக்கம் : 41 -->50 ..
//நரம்பு தசை தோல் எலும்பு நாற்றத்துக்குள்ளிருந்து//-இந்த ஜீவன் வாழும் இடத்தினை பற்றி குறிப்பிடுகிறார்
//சிலந்தியிடை நூல்போல்  சீவசெந்துக் குள்ளிருந்த //-பந்த பாசங்களை பற்றி குறிப்பிடுகிறார் .
//குருவாய் பரமாகிக் குடிலை சத்தி நாதவிந்தாய் //-பரம்பொருள் வாழும் குடில் என்று குறிப்பிடுகிறார்.
//ஒளியாய் கதிர்மதியாய் உன் இருளாய் அக்கினியாய் //-இறைவனின் உருவமானது எப்படி வெளிப்படும் என்பதை குறிப்பிடுகிறார்.

//இடையாகிப் பிங்கலையாய் எழுந்த சுழுமுனையாய்//-இங்கு உடலை இடைகலையாகவும் உயிரை பிங்கலையாகவும் ஜீவனை சுழுமுனையாகவும் குறிப்பிடுகிறார்.
//மூலவித்தாய் நின்று முளைத்து உடல்தோறும் இருந்து//-தாம் எவ்வாறு கருத்தரித்து இந்த உலகில் வாழ்ந்து வளர்கிறோம் ஆனால் எமன் வரும் நாளை நம்மால் அறிந்து கொள்ளமுடியாமல் போகிறது. அவன் வரும் நாளை அறியும் கணக்கு தெரிந்தவர்கள் தான் சித்தர்கள். வாசியை கொண்டு அவனை வெல்ல முடியும் வேறொரு வழி எதுவும் கிடையாது. .

//உள்ளும் புறம்புமாய் உடலுக்குள் நீ இருந்தது//-உடலில் சிவனை காணுதல் .
//தாயாகித் தந்தையாய்த் தமர் கிளைஞர் சுற்றம் எல்லாம் //-பந்த பாசங்களில் சிவனை காணுதல்.
//குலங்கள் எழு வகையில் நின்ற குறிப்பு அறியேன்//-சிவனை அறிதல்
//ஆணாகிப் பெண்ணாய் அலியாகி வேற்றுருவாய் //-ஆண் ,பெண் பேதமின்றி கூறுதல் .

பூரணமாலை தொடர்ச்சி....

51 ) வாலையாய்ப் பக்குவமாய் வளர்ந்து கிழம் தானாகி
       பாலையாய் நின்ற பயன் அறியேன் பூரணமே !

52 ) பொய்யாய்ப் புவியாய்ப் புகழ்வா ரிதியாகி
       மெய்யாகி நின்ற வியன் அறியேன் பூரணமே!

53 ) பூவாய் மணமாகிப் பொன்னாகி  மாற்றாகி
       நாவாய்ச் சொல்லான நயம் அறியேன் பூரணமே !

54 ) முதலாய் நடுவாகி முப்பொருளாய் மூன்றுலகாய்
       இதமாகி நின்ற இயல் அறியேன் பூரணமே !


55 ) ஊனாய் உடல் உயிராய் உள் நிறைந்த கண்ணொளியாய்த்
       தேனாய் ருசியான திறம் அறியேன் பூரணமே !

56 )  வித்தாய் மரமாய் விளைந்த கனியாய்ப் பூவாய்ச்
        சித்தாகி நின்ற திறம் அறியேன் பூரணமே !

57 ) ஐவகையும் பெற்றுலக அண்டபகிரண்டம்  எல்லாம்
       தெய்வமென நின்ற திறம் அறியேன் பூரணமே !


58 ) மனமாய்க் கனவாகி மாய்கையாய் உள்ளிருந்து
       நினைவாகி நின்ற நிலை அறியேன் பூரணமே !

59 ) சத்திசிவம் இரண்டாய்த் தான் முடிவில் ஒன்றாகிச்
       சித்திரமாய் நின்ற திறம் அறியேன் பூரணமே !

      
60 ) பொறியாய்ப்  புலன் ஆகிப் பூதபேதப் பிரிவாய்
        அறிவாகி நின்ற அளவறியேன் பூரணமே !..



http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

திங்கள், 20 ஜூன், 2011

பட்டினத்து அடிகளின் பூரண மாலை தொடர்பில் பின்னடைவு....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு   ,

 கடந்த ஒரு வாரமாக என்னால் எந்தவொரு பதிவுகளையும் பதிவு செய்ய முடியவில்லை . இதற்காக முதலில் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.  தினந்தோறும் எனக்கு சித்தர்களின் உத்தரவு வந்தால் தான் என்னால் எழுதமுடியும் . 

பல அன்பர்கள் என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கடந்த வாரம் பேசினார்கள். எல்லாருக்கும் உள்ள ஒரே ஆவல் புண்ணிய ஆத்மாக்களுடன் எப்படி தொடர்பு கொள்வது என்று தான் ?. 

இந்த தொடர்பு பூர்வ  ஜென்ம பலனை கொண்டுதான் வரும். இதனை விட்டுவிட்டாலும் இதன் தாக்கம் இன்று வரை எனக்குள் நடந்து கொண்டு தான் இருக்கிறது .  எனக்கு மிகவும்  வேண்டப்பட்ட இரண்டு நண்பர்கள் கடந்த மாதம் வந்து இக்கலையை கற்றுகொண்டார்கள் . இதில் ஒருவருக்கு கொஞ்சம் தான் அதிர்வலைகள் வந்தது. 
மற்றொரு நண்பருக்கு நல்ல அதிர்வலைகள் வந்தது .

நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை பாதிக்கப்பட்டபோது அவரின் நிலையை பற்றி அருமையான தகவல்கள் அவருக்கு கிடைத்தது. எல்லாரும் கைவிட்ட நிலையில் மகா அவதார் பாபாஜியின் கருணையால் இன்று நலமாக உள்ளார் . ஏனெனில் அந்த நண்பருக்கு வழிகாட்டியாக பாபாஜி வந்துள்ளார்.

எல்லாமே பூர்வ ஜென்ம பலம் .

நம்ப முடியாத பல ஆச்சர்ய தகவல்கள் நமக்கு வழிக்காட்டிகளின் மூலம் நமக்கு கிடைக்கும். 

இது ஒரு வகையான மருத்துவ முறை தான் . இதனால் மனதில் தோன்றும் எண்ணங்களை களைய முடியும், எதிர்கால திறனை அறிந்து கொண்டு நமது வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக்கொள்ள முடியும்.

"கலைகள் உம்மை தேடிவரும் காலன் வருமுன் "

"எம்மை பற்றி "-இந்த வலைப்பூவில் உள்ள நிழற்படமானது நான் அல்ல ஆனால் அதனைப்போல் நான் ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் பதஞ்சலி சித்தர் அவர்களின் உருவ படத்தினை வைத்திருக்கிறேன். 

இந்த படத்தை யாரோ ஒரு ஓவியன் வரைந்து இருக்கிறான் என்ற எண்ணம் என் மனதிலும் ,எல்லார் மனதிலும் உள்ள ஒரு மிகப்பெரிய சந்தேகம் ஆகும்.

ஆனால் உண்மையிலே இந்த உருவத்தை போல் ஒரு உருவத்தை நேரில் நீங்கள் தரிசிக்க நினைத்தால் உங்கள் நிலை எப்படி இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள் .

பதஞ்சலியாரின் தெய்வ தரிசனம் எமக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் 
( ஞாயிற்று கிழமை) கிடைத்து . அதன் அனுபவத்தை கூடிய விரைவில் பகிர்ந்து கொள்கிறேன். 


அந்த சித்தரின் தரிசனம் இனிமேல் யாருக்கும் கிடைக்காமல் போய்விட்டதே  என்ற மன ஆதங்கம் தான் என்னை கடந்த நான்கு நாட்களாக பாடாய்ப்படுத்துகிறது .

பட்டினத்து அடிகளின் பூரணமாலை முடிந்த பிறகு பதஞ்சலியாரின் தரிசனத்தை பற்றி எழுதுகிறேன்.

தொடரும்....
 என்றும்-சிவனடிமை-பாலா.

வியாழன், 9 ஜூன், 2011

பட்டினத்து அடிகளின் பூரணமாலை 41 -> 50

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

பூரணமாலை தொடர்ச்சி...

41 ) நரம்பு தசை தோல் எலும்பு நாற்றத்துக்குள்ளிருந்து
        வரம்பரிய மாட்டாமல் மயங்கினேன் பூரணமே !

42 ) சிலந்தியிடை நூல்போல்  சீவசெந்துக் குள்ளிருந்த
        நலந்தனைத் தான் பாராமல் நலம் அழிந்தேன் பூரணமே !

43 ) குருவாய் பரமாகிக் குடிலை சத்தி நாதவிந்தாய்
        அறுவை உருவானது அறிகிலேன் பூரணமே !

44 ) ஒளியாய் கதிர்மதியாய் உன் இருளாய் அக்கினியாய்
        வெளியாகி நின்ற வியன் அறியேன் பூரணமே !

45 ) இடையாகிப் பிங்கலையாய் எழுந்த சுழுமுனையாய்
        உடல் உயிராய் நீ இருந்த உளவறியேன் பூரணமே !


46 ) மூலவித்தாய் நின்று முளைத்து உடல்தோறும் இருந்து
        காலன் என அழிக்கும் கணக்கு அறியேன் பூரணமே !

47 ) உள்ளும் புறம்புமாய் உடலுக்குள் நீ இருந்தது
       எள்ளளவும் நான் அறியாது இருந்தேனே பூரணமே !

48 ) தாயாகித் தந்தையாய்த் தமர் கிளைஞர் சுற்றம் எல்லாம்
        நீயாகி நின்ற நிலை அறியேன் பூரணமே !

49 ) விளங்கு புள்ளூர் வன அசரம் விண்ணவர் நீர்ச் சாதிமனுக்
       குலங்கள் எழு வகையில் நின்ற குறிப்பு அறியேன் பூரணமே !

50 ) ஆணாகிப் பெண்ணாய் அலியாகி வேற்றுருவாய்
        மாணாகி நின்ற  வகையறியேன் பூரணமே !

விளக்கத்தை நாளைய பதிவில் காணலாம். ...

என்றும்-சிவனடிமை-பாலா.

புதன், 8 ஜூன், 2011

பட்டினத்து அடிகளின் பூரணமாலை 31 -> 40

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  ,

பூரணமாலை தொடர்ச்சி ....
31 ) கருவாய் உருவாய்க் கலந்து உலகெல்லாம் நீயாய்
         அருவாகி நின்றது அறிகிலேன் பூரணமே !.

விளக்கம்  : நாம் எவ்வாறு உருவானோம் என்று உணரபெற்றாலே இந்த பாடலுக்கான விளக்கம் புரியும்.  பெற்றோர்களின் உறவினால் அவர்களுக்கு தெரியாமல் அருவமாகி பின் உருவமாகி பின் தான் நாம் இவ்வுலகில் பிறக்கிறோம்.   நம் உடலில் இருந்து வெளியாகும் கோடிகணக்கான சுக்கிலத்தில் இருந்து ஒரே ஒரு அணு மட்டும் சென்று ஒரு அழகிய உயிரை உருவாக்க கருவாக அமைகிறது.  இதனையே தான் சித்தர்களும் ,ஞானிகளும் இறைவனை உருவமாக வழிபடுவதை விட அருவமாகவே அதிகம் வழிப்பட்டதாக காண்கிறோம்.  இறைவன் எல்லா உயிர்களிலும் மறைமுகமாகவே உள்ளான் என்பதை அறியாமல் போனேனே என்று புலம்புகிறார். இதனையே தான் கொல்லா நோன்பு இருக்கவேண்டும் என்று இராமலிங்க அடிகளார் கூறுகிறார். எல்லாவுயிர்களையும் தம்முயிர்களை போல என்ன வேண்டும்.

32 ) செம்பொன் கமலத் திருவடியைப்  போற்றாமல்
        பம்பை கொட்ட ஆடும் பிசாசானேன் பூரணமே !

விளக்கம் : இறைவனின் திருவடியை  போற்றி வணங்கவேண்டும் .

33 ) எனக்குள்ளே நீ இருக்க  உனக்குள்ளே நான் இருக்க
        மனக்கவலை தீர வரம் அருள்வாய் பூரணமே !

விளக்கம் : மனக்கவலை தீர வேண்டும். ஏனெனில் இறைவன் வாழும் இந்த உடல் அமைதியாக இருக்க வேண்டும்.  மருந்தினால் குணப்படுத்த முடியாத ஒரே நோய் மன நோய் தான்.  நம் உடம்பினுள்ளே இறைவன் இருக்கும்போது நாம் ஏன் கவலை கொள்ளவேண்டும்.  நடப்பது கண்டிப்பாக நடந்தே தீரும் அதில் எந்த வித மாற்றம் இல்லை. அப்படி இருக்க என்ன தான் நடக்கும் என்று பார்க்க நினைத்தாலே நம்மை சுற்றி எந்த நோயும் , பிரச்சனையும் அணுகாது.

 
34 ) எழுவகைத் தோற்றத்து இருந்து விளையாடினதை
        பழுதறவே பாராமல் பயன் இழந்தேன் பூரணமே !

விளக்கம் : நாம் வாழும் இந்த தேகத்தை ஏழு வகையாக பிரிக்கிறார்கள். இதனைப்பற்றி இராமலிங்க அடிகளார் அருமையாக பாடி உள்ளார் . அதனையே ஏழு வண்ணங்கள் ஆகவும் பிரிக்கிறார்.  அந்த நிகழ்ச்சி தான் ஒவ்வொரு வருடம் தைப்பூசம் அன்று நடைபெறுவதாக கேள்விப்பட்டு இருக்கிறேன்.

கறுப்புத்திரை -மாயசக்தி
நீலத்திரை -கிரியா சக்தி
பச்சைத்திரை -பராசக்தி
சிவப்புத்திரை - இக்சா சக்தி
பொன்மைத்திரை - ஞான சக்தி
வெண்மைத்திரை - ஆதி சக்தி
கலப்புத்திரை - சிற் சக்தி

இதற்க்கான ஒரு நீண்ட விளக்கத்தை வரும் பதிவுகளில் காணலாம்.

35 ) சாதி பேதங்கள் தனை அறிய மாட்டாமல்
        வாதனையால் நின்று மயங்கினேன் பூரணமே !
 
விளக்கம் : எல்லா சித்தர்களும் சாதி பேதங்களை முற்றிலும் வெறுத்தவர்கள் ஆவார்கள்.  இதனையே குதம்பை சித்தர் பின்வருமாறு கூறுவார்.

"ஆண்சாதி பெண்சாதி யாகும் இருசாதி
  வீண்சாதி மற்றவெல்லாம்  குதம்பாய்
  வீண்சாதி மற்றவெல்லாம் "

"சாதி வேறு என்றே தரம் பிரிப்போருக்கு
 சோதி வேறாகுமடி குதம்பாய் "
 சோதி வேறாகுமடி "


 
36 ) குலம் ஒன்றாய் நீ படைத்த குறியை அறியாமல் நான்
        மலப்பாண்டத்  துள்ளிருந்து மயங்கினேன் பூரணமே !

விளக்கம் : இறைவன் நம்மை படைக்கும்போது ஒரு உயிராக தான் படைக்கிறான் .ஆனால்  நாமோ சாதி வெறி பிடித்து நம்மையே நாம் அழித்து கொள்கிறோம்.

இதனை குதம்பை சித்தர் பின்வருமாறு  கூறுகிறார்.
"ஆதி பரப்பிரமம் ஆக்கும் மக்காலையில்
 சாதிகள் இல்லையடி குதம்பாய்
 சாதிகள் இல்லையடி "

"பார்ப்பாரைக் கர்த்தர் பறையறைப் போலவே
 தீர்ப்பைப் படைத்தாரடி குதம்பாய்
 தீர்ப்பைப் படைத்தாரடி "

37 ) அண்டபிண்ட  எல்லாம் அணுவுக்கு அணுவாய் நீ
        கொண்ட வடிவின் குறிப்பறியேன் பூரணமே !

விளக்கம் : இறைவன் கொண்ட வடிவினை பற்றி குறிப்பு அறியாததை பற்றி கூறுதல் .
38 ) சகத்திரத்தின் மேல் இருக்கும் சற்குருவைப் போற்றாமல்
        அகத்தினுடை ஆணவத்தால் அறிவழிந்தேன் பூரணமே !

விளக்கம் : சற்குருவை போற்றுதல் .
39 ) ஐந்து பொறியை அடக்கி உனைப் போற்றாமல்
        நைந்துருகி நெஞ்சம் நடுங்கினேன் பூரணமே !

விளக்கம் : மெய், வாய், கண் , காது ,மூக்கு ஆகிய ஐம்பொறிகளை அடக்கி உன்னை வணங்கவில்லையே  என்று நெஞ்சம் நடுங்கி புலம்புகிறார்.
40 ) என்னைத் திருக்கூத்தால் இப்படி நீ ஆட்டுவித்தாய்
        உன்னை அறியாது உடல் அழிந்தேன் பூரணமே !

விளக்கம் : விதி எனும் வழியில் நடக்கும் அனைத்தும் உந்தன் திருவிளையாட்டே என்று
     உணரமால் இறைவனை நொந்து கொள்ளுதல் .
தொடரும்...
என்றும்-சிவனடிமை-பாலா.

செவ்வாய், 7 ஜூன், 2011

பட்டினத்து அடிகளின் பூரணமாலை 21 -> 30

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

நேற்றைய பதிவிற்க்கான பின்னூட்டத்தில் ஐயா சங்கர் குருசாமி கேட்டதற்கான விளக்கத்தை பூரண மாலை முடிந்த பிறகு தருகிறேன்.  ஏனெனில் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு பதிவு எழுதவேண்டிய நிலை இருக்கிறது.  எம்மால் முடிந்த வரை விளக்கம் தருகிறேன்.

21 ) வாசிதனைப் பார்த்து மகிழ்ந்து உனைத்தான் போற்றாமல்
        காசிவரை போய்திரிந்து கால் அலுத்தேன் பூரணமே !.

விளக்கம் : வாசி என்றால் சிவா என்பர் சித்தர்கள் . உண்மையான சிவனை அறிந்து கொள்ளவேன்டினால் காசி போக வேண்டிய அவசியம் இல்லை . வாசியை கவனித்தால் போதும் காசிக்கு போக தேவை இல்லை.  பொதுவாக எதுக்கு காசிக்கு நாம் யாத்திரை செல்கிறோம் என்றால் அங்குள்ள சுடலை மயானத்தை பார்க்கிறோம். எண்ணற்ற பிணங்கள் எரிக்கப்படுகிறது . கங்கையும் அங்கு செல்கிறாள் அவர்களின் பாவத்தை கழுவ .இதுப்போன்ற பல அனுபவங்களை நமது மூதாதையர்கள் பாடி சென்று இருக்கிறார்கள். 

காசியில் எரிக்கப்படும் பிணத்தை நாம் பார்க்கும்போது மெய்யென்ற இந்த உடல் பொய் ஆகும் என்பதனை  உணரவேண்டும்  .இதற்காக நாம் காசி வரை செல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை.
நம் உடலில் உள்ள கங்கை என்பது கைலாயத்தில்  உள்ளிருந்து வரும் அமுதமாகும் .அதனை அருந்தி நாம் வாழ ஆரம்பித்தால் பொய் என்ற  இந்த உடலும் மெய் ஆகும். நமது பாவங்களும் அழிக்கப்படும்.  இந்த விளக்கம் தெரியாமல் காசி வரை சென்று கால் அலுத்தேன் என்று புலம்புகிறார்.


22 ) கருவிகள் தொண்ணுற்றாரில் கலந்து விளையாடினதை
        இருவிழியால் பாராமல் ஈடழிந்தேன் பூரணமே !

விளக்கம் :  நமது உடலில் அக கருவிகள் மற்றும் புற கருவிகள் மொத்தம் 96  உள்ளது. அதனைப்பற்றிய விளக்கம் வரும் நாட்களில் காணலாம்.  இத்தகைய கருவிகளில் சிவன் கலந்து விளையாடினதை எனது இரு விழிகளால் காணாமல் அழிந்தேனே என்று கூறுகிறார்.

23 ) உடலுக்குள் நீ நின்று உலாவினதைக் காணமல்
        கடல் மலை தோறும் திரிந்து கால் அழுத்தேன் பூரணமே !

விளக்கம் : சிவன் எங்குள்ளான் என்று தெரியாமல் காடு , மலை ,நகரம் அலைந்து இறுதியில் என்னுள் உலாவினதை அறியாமல் போனேனே என்று புலம்புகிறார்.


24 ) எத்தேச காலமும் நாம் இறவாது இருப்பும்  என்று
        உற்றுனைத்தான் பாராமல் உருவழிந்தேன் பூரணமே ! 
       
விளக்கம் :  நாம் இறக்கமாடோம் என்ற எண்ணத்தை கொண்டு நீ இருக்கும் இடத்தை உற்று பாராமல் என் உடலை அழித்தேன் என கூறுகிறார்.  நாம் சிவனை கண்டால் இறப்பின்றி வாழ முடியும்.  அதற்க்கான வழிமுறையை சித்தர்கள் பாடி சென்றுள்ளார்கள் . உற்றுப்பார்த்தல் என்றல் தியான முறையில் சிவன் இடத்தை அதாவது அருட்பெருஞ்சோதியை காணுதல் என்று விளக்கம் கொள்ளுதல் நல்லது.

25 ) எத்தனை தாய் தந்தை இவர்களிடத்தே இருந்து
        பித்தனாய் யானும் பிறந்து இறந்தேன் பூரணமே !

விளக்கம் : நாம் பல பிறவிகள் எடுத்து இருக்கிறோம் என்று எண்ணும்போது நாம் எத்தனை தந்தை , தாயை பெற்று இருக்கிறோம் என்று நமக்கு தெரியாது.  இதனை நானும் தெரியாமல் பிறந்து இறந்தேன் என புலம்புகிறார். இதனை பார்க்கும்போது நமக்கு பிறக்கும் குழந்தை நமது மூதாதையர்கள் போல இருப்பதாக சொல்லி பெருமை  கொள்கிறோம் . சித்தர்களின் வாக்குப்படி நமது ஐந்து தலைமுறைகளில் இருப்பவர்களில் யாரேனும் ஒருவர் தான் நமக்கு மகனாவோ அல்லது மகளாகவோ பிறக்க வாய்ப்பு  இருப்பதாக கூறுகிறார்கள்.


26 )  பெற்று அலுத்தார்  தாயார் , பிறந்து அலுத்தேன் யானும் ,உன்றன்
        பொன் துணைத்தாள் தந்து புகழ் அருள்வாய் பூரணமே !.

விளக்கம் : பல பிறவிகள் இருப்பதால் என் தாய் என்னை பெற்று அலுத்தார்கள் நானோ பிறந்தே அலுத்தேன் இத்தகைய செயல்கள் மீண்டும் நிகழாமல் என்னை காப்பாற்றி அருள் தருவாய் என புலம்புகிறார்.


27 ) உற்றார் அழுது அலுத்தார் , உறன் முறையார் சுட்டலுத்தார்
        பெற்று அலுத்தார்  தாயார் , பிறந்து அலுத்தேன் பூரணமே !

விளக்கம் :  எனது பிணத்தை பார்த்து என் உற்றோர்கள் அழுதே அலுத்தார்கள் மற்றும் என்னை சுட்டு எரித்தும் அலுத்துபோனார்கள் .  என் தாயார் பெற்றும் நான் பிறந்தும் அலுத்தே போனேனே என்று புலம்புகிறார்.

28 ) பிரமன் படைத்து அலுத்தான் ,பிறந்து இறந்து நான் அலுத்தேன்
        உரமுடைய அக்கினிதான் உண்டு அலுத்தான் பூரணமே !

விளக்கம் : என்னை படைத்த பிரமன் என்னை படித்தே அலுத்து போனான் . நானும் பிறந்தும் இறந்தும் அலுத்து போனேன். என்னை எரித்து எரித்து அக்கினியும் அலுத்து போனான் என்று புலம்புகிறார்.

29 ) எண்பத்து நான்கு நூறாயிரம் செனனமும் செனித்துப்
        புண்பட்டு நானும் புலம்பினேன் பூரணமே !

விளக்கம் : நமது பிறவிகள் மொத்தம் 84000  என்று இதன் மூலம் குறிப்பிடுகிறார். இத்தனை பிறவிகளிலும் நான் புண்பட்டு தான் மாண்டு போனேன் என்றும் கூறுகிறார். பாருங்கள் ஒரு பிறவிக்கே  நாம் எத்தனை பாடுபடுகிறோம் . இன்னும் எத்தனை உள்ளதோ ?

30 ) என்னை அறியாமல் எனக்குள்ளே நீ இருக்க
        உன்னை அறியாமல் உடல் இழந்தேன் பூரணமே !.

விளக்கம் : எனக்குள் நீ இருப்பதை அறியாமல் உடல் இளைத்தேன் என்று புலம்புகிறார்.

என்றும்-சிவனடிமை-பாலா.

திங்கள், 6 ஜூன், 2011

பட்டினத்து அடிகளின் பூரணமாலை 11 -> 20

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  ,

காலத்தின் வேண்டுகோளுக்கிணங்க என்னால் மிகச்சிறிய அளவில் விளக்கத்தைத் தான்  கொடுக்க முடிகிறது .  பட்டினத்து அடிகள் போல எல்லா சித்தர்களும் தங்களின் ஞானத்தைப் பற்றி பாடியுள்ளார்கள் .  அவர்களின் பாடலும் இதனுடன் சேர்த்து தர 
என் மனது ஆவலாக உள்ளது . இருப்பினும் பூரண மாலையை முழுமையாக தரவேண்டும்
என்பதால்  இப் பாடல்களுடன்  சிறிய விளக்கத்தை மட்டும் தற்சமயம் தருகிறேன்.

பட்டினத்து அடிகளின் பூரணமாலை தொடர்ச்சி ....

11 ) ஊனுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல்
       நான் என்றிருந்து நலன் அழிந்தேன் பூரணமே !
     
விளக்கம் : கடவுள் வாழும் ஆலயம் நம் உடலாகும் . 

12 ) மெய் வாழ்வை நம்பி விரும்பி மிக வாழாமல்
       பொய் வாழ்வை நம்பி புலம்பினேன்ப்  பூரணமே!

விளக்கம் : இந்த உடல் மெய்யென்று நம்புதல் .

13 ) பெண்டுபிள்ளை  தந்தை தாய் பிறவியுடன் சுற்றம் இவை
        உண்டென்று நம்பி உடல் அழிந்தேன் பூரணமே !

விளக்கம் : மேற்கூறியவை நாம் இறக்கும்போது நம்முடன் கூட வராதவை  . எல்லாம் மாயை என்று எண்ணுதல் .

14 ) தண்டிகை பல்லக்குடனே  சகல சம்பத்துகளும்
       உண்டென்று நம்பி  உணர்வழிந்தேன் பூரணமே !

 விளக்கம் : உற்றார் ,உறவினர்கள் என்றும் நமக்கு நிலையான  உறவினை 
கொண்டவர்கள் என்று எண்ணுதல் . 

15 ) இந்த உடல் உயிரை எப்போதும் தான் சதமாய்ப்
        பந்தமுற்று  நானும் பதம் அழிந்தேன் பூரணமே !

விளக்கம் : உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவினை கூறுதல் .

16 ) மாதர் பிரபஞ்ச மயக்கத்திலே விழுந்து 
       போதம் மயங்கிப் பொறி அழிந்தேன் பூரணமே !

விளக்கம் :  விலை மாதர்களின் பேச்சினை கேட்டு வாழ்வில் நிலையாமை பற்றி கூறுவது.

17 ) சரியை கிரியா யோகம் தான் ஞானம் பாராமல்
        பரிதி கண்ட மதியது போல பயன் அழிந்தேன் பூரணமே !

விளக்கம் : ஆன்மிகத்தின் அடிப்படையை கூறுவது .

18 ) மண் பெண் பொன்னாசை மயக்கத்திலே விழுந்து
       கண் கேட்ட மாடது போல  கலங்கினேன் பூரணமே !

விளக்கம் : மூன்று ஆசைகள் பற்றி கூறுவது. இதன் மாயையில் சிக்காத மனிதர்களே இல்லை என கூறலாம்.
 மண் ஆசை : மகாபாரதம்
பெண் ஆசை : ராமாயணம்


19 ) தனி முதலைப் பார்த்து தனித்திருந்து வாழாமல்
        அநியாயமாய்ப்  பிறந்திங்கு அலைந்து நின்றேன் பூரணமே !

 விளக்கம் : பிறப்பின் தன்மையை கூறுவது.

20 ) ஈராறு  தன்கலைக்குள்  இருந்து கூத்து ஆடினதை
       இருவிழியால் பாராமல் ஈடழிந்தேன் பூரணமே !..

விளக்கம் :  நமது மூச்சு காற்று வெளியிடும் போது 12  அங்குலமாக போகும். 
அவ்வாறு செலவாகும் வாசியினை பற்றி கூறுவது. இதனைப்பற்றி சிவயோக சாரத்தில் 
வரும் பதிவுகளில் காணலாம்.  
என்றும்-சிவனடிமை-பாலா.

வெள்ளி, 3 ஜூன், 2011

பட்டினத்து அடிகளின் பூரணமாலை ->7 - 10 விளக்கம்...

அன்புள்ள  சித்த உள்ளங்களுக்கு  ,

பட்டினத்து அடிகளின் பூரணமாலையை எழுத ஆரம்பித்த பிறகு , என் மனதில் பல வித எண்ணங்கள்   தோன்றுகிறது . இன்னும் பத்து பாடல்கள் கூட விளக்கம் எம்மால் கொடுக்க முடியவில்லை எனும்போது கொஞ்சம் வருத்தமாகவும் தான் இருக்கிறது. 

விளக்கங்களை ஒரே பதிவில் நம்மால் கொடுக்க முடியும் .ஆனால் எனக்கு தெரிந்த கருத்துகளை இந்த பாடல்களுடன் சேர்த்து கொடுக்கும்போது தான்  கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது.
எனக்கு தெரிந்த சித்தர்களின் யோக நெறிகள் மற்றும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை ,அவர்களின் தத்துவங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றடைவதே எனது  நோக்கமாகும்.

நேற்றைய பதிவில் இமயம் என்பதற்கு இரண்டு இமைகளின் மையம் என்று குறிப்பிட்டு இருந்தேன் . இதற்க்கு நல்ல பின்னூட்ட கருத்துகள் கிடைத்துள்ளது.  இது நமது சித்தர்கள் கூறியவையாகும். நான் ஒரு கருவியாக தான் இங்கு செயல்படுகிறேன் என்பதனை சொல்லிகொள்கிறேன்.

கைலாயம் என்பது நமது உடலில் தான் உள்ளது வேறெங்கும் இந்த உலகில் கிடையாது.  ஆறாவது சக்கரத்தை தாண்டி போனால் நாம் கைலாயத்தை சென்றடைய முடியும்.  யோகிகள் , ஞானிகள் ,சித்தர்களின் ஆத்மா(உயிர் ) கைலாய வழியாக தான் பிரமத்தை அடைகிறது .

 ஏனைய மக்களின் ஆத்மா மூத்திரம், விந்து,மலம், கருவிழி இந்த நான்கு வழியாக தான் எல்லாருடைய உயிரும் பிரியும் இதில் எந்த மாற்றமும் இல்லை . உங்களுக்கு சந்தேகம் இருந்தால் இறக்கும் தருவாயில்  உள்ளவர்களை பாருங்கள் அது உங்களுக்கு புரியும்.
இதனால் தான்  இறந்தவர்களை குளிப்பாட்டி பின்  நாம் அடக்கம் செய்கிறோம் .

"நாதவிந்து தன்னை நயமுடனே "--இதற்கு விளக்கம் தரவேண்டும் என்கிறபோது நான் சில விசயங்களை இங்கு குறிப்பிட்டு தான் ஆகவேண்டும்.

நாதம் என்பது "ஒலி", "சக்தி", "பெண்","வாலை".
விந்து என்பது "ஒளி","சிவன்","சதாசிவம்", "பிரமம்". 

மேற்கூறிய இரண்டும் இரண்டறகலத்தல் ஒரு உண்மையான உறவாகும்.  சாதாரண மக்களாகிய நாம் திருமணம் செய்து கொண்டு பெண்களுடன் உறவு கொண்டு ,தமது சந்ததிகளை பெருக்கிகொள்கிறோம். பிறகு ஞானம் கிடைத்த பிறகு தம் உடலிலே அதனை உணர்ந்து உறவு கொண்டு பேரின்பத்தை அடைகிறோம் .

யோகிகள், ஞானிகள் ,சித்தர்கள் தம் உடலிலே உள்ள பெண்ணை மணந்து அவளை சிவனுடன் இனைய செய்கிறார்கள் . இந்த நிகழ்வின் மூலம் தான் அவர்கள் பேரின்பத்தை  அடைகிறார்கள்.

மூலாதாரத்தில் உள்ள சக்தியை கைலாயத்தில் உள்ள சிவனுடன் சேர்த்து வைத்தாலே பேரின்பமாகும்.  உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்.  புரியவில்லை என்றால் இன்னொரு பதிவில் இதனை விளக்கமாக கூறுகிறேன்.  ஒவ்வொரு உடலிலும் இரண்டு சக்திகள் உண்டு ஆண்மை மற்றும் பெண்மை.  இது சரிசமமாக இருந்தால் பிரச்சனை இல்லை ,இதில் குறைவு ஏற்படும் பொது தான் அது பேடி, அலி என்று மாறுபடுகிறது.  உடலில் உள்ள பெண்மையை ஆண்மை அடைவது தியானமாகும் அதுவே ராஜ யோகமாகும்  . இதற்க்கு தகுந்த பயிற்சியும் முயற்சியும் தேவை.

முறையாக எதனையும் கற்று கொள்ளவில்லை என்றால் விளைவுகள் அதிகமாக இருக்கும்.

எல்லாரும் சொல்வார்கள் சிவனுக்கு இரண்டு பொண்டாட்டி . இதனை நானும் ஒப்புகொள்கிறேன். எல்லாம் தெய்வங்களுக்கும் ரெண்டு பொண்டாட்டி தான் அதில் எந்த மாற்றம் இல்லை . ஒன்று உடலுக்கு மற்றொண்டு உள்ளத்துக்கு(தியானம் , யோகம், ஞானம் ) .

ஒன்று புறவாழ்க்கை(பெண் ) மற்றொண்டு அகவாழ்க்கை(வாலை சக்தி ) .

சிவன் -சக்தி புறவாழ்க்கை , கங்கை -அகவாழ்க்கை
முருகன் -தெய்வானை -புறவாழ்க்கை , வள்ளி -அகவாழ்க்கை
கணபதி -சித்தி -புறவாழ்க்கை , புத்தி -அகவாழ்க்கை
திருமால்- ஸ்ரீதேவி -புறவாழ்க்கை , பூமாதேவி -அகவாழ்க்கை .

நமது மூதாதையர்கள் என்றும் அறிவில் சிறந்தவர்கள் என்பதனை இந்த சான்று ஒன்றே போதும். அவர்கள் கூறியதை நம்மால் தான் புரிந்து கொள்ள முடியவில்லை.


"உச்சி வெளியை உறுதியுடன் பாராமல் "---
   பரவெளியை ,பிரமத்தை பார்த்தல் -உடலை விட்டு வெளியே செல்லுதல் .

"மூக்கு முனையை முழித்திருந்து பாராமல் "---   வாசி பயிற்சி ஆரம்பிக்கும் இடம்.

"இடைபிங் கலையின் இயல்பறிய மாட்டாமல் "--- நமது உடலில் ஓடும் நாடிகளின் இயல்பை அறிவது . இதனைப்பற்றி ஒரு விளக்கமான பதிவினை வரும் நாட்களில் பகிர்கிறேன்.

 தொடரும்....
என்றும்-சிவனடிமை-பாலா.

வியாழன், 2 ஜூன், 2011

பட்டினத்து அடிகளின் பூரணமாலை ->4 - 7 விளக்கம்...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  ,

"உருத்திரனை இருதயத்தில் உண்மையுடன் பாராமல் "---

 நமது நெஞ்சு பகுதியில் இருதயத்திருக்கு அருகில் "அனாகத சக்கரம் "அமைந்துள்ளது.  இதன் உயிர் மந்திரம் 'யம்' ஆகும். இதன் அதிபதி உருத்திரன் .இது 12  இதழ்களை கொண்டுள்ளது .
இதன் பஞ்ச பூதத் தலம் "காற்று" ஆகும் .  இங்கு நாம் கவனிக்கவேண்டியவை  நமது உடலில் நுரையீரல் எங்குள்ளதோ அதற்க்கு அருகில் தான் இந்த சக்கரம் உள்ளது என்று அழகாக பாடிவைத்து விட்டு சென்றுவிட்டார்கள் . இங்குள்ள வர்மம் "நேர்மைய வர்மம்"  ஆகும்.


"கருத்தழிந்து நானும் கலங்கினேன் "---இதற்க்கு வாசியை  பற்றிய உண்மையை தெரியாமல் தான் கலங்கியதாக கூறுகிறார் .

"விசுத்தி மகேசுவரனை விழி திறந்து பாராமல் "--
இது நமது தொண்டை பகுதியில் உள்ளது. இதன் அதிபதி மகேசுவரன் . இது 16  இதழ்களை கொண்டுள்ளது . இதன் பஞ்ச பூதத் தலம் "ஆகாயம் "  ஆகும்.  இதன் உயிர் மந்திரம் 'ஹம்' ஆகும். இங்குள்ள வர்மம் "தும்மி வர்மம்"  ஆகும்.

"பசித்துருகி நெஞ்சம் பதறினேன் "--இந்த சக்கரத்தின் தன்மையை உணர்ந்து கொண்டால் ,நம்மால் உணவின்றி வாழமுடியும்.  யோகிகள் உணவில்லாமல் பல நூறாண்டுகள் வாழும் சூட்சமம் இந்த சக்கரம் தான். 
இக்கால சூழ்நிலையில் "கிரியா பாபாஜி தியான " மையத்தில் இந்த கலை சொல்லி தரபடுகிறது.
நம்மால் ஒவ்வொரு சக்கரத்தில் இருந்தும் சுவாசத்தை பண்ண முடியும். ஆனால் அதனை முறையோடு குருவின் துணைகொண்டு பயில வேண்டும்.

இந்த கலையின் மகிமையை அறிந்து கொள்ளாமல் பசித்து உருகி நெஞ்சம் பதறினேன் என கூறுகிறார் .


" நெற்றி விழியுடைய நிர்மல சதாசிவத்தைப்"-- இது நமது உடலில் உள்ள நெற்றி கண் ஆகும். இதற்க்கு  ஞான கண் அல்லது அருட்பெருஞ்சோதி அல்லது ஆக்கினா என்று பல பெயர்களால் வழங்கப்படுகிறது.  இதன் அதிபதி சதாசிவம் . இதன் உயிர் மந்திரம் 'ஓம்' . இது ஈரதழ்களை உடையது .  

ஒருவனின் வாழ்வில் ஞானம் தோன்றுவது இந்த சக்கரத்தின் மூலம் தான். இது பிட்யூட்டரி சுரப்பி என்று அறிவியல் உலகத்தில் அறியபடுகிறது.  நமது உயிர் தங்கும் இடம் இந்த இடம் தான். சிவனின் உருவத்தை காண்பதும் இந்த இடம் தான்.

சித்தர்கள் இமயம் என்பதை இரண்டு மையங்களுக்கு இடையில் உள்ளது என்று சூட்சமாக சொல்லிவிட்டு சென்று விட்டார்கள் .  நமது இரண்டு புருவ மையங்களுக்கு இடையில் உள்ள சக்கரத்தின் தன்மையை அறிவது தான் இமயமலையை அறிவது. அதனை விட்டுவிட்டு இமயமலைக்கு செல்வதினால் ஒன்றும் லாபம் இல்லை . ஏனெனில் நான் மூன்று முறை இமயமலைக்கு  சென்று வந்தும் எனக்கு ஒன்றும் தெரியவில்லை (இது எனது  தனிப்பட்ட கருத்து ). 

இந்த சக்கரத்தின் மூலம் எண்ணற்ற சித்துகளை நம்மால் பெற இயலும். ஆனால் இந்த நிலையை அடையும் போது சித்துகளும் மாயை என்ற எண்ணம் தோன்றும்.

"புத்தியுடன் பாராமல் பொறி அழிந்தேன் "--இதன் மகத்துவத்தை புத்தி கொண்டு அறியாமல் அழிந்தேன் என புலம்புகிறார்.

"நாதவிந்து தன்னை நயமுடனே "--இது ஏழாவது சக்கரம் ,சிலர் இதனை சக்கரம் என்று எடுத்து கொள்வது இல்லை . இதற்க்கு சகச்த்தாரம் என்று பெயர் அல்லது கைலாயம் என்று பெயர். இது நமது தலையின் மூளைக்கு மேல் உள்ளது. இது ஆயிரம் இதழ்கள் கொண்டது.  இதற்க்கு அதிபதி யாரும் இல்லை. இதற்க்கு மந்திரம் எதுவும் இல்லை . இதுவே சர்வமும் சிவம் என்ற நிலையில் யோகிகள் இருக்கும் நிலை ஆகும்.

இதுவே சமாதி நிலையை அடைய உதவும் சக்கரம் ஆகும்.
இங்கு தான் சிவமே நாம் நாமே சிவம் என்று தத்துவத்தை உணரும் இடமாகும். 
சதாகாலம் பிரபஞ்சத்தில் கலந்திற்க்கும் இடம் இதுவாகும்.

ஆகையால் தான் இமயமலையில் உள்ள கைலாசத்திற்கு நாம் எல்லாம் யாத்திரை போகிறோம்(இது புறவழிபாடு).
இதனையே நமது சித்தர்கள் உடலின் உள்ள சக்கரங்களை கொண்டு அதனை அடைந்து இருக்கிறார்கள்(இது அகவழிபாடு ) .

நமது மூதாதையர்கள் செய்த அனைத்து புறவழிப்பாட்டினயும் உணர்ந்து அதனை அகவழிப்பாடாக மாற்ற வேண்டியது நமது கடமையாகும்.

தொடரும்.... 

என்றும்-சிவனடிமை-பாலா.

புதன், 1 ஜூன், 2011

பட்டினத்து அடிகளின் பூரணமாலை ->1 - 3 விளக்கம்...

 அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
ஐயா பட்டினத்து அடிகள் பல தலையாத்திரைகள் மேற்கொண்டு அதன் மூலம் கண்ட அனுபவம் மற்றும் உடன் இருந்தோர்களின் அனுபவம் இதனைக் கொண்டு தம் உடலையே சோதனைச்சாலையாக மாற்றினார்.

அந்த சோதனையின் விளைவு தான் இந்த பூரணமாலையாகும் .
இவ்வுலகில் வாழ்ந்த மற்றும் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற எல்லா மகான்கள் மற்றும் யோகிகள் கூறும் அனுபவங்கள் எல்லாம் ஒன்றாகவே  தான் இருக்கின்றது .


நமது உடலை பஞ்ச பூதங்களாக பிரித்து அதன் மூலம் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளை அழகாக பாடலில் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள்.  

சித்தர்கள் என்றும் புறவழிப்பாட்டினை விரும்பாதவர்கள்
இருப்பினும் மக்களின் வாழ்க்கைக்கு ஏற்ப தமது பகுத்தறிவினை கொண்டு பலவித தெய்வங்களை உருவாக்கினார்கள் என்று நாம் இதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம் .

முழுமுதல் கடவுள் -விநாயகர், கணபதி
படைக்கும் கடவுள் - பிரம்மா
காக்கும் கடவுள் - திருமால்
கர்மாக்களை அழிக்கும் கடவுள் - உருத்திரன்  .
வசியபடுத்துதல்(சுவாசம்) - மகேசுவரன்
ஐம்பொறிகளை கட்டுபடுத்துதல் -சதாசிவம்

முதலில் உள்ள பாடலில் மூலதாரத்தில் உறங்கிக்கொண்டு இருக்கும் குண்டலினி சக்தியை உணராமல் மதி மறந்தேன் என கூறுகிறார் . இது முக்கோண சக்கரத்தில் அமைந்து இருக்கும் எனவும் கூறுகிறார்.  இது மிகவும் முக்கியமான சக்கரம் ஆகும்.

மூலம் + ஆதாரம் = மூலாதாரம் . நாம் வாழும் இந்த வாழ்க்கைக்கு ஆதராமே இது தான். இது பாம்பு மாதிரி தலைகீழாக உறங்கி கொண்டு இருக்கும் . இதில் உள்ள மூச்சுகளை கொண்டு தான் நாம் உயிர் வாழ முடியும். 
நம்மிடம் உள்ள எல்லா மூச்சுகளும்  முடிந்துவிட்டால் நமது பிராணன் நம்மை விட்டு விலகி மரணம் என்ற ஒரு நிகழ்வு ஏற்படும். இது பிறக்கும்போதே நமக்கு நிச்சியக்கபட்டு விடும். 

இங்கு நான்கு இதழ் கொண்ட வடிவத்தை காணலாம். 
இதன் அதிபதி கணபதி . இதன் உயிர் மந்திரம் 'லம்' .
இது பஞ்ச பூதங்களில் மண் அல்லது பூமி . இது அமைந்துள்ள இடம் ஆசனவாய்க்கு அருகில் உள்ளது .


இரண்டாவது பாடலில் சுவாதிட்டானம் சக்கரத்தைப்பற்றி பாடுகிறார்.
இது படைக்கும் தொழிலை செய்கிறது ஆகையால் தான் இதன் அதிபதி பிருமா என்று வைத்தார்கள் . இது ஆறு இதழ்கள் கொண்டது .இதன் மந்திரம் 'வம்'. இதன் சக்கரத்தில் அதிக நேரம் தியானம் செய்ய கூடாது என கூறுவார்கள் . இது காமத்தை அதிகம் தூண்டி இனவிருத்தியை செய்யும் சக்கரம் ஆகும்.  இது இனப்பெருக்க உறுப்புகள் அமைந்துள்ள இடத்திருக்கு அருகில் அமைந்துள்ளது .  இதன் சக்கரம் முறையாக செய்யல படவில்லைஎன்றால் மலடு, குழந்தை இன்மை போன்றவை ஏற்படும்.

"உந்திகமலத்து உதித்து நின்ற பிருமாவைச்"--இங்கு கூறப்படும் கமலம் ஆறு இதழ்கள் கொண்டது . இதனைக் காணாமல் அழிந்தேன் என கூறுகிறார். இதன் பஞ்சபூத  தலம் 'நீர்' ஆகும். இதன் மூலம் நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் உயிரனங்கள் முதலில் தோன்றியது நீர் நிலையில் தான் என்ற அறிவியல் நுட்பம் நமக்கு புரிகிறது.

மூன்றாவது பாடலில் உள்ள "நாபிக் கமல நடுநெடுமால் காணாமல்'--என்று  கூறப்படும் சக்கரம் மனிபூரகமாகும் . இதன் அதிபதி திருமால் . இது பத்து இதழ்கள் கொண்டது. இதன் உயிர்  மந்திரம் 'ரம்'.  இது அமைந்துள்ள இடம் தொப்புள் கொடி. இந்த சக்கரத்தில் நீண்ட நேரம் தியானம்  செய்தால் நமது ஸ்தூல சரிரம் நம்மை விட்டு விலகும்.  ஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்றுதல் , கூடுவிட்டு கூடு பாய்தல் போன்ற சித்துகள் கிடைக்கும் இடம்.  இதன் பஞ்சபூத  தலம் 'நெருப்பு' ஆகும். ஆகையால் தான் நமது வயற்றை அக்கினி குண்டம் என்று கூறுவார்கள் .
நாம் உண்ட உணவினை நன்கு செரித்து நமது உடலுக்கு தேவையான அனைத்துவித சத்துகளும் நமக்கு இங்கு இருந்து தான் கிடைக்கிறது .ஆகையால் தான் இது காக்கும் கடவுள் என்ற ஸ்தானத்தை பெறுகிறது . அதருக்குண்டான கடவுள் திருமால் என்று வைக்கப்பட்டுள்ளது.

"ஆவிகெட்டு யானும் அறிவழிந்தேன்"- இத்தகைய சிறப்புகளை அறியாமல் இந்த உடலை கொண்டு நான் அறிவழிந்தேன் என்று புலம்புகிறார்.


தொடரும் .....
என்றும்-சிவனடிமை-பாலா.