புதன், 25 ஜனவரி, 2012

பால் கறத்தல்-1

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  ,

உலகில் உள்ள அனைத்து பாலுட்டிகளும் பாலை குடித்துதான் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறது .  நம்முடைய வாழ்க்கை
தோன்றுவதில் இருந்து மறையும் வரை உள்ள அனுபவங்களை நினைவு கூர்ந்து நம்மை கொஞ்சம் மாற்றி கொண்டு வாழ்ந்தால் எவ்வித இல்லல்களும் இல்லாமல் நம்மால் வாழ முடியும் .

இவ்வுலகில் நாம் பிறந்தவுடன் நம்மை ஈன்ற தாயானவள் தம்முடைய ரத்தத்தையே பாலாக மாற்றி நமக்கு உணவினை தருகிறாள் . நாம் பிறந்தவுடன் நமக்கு எதுவும் தெரியாது , ஏறக்குறைய
முப்பது நாட்களுக்கு பிறகு தான் நமக்கு கண் பார்வை தெரிகிறது. பிறகு தான் தாயானவள் எல்லாரையும் நமக்கு அறிமுகப் படுத்துவாள். 

குழந்தை பருவம் நமக்கு வாழ்வில் இரண்டு முறை வரும் . முதல் பருவத்தில் நமக்கு எதுவும் தெரியாது . இரண்டாவது முறை வரும்போது நாம் சுதாரித்து கொண்டு நம்மை கொஞ்சம் தயார் படுத்தி கொண்டால் நமக்கு சாவே கிடையாது .

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று -என்று கூறிக்கொண்டு இருந்தால் மட்டும் போதாது . குழந்தை போன்ற மனத்தை நாம் பெற முயற்சி செய்ய வேண்டும் .


தாயானவள் தம்முடைய ரத்தத்தில் இருந்து பாலினை உற்பத்தி செய்து நமக்கு தந்து இந்த உலகில் வாழ இடம்  தருகிறாள் .

குருவானவர் நம்முடைய ரத்தத்தில் இருந்து பாலினை உற்பத்தி செய்து
நமக்கு மரணமில்லா பெருவாழ்வை பெற்று தருகிறார்.  இவ்வுலகின் பிரபஞ்ச ரகசியங்களையும் மனிதர்களின் வாழ்க்கை நெறியையும் தெய்வங்களின் தத்துவங்களையும் நமக்கு விளக்கி ஞானம் என்ற பாலினை நமக்கு தருகிறார்.


என்ன ஒற்றுமை பாருங்கள்...

எப்படி நம்மால் பாலினை உற்பத்தி செய்ய முடியும் ? முடியும் வரை முயற்சி செய்ய வேண்டும்.


விளக்கம் தொடரும் ....

என்றும்-சிவனடிமை-பாலா.

செவ்வாய், 24 ஜனவரி, 2012

இடைக்காட்டு சித்தரின் பால் கறத்தல்: 107 to 112

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

இடைக்காட்டு சித்தரின் பால் கறத்தல்:

சாவா திருந்திடப் பால்கற-சிரம்
  தன்னி லிருந்திடும் பால்கற
 வேவா திருந்திடப் பால்கற -வெறும்
  வெட்ட வெளிக்குள்ளே பால்கற .

தோயா திருந்திடும் பால்கற -முனைத்
தொல்லை வினையறப் பால்கற
வாயா லுமிழ்ந்துடும் பால்கற -வெறும்
வயிறார வுண்டிடப் பால்கற .

நாறா திருந்திடும் பால்கற- நெடு
 நாளு மிருந்திடப் பால்கற
மாறா தொழுகிடும் பால்கற - தலை
மண்டையில் வளரும் பால்கற

உலகம் வெறுத்திடும் பால்கற -மிக்க
ஒக்காள மாகிய பால்கற
கலசத்தினுள் விழப்  பால்கற -நிறை
கண்டத்தினுள் விழப் பால்கற

ஏப்பம் விடாமலே பால்கற -வரும் 
 ஏமன் விலக்கவே பால்கற
தீப்பொறி யோய்ந்திடப் பால்கற -பர
சிவத்துடன் சாரவே பால்கற

அண்ணாவின் மேல்வரும் பால்கற -பேர்
அண்டத்தி லூரிடும் பால்கற
விண்ணாட்டி லில்லாத பால்கற -தொல்லை
வேதனை கெடவே பால்கற .

பால் கறக்க எல்லாரும் தயாரா இருக்கிங்களா ?

விளக்கம் வரும் நாட்களில் தொடரும் ...

என்றும்-சிவனடிமை-பாலா.

திங்கள், 23 ஜனவரி, 2012

இடைக்காட்டு சித்தரின் பால் கறத்தல்..

அன்புள்ள  சித்த உள்ளங்களுக்கு ,

நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். சித்தர்களைப்பற்றி பேசுவதற்கும் எழுதுவதற்கும் கூட நமக்கு அவர்களுடைய அனுமதி தேவைப்படுகிறது.

என்னுடைய பணியின் சுமை மற்றும் என்னுடைய மக்கள் நலம் இல்லாமை போன்ற காரணங்களால் என்னால் எதுவும் எழுதமுடியவில்லை .
எழுதாத ஒவ்வொரு நாளும் வீண் என்றே என்னும் எண்ணம் உடையவன் நான் . இருப்பினும் அவர்களுடைய அனுமதியின்றி எதுவும் நடக்காது என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் கிடையாது .

வரும் வாரங்களில் இடைக்காட்டு சித்தரின் பாடலில் இருந்து பால் கறத்தல் என்ற பகுதியில் வரும்  சில  பாடல்களை நாம் இங்கு காணலாம்.

பால் கறத்தல் :

இந்த உலகத்தில் நாம் இறக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் .   நம்மால் இதை செய்து காட்ட முடியுமா ? என்று நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது . ஆனால் இதையே வெற்றிகரமாக செய்து காட்டியவர்கள் தான் நம்முடைய சித்தர்கள் . 

பிறப்பு என்று ஒன்று இருந்தால்
இறப்பு என்பதும் உண்டு -என்பதில் மாற்று கருத்து கிடையாது . இதுவே இயற்கையின் நியதி மற்றும் விதியும் கூட. ஆனால் நம்முடைய சித்தர்கள் இயற்கையின் விதியையும் கூட மாற்ற சக்தி மிக்கவர்கள் என்பதில் ஐயம் இல்லை .

அவர்கள் கூறும் கருத்துகளை நன்கு உணர்ந்து அவர்களை பூசித்து வந்தாலே போதும் மீதியை அவர்கள் பார்த்து கொள்வார்கள் .

அவர்கள் கூறும் கருத்துகள் எல்லாம் ஒரே மாதிரியானவை . எல்லா சித்தர்களும் கூறும் கருத்துகள் ஒன்றே .

உன்னை உணர் என்பது தான்.

வரும் நாட்களில் சில பாடல்களை உங்கள் முன் சமர்பிக்கிறேன்.


என்றும்-சிவனடிமை-பாலா.