வியாழன், 31 மார்ச், 2011

அகத்தியர் ஞானம்‍ 9ல் 3


அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு,

பாட‌ல்:3

பார‌ப்பா நால்வேத‌மும் நாலும் பாரு 
    ப‌ற்றாசை வைப்ப‌த‌ற்கோ பிணையோகோடி;
வீர‌ப்பா ஒன்றொன்றுக்கு கொன்றை மாறி
   வீணிலே ய‌வர் பிழைக்குச் செய்த‌ மார்க்க‌ம்
தேர‌ப்பா தெருத்தெருவே புலம்பு வார்க‌ள்
   தெய்வ‌நிலை ஒருவ‌ருமே காணார் காணார்
ஆர‌ப்பா நிலைநிற்க‌ப் போறா ரையோ!   
   ஆச்ச‌ர்ய்ங் கோடியிலே யொருவ‌ன் தானே.

விள‌க்க‌ம்: விளக்கம் கொடுக்கும் அளவுக்கு எனக்கு தகுதியில்லையென்றாலும் , எனக்குத்தெரிந்த கருத்துகளை தான் உங்கள் முன்னிலையில் வைக்கிறேன். தவறு இருப்பின் சுட்டிக்காட்டவும்.

நான்கு வேத‌ங்க‌ளையும் பார்க்கும்போது அவ‌ற்றை எழுதியவர்க‌ள் மிக‌ச்சிற‌ந்த‌ ரிஷிக‌ள் ம‌ற்றும் முனிவ‌ர்க‌ள் ஆவார்கள். ஆனால் இவை அனைத்தும் ப‌ற்றாசை வைப்ப‌த‌ற்க்கு உதவும் என‌வும், ந‌ல்ல‌து என‌வும் தீய‌து என‌வும் கூறி அவ‌ர‌வ‌ர் பிழைப்ப‌த‌ற்குச் அவர்(ருத்திரன்) ஏற்ப‌டுத்தி கொடுத்த‌ மார்க்கம் இதுவாகும். உல‌கில் மனிதன் இய‌ற்கையோடு இய‌ற்கையாக வாழ்ந்த போது  அவனுக்கு எந்த‌வித‌ வேத‌மும் தேவைப‌ட‌வில்லை. நாள‌டைவில் நாகரீக‌த்தின் போர்வையில் அவன் வந்தபோதுதான் போட்டிகள், பொறாமைக‌ள் மற்றும் களவு போன்றவை ஏற்ப‌ட்ட‌போது தான் உலகில் நீதி ம‌ற்றும் தர்ம‌ம் தோன்றிய‌து. அத‌ன்பின் தான் வேத‌ உப‌நித‌ட‌ங்க‌ள் தோன்றிய‌து.

தாங்க‌ள் இய‌ற்றிய‌ நூல்க‌ளை கொண்டு தெருத்தெருவே புல‌ம்புவார்க‌ள் ஆனால் உண்மையான‌ தெய்வ‌த்தை அவர்கள் அறிய‌மாட்டார்கள் எனவும். இந்த உலகில் யாருமே நிலையாய் இருக்க போவதில்லை  எனவும், இருப்பினும் தெய்வ‌ம் என்ற‌ த‌த்துவ‌த்தை எவ‌ன் ஒருவ‌ன் உணர்கிறானோ அவ‌னே நிலையாய் நிற்பான் என‌வும், அவ‌ன் கோடியில் ஒருவ‌ன் தான் இருப்பான் என‌வும் கூறுகிறார்.

கொஞ்ச‌ம் க‌டின‌மான பாதை தான்.....


என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

புதன், 30 மார்ச், 2011

அகத்தியர் ஞானம்‍ 9ல் 2

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு,
அகத்தியர் ஞானம்‍ 9ல் 2

மோட்சம் பெறுவதற்குச் சூட்சஞ் சொன்னேன்
  மோசமுடன் பொய்களவு கொலை செய்யாதே
காய்ச்ச‌லுட‌ன் கோப‌த்தைத் த‌ள்ளிபோடு
  காசினியிற் புண்ணிய‌த்தைக் க‌ருதிக்கொள்ளு
பாய்ச்ச‌லது பாயாதே பாழ் போகாதே
  பலவேத சாஸ்திரமும் பாரு பாரு
ஏச்சலில்லா தவர் பிழைக்கச் செய்த மார்க்கம்
  என்மக்கா ளெண்ணி யெண்ணிப் பாரீர் நீரே..

விளக்கம்:
 நேற்றைய பாடலில் மோட்சம் பெறுவதற்க்கு வழிமுறையை  சொன்ன குரு நாதர் , அதனுடன்
பொய் ,களவு,கோபம் போன்றவற்றை விலக்கவேண்டும் என கூறுகிறார்.
இந்த பூமியில் புண்ணியத்தை தேடிக்கொள்ள வழிமுறையை கண்டுகொள் எனவும்,
தேவையற்ற‌ வழியில் வாழ்வினை செலுத்தி பாழ்போகாதே என கூறுகிறார்.மற்றும்
பலவித வேத நூல்களை படித்துப்பார் எனவும், இவ்வகையான நூல்களை எழுதியவர்களை
தங்களுக்கு ஏற்ப் தாமே அவர்களே ஏற்படுத்திக்கொண்ட மார்க்கம் எனவும்,
என் மக்களே இதனை எண்ணிப்பாருங்கள் என்று கூறுகிறார்.

http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

செவ்வாய், 29 மார்ச், 2011

அகத்திய மாமுனியின் ஞானம்-1

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

இதுகாறும் சரியை,கிரியை,யோகத்தில் உள்ள அனுபவத்தை உங்களிடம்
பகிர்ந்து கொண்டேன்.
ஞான மார்க்கத்தில் உள்ள அனுபவத்தை யாராலும் விவரிக்க முடியாது ஏனெனில் அதனை அனுபவிக்க தான் முடியும் .

அகத்திய மாமுனியின் ஞானம் பகுதியில் இருந்து ....

சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம்
   சகலவுயூர் சீவனுக்கு மதுதானாச்சு
புத்தியினா லறிந்தவர்கள் புண்ணியோர்கள்
  பூதலத்தில் கோடியிலே ஒருவருண்டு

பத்தியினால் மனமடங்கி நிலையில் நிற்பார்
  பாழிலே மனத்தைவிடார் பரம ஞானி 
சுத்தியே யலைவதில்லைச் சூட்சஞ் சூட்சஞ் 
  சுழியிலே நிலையறிந்தால் மோட்சந் தானே  .

விளக்கம் :
   உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் ஒன்றே தெய்வம். இதனை
அறிந்தவர்கள் இவ்வுலகில் கோடியில் ஒருவருண்டு என்றும் ,
மனதினை அடக்கி தேவையற்ற விசயங்களில் மனதினை
செலுத்தாதவர்களை பரம ஞானி என்றும் கூறுகிறார் .

எங்கும் இறைவனை  தேடி  அலையாமல் உண்மையான சூட்சமத்தை உணர
வேண்டுமெனில் உண்மையான மூலத்தை அறியவேண்டும் ,அந்த மூல ரகசியம் உன் சுழிமுனையிலே தான் இருக்கிறது .அவ்வாறு உள்ள சுழிமுனையின் தன்மையை  உணர்ந்தால் மோட்சம் கிடைக்கும் என்று கூறுகிறார்.

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

திங்கள், 28 மார்ச், 2011

சதுரகிரியின் சந்தன மகிமை அனுபவம்-2 முடிவு.

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

சிவவாக்கியரின் பாடலில் இருந்து இந்த பதிவை ஆரம்பிக்கறேன்...

சிவாயம் என்ற அக்ஷரஞ் சிவனிருக்கும்  அக்ஷரம்
உபாயமென்று நம்புவதற்கு உண்மையான அக்ஷரம்
கபாடம் அற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை
உபாயம்இட் டழைக்குமே சிவாய அஞ்செழுத்துமே

நேற்றைய தொடர்ச்சி ,

 என் சித்தி மற்றும் சித்தப்பாவை பார்த்துவிட்டு ,
கொஞ்சம் பொறுங்கள் என கூறிவிட்டு , மனதில் சதுரகிரியாரை நினைத்துகொண்டு கொஞ்சம் சந்தனமும் ,விபூதியும் அவர்களுக்கு கொடுத்துவிட்டு ,சித்தி மனதில் மகாலிங்கத்தை நினைத்துகொண்டு இந்த சந்தனத்தை சாப்பிடுங்கள் கூடியவிரைவில் உங்கள் நோய் குணமாகும்.
வரும் வெள்ளிகிழமைக்குள் எல்லாம் நல்லபடியாக அமையும் என்று கூறி அவர்களிடம் பிரசாதத்தை கொடுத்தேன்.

உங்கள் குலதெய்வம் அருகில் உள்ளதுதானே என்று கேட்டேன் ,அதற்கு ஆமாம் அருகில் உள்ள அரியலூரில் தான் உள்ளது என்று கூறினார்கள் , மேலும் குலதெய்வத்தை வழிப்பட்டு ஏறக்குறைய ஐந்தாறு வருடங்கள் ஆகிவிட்டது என்று கூறினார்கள்.  நான் உடனே அவர்களைப்பார்த்து , நேராக
உங்கள் குலதெய்வ கோயிலுக்கு சென்று அவர்களிடம் மனமார மன்னிப்பு வேண்டிக்கொண்டு ,எங்களையும் எங்கள் குலத்தினயும் காத்தருளும் வருடாந்தோரும் நாங்கள் மறக்காமல் உங்களை வந்து பார்த்து முறைபடி வணங்குகிறோம் என்று வேண்டிக்கொண்டு ஒரு தீபத்தினை மற்றும் ஏற்றுங்கள் என்று கூறினேன். அவர்களும் அவ்வாறே செய்தார்கள் .

அடுத்த வார  வெள்ளிகிழமை என் சித்தியிடமிருந்து  எனக்கு  போன் வந்தது .
தம்பி அந்த மகாலிங்கம் தான் உன்னை எங்களுக்கு அனுபி வைத்தார் என்று கூறிவிட்டு என் சித்தி அழுதார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை என்ன சித்தி ஆயிற்று என்று கேட்டேன் ,

அதற்க்கு மருத்துவர் அறுவை சிகிச்சை தேவையில்லை என்று கூறிவிட்டு இது எப்படி சாத்தியமாயிற்று என்று குழம்ப ஆரம்பித்துவிட்டார் . ஏனெனில்
ஒரு வாரத்திருக்கு முன்னால் எடுத்த ஸ்கேன் ரிப்போர்ட் படி ,அறுவை சிகிச்சை மற்றுமே வழி என்று கூறியவர், வெள்ளிகிழமை அன்று  செக்குப் செய்த போது எல்லா  ஸ்கேன் ரிப்போர்ட்களும்  நன்றாகவே வந்துள்ளது .
அவர் நிச்சயமாக குழம்பிவிட்டார் . இருப்பினும் என் சித்தப்பா மருத்துவரிடம்
நீங்கள் அறுவை சிகிச்சை பண்ணிவிடுங்கள் என்று கூறியதும் ,டாக்டரோ ஒரே  டென்ஷன் ஆகிட்டார் ,நானோ குழப்பத்தில் இருக்கேன் ,அதில் நீ வேர என்று கூறிவிட்டு, உன் மனைவி நல்ல இருக்கா எந்த ஒரு அறுவை சிகிச்சையும் தேவையில்லை என்று கூறிவிட்டார்.

என் சித்தி உடனே ,பாலா இந்த வாரமே நான் சதுரகிரி யாத்திரை போகிறேன் என்று கூறிவிட்டு அவ்வாறே சென்றும் வந்தார்கள்.

குலதெய்வ வழிப்பாடினால் சொத்து பிரச்சனையும் , சந்தன மகிமையால் நோய் பிரச்சனையும் தீர்ந்து நன்றாக வாழ்ந்து  கொண்டிருக்கிறார்கள்.

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

வெள்ளி, 25 மார்ச், 2011

சதுரகிரியின் சந்தன மகிமை -அனுபவம் -2

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
கடந்த பதிவில் கூறியபடி,
சந்தனத்தை நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அனுப்பி வைப்பதற்க்கு தற்சமயம் என்னிடம் சந்தனம் மிக குறைவாக இருக்கிறது.

எங்களுடைய வழிக்காட்டி ஐயா வெங்கட் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது வருகின்ற அமாவாசைக்கு அப்புறம்
தேவைப்பட்டவர்களுக்கு அவரே அனுப்புவதாக உறுதி அளித்துள்ளார்.

எத்தனையோ பணிகளுக்கு இடையிலும் அவர் தொடர்ந்து சந்தனத்தின் மகிமையை தமக்கு தெரிந்த அன்பர்களிடம் கூறி
அதனால் பலருக்கும் நல்லதொரு நோயற்ற வாழ்வினை ஏற்படுத்தி தந்துள்ளார்.

எனக்கு சதுரகிரி யாத்திரையின் வழிக்காட்டியும் ,எமக்கு திருமணத்தை சதுரகிரியில் நடத்தி தந்த பெருமையும் அவரையே சாரும்.
கலியுகத்தில் அவரைப்போன்ற வழிக்காட்டிகளைப்பெற்றது எங்களது புண்ணியம் என்றே நாங்கள் கருதுகிறோம்.
ஒருவர் இருவரல்ல 40க்கும் மேற்பட்டவர்களின் அனுபவங்களை சான்றுடன் எழுதிவைத்துள்ளார்.

சதுரகிரி யாத்திரைக்கு செல்லும்போது,அங்குள்ள மூலிகைகளால் நமது மனமும் உடலும் புத்துணர்வு பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
பலவித நோய்கள் மூலிகையின் வாசத்தினாலே குணமாகிறது என்பது நாங்கள் கண்கண்ட காட்சியாகும்.

எமது 2வது அனுபவம்....
சதுரகிரி யாத்திரை முடித்துவிட்டு ,வீட்டுக்கு வந்து உறங்கிகொண்டு இருந்தேன்.அப்போது எங்கள் உறவினர் சேலத்தில் இருந்து
இருவர் என்னை பார்க்கவந்திருந்தனர். அவர்கள் மிகப்பெரிய வசதிபடைத்தவர்கள். எமக்கு சித்தி முறை அவர்கள்.
வீட்டுக்கும் வந்ததும் நன்கு உபசரித்தார்கள் ,எங்கள் வீடு விருந்தோம்பலுக்கு பெயர்போனதாகும்.

உறக்கத்திலிருந்து எழுந்தவுடன் அவர்களைப்பார்த்தேன் ,
அவர்களின் முகம் வாடியிருந்தது. என்ன விசயம் என்ற கேட்டேன். அதற்க்கு என் சித்தி,
எனக்கு கர்ப்ப பையில் பிரச்சனை இருக்க்கிறது என்பதால் எனக்கு வருகின்ற
வெள்ளிக்கிழமையன்று அறுவை சிகிச்சை செய்வதாக மருத்துவர் கூறிவிட்டார் என கூறினார்.
எல்லா டெஸ்ட்களும் பண்ணியாகிவிட்டது. கர்பபையை எடுப்பது தான் உடலுக்கு நல்லது என்று மருத்துவர் கூறியதாக என்னிடம் கூறினார்.  அதே நேரம் வீட்டில் சொத்து பிரச்சனை ஏற்பட்டு, கோர்ட்டில் வழக்கு நடப்பதாகவும் கூறினார்.

இருவரின் முகத்தினைப்பார்த்து மிகவும் வேதனையடைந்த நான் என்ன செய்தேன் என்று .

நாளைய பதிவில் காணலாம்.

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

வியாழன், 24 மார்ச், 2011

சதுரகிரியின் சந்தன மகிமை அனுபவம் -1

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு,

நேற்றைய தொடர்ச்சி,

நாங்கள் அனைவரும் பெங்களுருக்கு புறப்பட்டு சென்றுவிட்டோம், பின் அவர் கொடுத்த பிரசாதத்தை என் மனைவிக்கு பார்சலில் தான் அனுப்பி வைத்தேன்.

என் மனைவியோ உடனே சாப்பிடாமால் 2 நாட்கள் கழித்து தான் சாப்பிட ஆரம்பித்தாள். அந்த வாரம் நாங்கள் திருச்சியில் உள்ள
மிகப்பெரிய மருத்துவர் சுந்தர் ராஜனிடம் வெள்ளிக்கிழமை அன்று செக்கப் செய்ய அப்பாய்ன்ட்மென்ட் வாங்கி இருந்தோம்.

முதல் நாள் சாப்பிட ஆரம்பித்தும் ஒன்றும் அவளுக்கு திருப்தி ஏற்படவில்லை, நான் சொன்னேண் அந்த சந்தனம் தீரும் வரை சாப்பிடு
இது சதுரகிரியாரின் பிரசாதம் என்று கூறினேன். இரண்டாவது நாளும் சாப்பிட்டாள் ஒரு மாற்றமும் ஏறபடவில்லை.
மூன்றாவது நாள் சந்தனத்தை சாப்பிட்டபின் அவளுடைய தலையில் மின்னல் பாய்ந்ததுப்போல் அவள் உணர்ந்தாள் .
உடனே எனக்கு போன் செய்து மாமா எனக்கு தலையில் இருந்து ஒரு 50 கிலோ குறைந்ததுப்போல் இருக்கிறது, எனக்கு ரொம்ப சந்தோசமாக
இருக்கிறது என்று கூறினாள்.

எனக்கு ஒரே ஆச்சர்யம், இருப்பினும் வரும் வெள்ளிக்கிழமை அன்று பரிசோதித்து பார்த்துவிடுவோம் என்று கூறினேன்.
பணியின் நிமித்தமாக என்னால் வெள்ளிக்கிழமை செல்லமுடியவில்லை ஆனால் என் மனைவியோ வெள்ளிக்கிழமை அன்று போய் மருத்துவரை
பார்த்து செக்கப் செய்து பார்க்கும் போது, அம்மா உனக்கு ஒன்றுமே இல்லை, உனக்கு சந்தேகம் இருந்தால் ஸ்கேன் பண்ணி பாருங்கள்
என்று கூறிவிட்டார். உடனே ஸ்கேன் எடுத்து பார்த்தால் என்ன ஆச்சர்யம் ,ஒரு பிரச்சனையும் இல்லை என்று மருத்துவர் கூறிவிட்டார்.

எங்களுக்கு தாங்க முடியாத சந்தோசம், நம்ப முடியாத அனுபவம் அது.
அந்த சந்தனத்தை நான் பார்சலில் தான் அனுப்பிவைத்தேன். அன்று முதல் இன்று வரை தலைவலி என்ற பேச்சுக்கு இடமே இல்லை.

நோய் வாய்ப்பட்டவர்களுக்கு நாங்கள் சந்தனத்தை அவர்கள் முகவரிக்கு அனுப்பிவைக்கின்றோம்.

சதுரகிரியாரின் சந்தனம் மூலிகைகளின் சங்கமமாகும்.

 http://gurumuni.blogspot.com/ 
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

புதன், 23 மார்ச், 2011

சதுரகிரியின் சந்தன மகிமை....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  ,

எனது முதல் சதுரகிரி யாத்திரையின் போது ஏற்பட்ட அனுபவத்தின்   ஒரு சிறிய நிகழ்வினை இங்கு பகிர்ந்து  கொள்கிறேன்.

அன்று ஆடி அமாவாசை ,ஏறக்குறைய பதினைந்து லட்சம் மக்கள் பங்கேற்ற ஒரு சிறப்பு வாய்ந்த நாள் அதுவாகும். நானும் என் நண்பன் சக்கரவர்த்தி மற்றும் என் தம்பி ராஜா ஆகியோர் சதுரகிரிக்கு சென்றோம் , அன்றைய இரவில்  நாங்கள் கேள்விப்பட்டவை   எங்களால் நம்பமுடியவில்லை , ஏனென்றால்  நட்சத்திரங்கள் வந்து சதுரகிரியாருக்கு பூஜை செய்யும் என்றும்.  ஆகையால் யாவரும் உறங்காமல் நள்ளிரவு 12  மணி வரை விழிப்புடன் இருந்தோம் . ஆனால் எங்களால் தூங்காமல் இருக்க முடியவில்லை . எல்லாரும் நன்றாக அயர்ந்து தூங்கிவிட்டோம் , விடியற்காலையில் எல்லாரும் பேசிகொண்டார்கள் அருமையான வான விளையாட்டை சித்தர்கள் செய்து காட்டினார்கள் என்று , இதனை கேள்விப்பட்ட நாங்கள் மிகவும் வருத்தப்பட்டோம் .

எல்லாம் அவன் செயல் என நினைத்துகொண்டு அங்கிருந்து கிளம்பி மதுரைக்கு வந்தடைந்தோம்.  அங்கிருந்து நாங்கள் பெங்களுருக்கு புறப்பட தயாராக இருந்தோம். அப்போது ஒரு நபர் எங்களுக்கு அறிமுகமானார்.

பேருந்தில் நாங்க அனைவரும் ஒரே இருக்கையில் உட்கார்ந்து கொண்டோம்.  பிறகு அந்த நபர் எங்களுக்கு முன்னால் இருக்கையில் உட்கார்ந்து இருந்தார் .
வழக்கம் போல எங்கள் சத்சங்கம் ஆரம்பமானது , நாங்கள் தவறவிட்ட அந்த வான ஜால வித்தையை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம்.

இருப்பினும் என்னால் நம்ப முடியவில்லை ,எப்படி நட்சத்திரம் வந்து போகும் என்று விவாதம் செய்து கொண்டு இருந்தோம். அப்போது அந்த நபர் , நீங்கள் நம்ப தயாராக இல்லையென்றால் ,அதை நான் நிருபிக்கிறேன் என்று கூறினார்.

எங்களுக்கு ஆர்வம் அதிகம் ஏற்பட்டு ,எங்கே காட்டுங்கள் என்று கூறினோம் , அப்போது அவர் அவருடைய காமெராவை எடுத்து அந்த நட்சத்திரங்களின் வான ஜாலத்தை காட்டினார் ,  எல்லாருக்கும் ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது அதனைப்பார்க்கும்போது .

அதனைவிட ஆச்சர்யம் என்னவென்றால் , அந்த வீடியோவை நன்றாக ஜூம் பண்ணி பார்த்தால் , இரண்டு நட்சத்திரங்களும் வெவ்வேறு வடிவை கொண்டிருந்ததது .
 ஒன்று பாம்பு போலவும் , மற்றொன்று வேல் போன்றவும் தோற்றமளித்தது.
அதற்குபின் ,அவர் கூறினார் , இவ்விரண்டு நட்சத்திரங்களும் முறையே அகத்தியர் மற்றும் போகர் எனவும் கூறினார்.  ஒவ்வொரு அமாவாசை அன்றும் இரண்டு நட்சத்திரங்கள் தோன்றி சதுரகிரியாரை வழிப்பட்டு பின் திருச்செந்தூர் செல்வதாக ஐதீகம் என்று கூறி எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

அதற்குபிறகு தான் , நாங்கள் எங்களை அறிமுகபடுத்தி கொண்டோம், பின் அவர் தம் பெயரை வெங்கடேஷ் என்று கூறி அவரின் அனுபவங்களை எங்களிடம் பகிர்ந்து கொண்டார் .

அவரின் எல்லா அனுபவங்களுக்கும் அவரிடம் சான்று உள்ளது. சதுரகிரியின் சந்தனத்தைப்பற்றி அவர் ஒரு அனுபவ  நூல் எழுதிக் கொண்டு இருக்கிறார்.

நாங்கள் அனைவரும் சேலம் வரும்வரை அவரிடம் நன்றாக பேசிகொண்டு  சதுரகிரியின் பல ஆச்சர்ய தகவல்களை தெரிந்து கொண்டோம் .

என் மனைவிக்கு தீராத தலைவலி ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள் இருந்தது .
எல்லா மருத்துவர்களும் முயற்சி செய்தும் ஒன்றும் குணமாகவில்லை என்று அவரிடம் கூறினேன் . அப்போது அவர் தம் பையில் இருந்து கொஞ்சம் பஞ்சாமிர்தம் மற்றும் சந்தனத்தை கொடுத்து இதனை உன் மனைவிடம் கொடு. மற்றவற்றை அந்த சதுரகிரியார் பார்த்து கொள்வார் என கூறினார்.

சேலம் வந்தது, அனைவரும் விடைப்பெற்றுக்கொண்டு சென்றுவிட்டோம்.

தற்சமயம், நாங்கள்  எல்லாரும் அவரை  "சேலம் சதுரகிரியார்" என்றே அழைப்போம்.

பிறகு என்ன நடந்தது என்று அடுத்த பதிவில் காண்போம்.

 http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

சிவவாக்கியரின் பாடலில் எமக்கு தெரிந்த கருத்துகள் .....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு,

பணியின் நிமித்தமாக என்னால் கடந்த 2 நாட்களாக பதிவுகளை பதிவு செய்யமுடியவில்லை .
சிவவாக்கியரின் பாடலில் உள்ள கருத்துகள்.
தான் ஞான நிலையை அடைவதற்க்கு முன்னால் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தேன் என்று புலம்புவதாக இங்கு அமைந்துள்ளது.

இந்த உலகில் நான் பல வகையான மலர்களை பறித்து அதனால் இறைவனை அர்ச்சித்து என்ன பயன் கண்டேன்?
இந்த உலகில் நான் பல வகையான மந்திரங்களை செபித்து அதன் மூலம் என்ன பயன் கண்டேன் ?
இந்த உலகில் நான் இறைவன் மேல் கொண்ட பக்தியினால் அவன் மீது மோகம் கொண்டு பல வகையான புண்ணிய நதி நீர்களினால் அவனை அபிசேகம் செய்து என்ன பயன் கண்டேன் ? 
அவனின் அருள் வேண்டும் என்று பல சிவத்தலங்களை சுற்றி வந்து என்ன பயன் கண்டேன்?

இந்த உலகினை கட்டிக்காக்கும் ஈசனின் உண்மையான இருப்பிடத்தை அறிந்த ஞானிகள் , அவனின் சிறப்பு வாய்ந்த தன்மையை அறிந்ததால் உண்மையான பரம் பொருளினை மட்டும் வணங்குவார்கள். அவனின் இருப்பிடத்தை அறிந்து உணர்பவர்கள் அனைவரும்
கண்ட கோவில்களை வணங்க மாட்டர்கள். 
இங்கு கண்ட கோவில் என்பது , மூலைக்கு மூலை எங்கு பார்த்தாலும் நகரங்களில்
பல வகையான சிறிய கோவில்களை கட்டிகொண்டு அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் கூட்டம் ஒன்று இருக்கும். எந்த கோவிலை பார்த்தாலும் நமது கைகள் அந்த ஆலயத்தை நோக்கி மனமார பிரார்த்திக்கும். ஆனால் உண்மையான ஆலயத்தை உணர்ந்தவர்கள்
அவ்வாரு செய்யமாட்டார்கள் என்பது அவரின் கருத்து.
ஊணுக்குள் உள்ளொளியை பார்க்க வேண்டும் ,உண்மையான இருப்பிடத்தை காட்டவல்லவர்களே ஞானிகள் என்று தெளிவுபட கூறுகிறார்.

சிவவாக்கியரின் பாடல்கள் அனைத்தும் மக்களுக்காக எழுதப்பட்டவை .
கீழ்க்கண்ட பாடலினால் என் மனது மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியது. இதனை எழுதிய பின் 2 நாட்கள் எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

மட்பாண்டங்கள் உடைந்தால் கூட அதனை தேவை என்று மக்கள் எடுத்து அடுக்கி வைத்துக்கொள்வார்கள்.
வெங்கலத்தினால் செய்த பாத்திரங்கள் கீழே விழுந்து நசிங்கனாலோ அல்லது உடைந்தாலோ அதனையும் கூட வேனுமென்று எடுத்து வைத்து கொள்வார்கள்.
ஆனால் மாபெரும் சக்தி வாய்ந்த இந்த மானுடல் இறந்த போது நாறுமென்று தூக்கி வீட்டுக்கு வெளியே வைப்பார்கள். இதன் மூலம் என்னில் நீ இருந்து கொண்டு செய்யும் மாயம் என்ன மாயம் ஈசனே என்று கேட்கிறார்.

இந்த உடலின் மதிப்பு மட்பாண்டங்களுக்கு உள்ள மதிப்பு கூட கிடையாது( உயிர் பிரிந்தால்).

உயிர் = ஈசன்= அருட்பெருஞ்சோதி=அல்லா=ஏசு.

கடந்து உள்ளே பாருங்கள்( கட + உள்ளே ) = கடவுள்.
கடம் + உள் = கடவுள் ( கடம் = உடம்பு ,உடல்).


இதனையே பட்டினத்தார் பின்வருமாரு கூருகிறார் .

என்னை யறியாமா லெனுக்குள்ளே நீயிருக்க
உன்னை யறியாமால் உடலழிந்தேன் பூரணமே !

வானென்பார் அண்டமென்பார் வாய் ஞான மேபேசித்
தானென்பார் வீணர் தனையறியார் பூரணமே!

பத்திரகிரியாரின் கருத்து...
மற்றிடத்தைத் தேடியென்றன் வாழ் நாளைப் போக்காமல்
உற்றிடத்தைத் தேடி யுறங்குவது மெக்காலம்!

ஒளியிட்ட மெய்ப்பொருளை உள்வழியிலே யடைத்து
வெளியிட்டுச் சாத்திவைத்து வீடுறுவ தெக்காலம் !

என்னை யறியாம லிருந்துதாட்டுஞ்ச் சூத்திர நின்
றன்னை யறிந்து தவம்பெறுவ தெக்காலம் !

என்னைவிட்டு நீங்காமல் என்னிடத்து நீயிருக்க
உன்னைவிட்டு நீங்கா தொருப்படுவ தெக்காலம் !

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை  

வெள்ளி, 18 மார்ச், 2011

ஞான நிலையில் உள்ளவரின் மன நிலை ...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

எனது சிவ அனுபவங்களை சில நாள்கள் ஒதுக்கி வைத்துவிட்டு ,எமது      குறிக்கோளான சித்தர் பாடல்களை எழுதுகிறேன்.

வருகின்ற வாரம் சதுரகிரியின் சந்தனமகிமை என்ற தலைப்பில் ,எனது வாழ்வில் நடைப்பெற்ற மூன்று முக்கிய  நிகழ்வுகளை மட்டும்  எழுதுகிறேன். இதனை படிக்கும்போது உங்களுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கும்.

என்னுடைய அனுபவங்கள் அனைத்தும் உண்மை அவர்களின் அனுமதியுடன் தான் இதை எழுதுகிறேன். தற்சமயம் நான் ஞான மார்கத்தில் செல்வதால் , நான் எழுதும் சித்தர் பாடல்களை கண்டு என்னை யாரும் சந்தேகம் கொள்ள வேண்டாம் . இந்த நிலையை அடைய கூட அந்த ஆதி சித்தன் அருள் தேவை.

சிவவாக்கியரின் பாடலில் இருந்து ,

 ஞான நிலையில் உள்ளவரின் மன நிலை ....
பண்டுநான் பறித்துஎறிந்த பன்மலர்கள் எத்தனை ?
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை ?
மிண்டராய்த் திரிந்தபோது இறைத்தநீர்கள் எத்தனை ?
மீளவும் சிவாலயங்கள் சூழ்ந்தது எத்தனை ?


அண்டர்கோன் இருப்பிடம் அறிந்த உணர்ந்த  ஞானிகாள் 
பண்டறிந்த பான்மைதன்னை யாரறிய வல்லரோ
விண்டவேத  பொருளையன்றி வேறுகூற வகையிலா
கண்டகோயில் தெய்வமென்று கையெடுப்பதில்லையே ...

மனிதனின் நிலை

மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார்
வெண்கலம் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார்
நண்கலம் கவிழ்ந்தபோது  நாறுமென்று போடுவார்
எண்  கலந்து நின்றமாயம் என்ன மாயம் ஈசனே...


அனுபவங்களும் ,ஆய்வுகளும் தொடரும்....
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

புதன், 16 மார்ச், 2011

கும்பகிரியில் அகத்தியமுனியின் தரிசனம்.


அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,


நேற்றைய தொடர்ச்சி...
மணி  சரியாக 6 . அப்போது வெங்கட் ஐயா, என் மனைவியை அழைத்து தீபம் ஏற்ற சொன்னார்.  தீபம் ஏற்றும்  போது காற்று பலமாக வீசியது. இருப்பினும் 3 முறை  முயன்று ,இறுதியில் தீபம் ஏற்றப்பட்டது.
எல்லாரும் மனமார அகத்தியரை வணங்கிணோம். இருப்பினும் என் மனதில் ஒரே குறை ,மூலவரை பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே  என்று.

ஆலயத்தில் உள்ள  மின் விளக்குகள் அனைத்தும் எரியவில்லை ஏனென்றால் , ஆலயத்தை மூடி 3 மாதமாகிவிட்டது. வெங்கட் ஐயாவிடம் மெதுவாக நான் சென்று  எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்க என்றேன். ஆலயத்தை  உற்றுப்பார்த்தால் ஒரே இருட்டாக இருந்தது.
பின் மனதில் உறுதிக்கொண்டு ,
குருவே சரணம் ,
சத்தியமே அகத்தியம்,
அகத்தியமே சத்தியம் --என்று மனமுறுக குருவை நோக்கி பிரார்த்திதேன்.

என்ன ஒரு ஆச்சர்யம், ஒரு சின்ன ஒளி கீற்று  மூலவரை நோக்கி வந்தது. அது மெர்க்குரி வெளிச்சம் போல் இருந்தது. எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. நன்றாக உற்றுப்பார்த்தேன்.

குருவே சரணம் என்று கூக்குரலிட்டேன். எல்லாரும் ஓடி வந்துப்பார்த்தார்கள் . அனைவருக்கும் ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. எங்கள் அனைவராலும்  மூலவரை நன்றாக பார்க்க முடிந்தது.

அகத்தியர் ஆசிரமத்தில் இருந்து உடன் வந்தவர் ஓடிச்சென்று ,மின்சாரம் ஏதாவது  நின்றுப்போய் வந்ததா எனப்பார்த்தார் . ஆனால் அப்படி ஒரு நிகழ்வு எதுவும் நிகழவில்லை அதே நேரம்  எல்லா சுவிட்சுகளும் ஆப் செய்யப்பட்டுள்ளது ஏனென்றால்  கோவிலை மூடி 3 மாதமாகிவிட்டதால் அதற்க்கும் வாய்ப்பு இல்லை  என உணர்ந்தோம்.  அதன் பின் எல்லாரும் தியானம் செய்ய போய்விட்டோம் .

பொழுது இருட்டாக ஆரம்பித்தது. அனைவரும் எனக்காக காத்திருந்ததனர். பிறகு தியானத்தை முடித்துவிட்டு புறப்பட சென்றோம். அப்போது நான் எல்லார் முன்னிலையிலும்
"அகத்திய  குருவே நீர் உண்மை"- என்பதை உணர்த்திவிட்டீர், மிக்க நன்றி, நாங்கள் புறப்படுகிறோம் என்று கூறினேன்.  அதுவரை இருந்த  அந்த ஒளிக்கீற்றானது  எல்லார் முன்னிலையிலும் மெதுவாக மறைந்தது    அந்த நேரத்தில் எங்களுக்கு எதுவுமே  ஒன்றும் புரியவில்லை.

அந்த ஒளியானது மெதுவாக மறைந்துபோனது மீண்டும் ஆலயத்தை இருள் சூழ்ந்தது. இதன் மூலம்  நான் கண்டு கொண்ட உண்மை என்னவென்றால்
"தரிசனம் என்பது கோவில் பூட்டிக்கிடந்தாலும் கிடைக்கும்" என உணரப்பெற்றேன்.

இன்று நினைத்துப்பார்த்தாலும் அந்த தரிசனம் எங்கள் நினைவில் நீங்காமல் இடம் பெற்றுவிட்டது.

குருமுனியானவர் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பதே  உண்மை.

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

செவ்வாய், 15 மார்ச், 2011

கும்பகிரியில் குருமுனியின் தரிசனம்...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  ,
கும்ப கிரியில் குருமுனியின் தரிசனம்... என்ற தலைப்பை பார்க்கும்போதே வியப்பாக இருக்கும் என நினைக்கிறேன். இதை எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்து கொண்டே இருந்தது. இருப்பின் பணியின் நிமித்தமாக என்னால் எழுதமுடியவில்லை .

நான் மற்றும் என் இல்லாள் ,எனது சதுரகிரி வழிக்காட்டி ஐயா வெங்கடேஷ் மற்றும் எங்கள் குழுவினர் சதுரகிரியில் தரிசனம் செய்து விட்டு பின் கும்பகிரிக்கு புறப்பட்டோம். இந்த சதுரகிரி சந்திப்பின் போது தான் எனது முறைப்படி திருமணம் (சித்தர்கள் முறைப்படி ) சந்தன மகாலிங்கத்தின் முன்னால் அடைமழையில் நடைப்பெற்றது. அதனை நினைத்தாலே ,அதன் சந்தோசமே தனி தான். சந்தன  மகாலிங்கத்தின் முன்னால் உள்ள ஆகாய கங்கையே பேரருவியாக விழுந்தது. அதனைப்பற்றி இன்னொரு அனுபவ பகுதியில் காண்போம்.  கொட்டும் மழையில் இரவில் இரு வீட்டார்களுக்கும் அமுதளித்தான் அந்த ஆதி சித்தன் . அதனை அப்புறமா பார்ப்போம். 


கும்பகிரிக்கு மதியம் மூன்று மணியளவில் வந்து சேர்ந்தோம், அங்கு அகத்தியரை வழிப்படும் ஒரு ஆசிரமம் உள்ளது. அங்கு வந்தபின் தான் எங்களுக்கு தெரியும்.  அது மட்டுமல்லாமல் அன்று தான் நவராத்திரியின்  முதல் நாள் . வெங்கடேஷ் ஐயா எங்களுக்காக ஒரு சித்தர்கள் யாகம் நடத்தும்படி கேட்டுகொண்டார்.  சித்தர்கள் யாகம் காண கண் கோடி வேண்டும். அவர்களின் பரிபாஷை மொழி கேட்க காதுகள் கொடுத்து வைத்து இருக்கவேண்டும்.

எங்கள் அனைவரையும் அகத்தியர் ஆசிரமத்தில் உள்ளோர்கள் வரவேற்று உபசரித்தார்கள். பயண களைப்பு தீர சிறிது நேரம் ஓய்வெடுத்து கொண்டோம். பின் அகத்தியர் ஆசிரமத்தில் உள்ள குருவானவர் ,பக்கத்தில் குருமுனியின் பாதம் பட்ட சிறிய குன்று உள்ளது, அங்கே சென்று அவரை தரிசனம் செய்து விட்டு வாருங்கள் என்று கூறினார்.

அப்போது மணி ஐந்து இருக்கும் அனைவரும் அந்த குன்றுக்கு சென்றோம். அவரின் பாதகமலங்களை கண்டு பெரு மகிழ்ச்சி கொண்டோம். எங்களுடன் ஆசிரமத்தை சேர்ந்த அன்பர் ஒருவர் கூட வந்தார், அவர் அக்கோவிலின் பெருமைகளையும் குருமுனியின் பாதத்தையும் காட்டி விளக்கி கூறினார்.
அங்கு ஒரு சிறிய அகத்தியர் கோவில் ஒன்று இருந்தது. ஆனால் அது மூடி கிடந்தது ,விசாரித்தபோது அக்கோவிலை மூடி 3  மாதம் ஆகிவிட்டது என்று அந்த அன்பர் கூறினார். அந்த மாலை பொழுதில் அனைவரையும் அந்த கோவில் ஈர்த்துவிட்டது . ஆனால் கோவிலை திறக்க வழியில்லை .


எல்லாரும் அந்த குன்றின் உள்ள பாறையில் உட்கார்ந்து கொண்டு ,ஆகாயத்தினை பார்த்து கொண்டு இருந்தோம்,  வானில் மேகங்களின் தோற்றத்தில் எண்ணற்ற வர்ண ஜாலங்களை சித்தர்கள் காட்டினார்கள். அதனை எங்கள் புகைப்பட கருவியால்   படம் பிடிக்க முடியவில்லை. 

சரியாக மணி 6 ,என் மனதிலோ எவ்வளவு தூரம் வந்து ,அகத்தியரின் பாதம் பார்த்து விட்டோம் ஆனால் அவரின் கோவில் உள்ள மூலவரை பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே  என மனம் ஏங்கியது.   வழக்கம் போல் மனதில் குருமுனி அகத்தியரை நினைத்து 
ஐயா கருணை காட்டுங்கள் என்று வேண்டி கொண்டு இருந்தேன்.

அப்போது அங்கு என்ன நடந்தது நாளைய பதிவில் காணலாம்.

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

வெள்ளி, 11 மார்ச், 2011

ஆதி சித்தனின் இரண்டாம் வருகை ...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

ஐயா சிவனருள் கேட்டதற்கிணங்க என்னுடைய அடுத்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

என்னுடைய அடுத்த பிறந்தநாள் வந்தது. அந்த சமயம் ,நான் சென்னையில் பணி புரிந்துகொண்டு இருந்தேன்.
வழக்கம் போல் , திருவல்லிக்கேணியில் உள்ள திருவெட்டீசுவரர் கோவிலுக்கு சென்று வணங்கி வந்தேன். 
ஆதிசித்தன் கூறியதுபோல், இந்த பிறந்த நாளும் வருவாரா ? என மனம் ஏங்கியது.

வழக்கம்போல், தந்தையிடம் முடிந்தால் என்னை வந்து பாருங்கள் இன்று ,உங்கள் ஆசி  எனக்கு தேவை என்று முறையிட்டு வந்தேன்.
இருப்பினும் , இது சென்னை மாநகரம் அல்லவா , எப்படி வருவார் ,என மனதில் ஒரே குழப்பம் நீடித்தது.
எப்படியோ வந்தால் சரி. என்று நினைத்துகொண்டு அலுவலகத்திற்க்கு சென்றுவிட்டேன்.

அலுவலகத்தில் பணிபுரிய மனம் வரவில்லை, எப்படி அவர் வருவார் என மனதில் ஒரே ஏக்கம்.

மதிய உணவிற்க்காக ,நாங்கள் வெளியே சென்றோம், அப்போது எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இருக்கிறார்.
அவர் சிவவழிப்பாட்டில் உள்ளவர், சரி அவரிடம் சென்று ஆசி வாங்கி வரலாம். என்று கிளம்பினேன்.

அவரின் கடைக்கு சென்று , அவரிடம் ஆசிப்பெற்றேன். ஆனால் என் மனதோ, ஆதி சித்தனை நோக்கி இருந்தது.

அப்பொழுது, ஒரு வயதான துறவி எங்கள் கடையை நோக்கி வந்து கொண்டு இருந்தார்,

எனக்கு ஒன்றும் புரியவில்லை , அவரின் தோற்றம், பழுத்த பழம்,முகத்தில் தேஜஸ் அதிகம், காவி உடை , மார்பில் துணி இல்லை.
உடல் முழுக்க ருத்ராட்சை, கையில் ஒரு பை மற்றும் திருவோடு வைத்திருந்தார்.

நாங்கள் இருந்த கடைக்குள் அவர் வந்தார். பிறகு என்னைப்பார்த்து , இன்று உன் பிறந்த நாள் தானே என கேட்டார்.
நான் பொத்தென்று அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டென். பிறகு அவருக்கு, நான் வாங்கி வந்த இனிப்புகளை கொடுத்தேன்.

அவர் அதை வாங்கி கொண்டார். பின் அவர் பையிலிருந்து விபூதி மற்றும் ஐந்து வகையான இனிப்புகளை வழங்கினார்.
பிறகு வீட்டில் உள்ளவர்களை நலம் விசாரித்தார். பின் மகனே நான் இமயமலையில் உள்ள அமர்நாத்தில் இருந்து வருகிறேன்.
உனக்கு இந்த பிரசாதங்களை கொடுக்க சொல்லி எனக்கு உத்தரவு என்றார்.

அடுத்த முறை என்னைப்பார்க்க என்னிடத்திர்க்கு வா என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டார்.

என்ன உங்களால் நம்ப முடியவில்லையா ?

என்னுடைய அடுத்த பிறந்தநாளில் அவர் கூறியதுப்போல் நான் அமர்நாத் குகைக்கு சென்று அவரை வணங்கி ஆசிப்பெற்றென்.

சிவ அனுபவங்கள் தொடரும்.....
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

வியாழன், 10 மார்ச், 2011

ஆதி சித்தனை வழியனுப்புதல்.

நேற்றைய தொடர்ச்சி ,

வீட்டில் இருந்து விடைப்பெற்றுக்கொண்டு , அவரை வழியனுப்ப வந்தபோது ,
பேருந்து வருவதற்கு பத்து நிமிடம் இருந்தது . அந்த நேரம் இருவரும் ஒரு இடத்தில் அமர்ந்து இருந்தோம் , அப்போது அவர் எனக்கு தினந்தோறும் ஒரு தமிழ் அர்ச்சனை செய்வாயே , எங்கே சொல் என்று என கேட்டார்.

எனக்கு ஒரே ஆச்சர்யம். இருப்பினும், கிடைத்த வாய்ப்பை ஏன் நழுவவிடவேனும் என்று , உடனே ,படபடவென அந்த அர்ச்சனையை ஆரம்பித்தேன். கொஞ்சம் நேரத்தில் அவரின் உடல் அதிர ஆரம்பித்தது . 
அவரின் கண்கள் மேல் நோக்கி சென்றுவிட்டது. சாம்பவி முத்திரையை போல் ,அவரின் கண்கள் நெருப்பு கலராக  இருந்தது.  

ஆனால் நானோ , மந்திரத்தின் எண்ணிக்கையில் கண்ணும் கருத்துமாக இருந்தேன், சிறிது நேரத்தில் எனக்கு மந்திரம் எதுவும் சொல்ல முடியவில்லை,இருப்பினும் விடா முயற்சியாக எல்லா மந்திரத்தையும் சொல்லி முடித்தேன்.  எனக்கு ஒரே சந்தோசம் அவரிடம் எல்லா மந்திரத்தையும் ஒப்பித்துவிட்டேன்.

பிறகு என்னை நோக்கி கூறினார், மகனே மந்திரம் என்பது மனதினால் சொல்வது  எண்ணிக்கைக்காக அல்ல,  இன்னும் பக்குவ பட வேண்டியிருக்கிறது என்று கூறினார். பின் எந்த மொழியாக இருந்தாலும் எவன் முழுமனதுடன்  அவனை உச்சரிகின்றானோ அவனுடைய குறிக்கோள் நிறைவேறும் என்று கூறினார்.

உன்னை அடுத்த முறை சந்திக்கிறேன் என்று கூறிவிட்டு புறப்பட்டார் ,
சித்தன் கூறியபடி எனக்கு வேலை கிடைத்தது . வாழ்வும் சிறந்தது.

என்ன சித்த உள்ளங்களே , நம்ப முடியவில்லையா , அவனின் அடுத்த சந்திப்பு 
என்னுடைய அடுத்த பிறந்த நாளில் சென்னை மாநகரத்தில் நடைப்பெற்றது .

அதை முடிந்தால் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

புதன், 9 மார்ச், 2011

ஆதி சித்தனுடன் உரையாடல்....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  ,

இங்கு நான் எழுதுவது நடந்த நிகழ்ச்சியை பற்றி தான். 

பின்னூட்டத்தில் உள்ள கருத்துகளுக்காக
@ஐயா சிவனருள் கூறியது போல ,
சிவ அனுபவத்தை எழுதுவது சாதாரண விஷயம் இல்லை . பல தடங்கலுக்கு இடையில் தான் இதை நான் எழுதுகிறேன். தற்சமயம் ஞான பாதையில் செல்வதால் ,எதைப்பற்றியும் கவலை கொள்வதில்லை ,எல்லாம் அவனின் ஆட்டம் என்று நினைக்கும் போது இதுவும் அதில் ஒன்று தான் என என் மனது கூறுகிறது.

@சங்கர் குருசாமி கூறுவதைப்போல் , இவ்வுலகில் 'வணங்குதல்'  என்ற சொல் இன்றியமையாதது.


நேற்றைய தொடர்ச்சி...
ஆதி சித்தன் உள்ளே வந்ததும், எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் எழுந்து வரவேற்றோம். எனக்கு ஒண்ணுமே புரியவில்லை , இது கனவா, இல்ல நினைவா என்று.

ஆர்வ மிகுதியால் ,நான் ஒரு பாத்திரத்தை எடுத்துகொண்டு பால் வாங்க புறப்பட்டேன்.  அந்த நேரம் அவர் என்னை தடுத்து நிறுத்தினார்.

எங்கப்பா போற என அவர் கேட்க,  நானோ பால் வாங்க என்றேன்.
அதற்க்கு அவர் சிரித்துக்கொண்டே பாதி பாவத்தை எனக்கு கொடுக்க ஏண்டா போற  , முழு பாவத்தையும் எனக்கு கொடுடா என்றார் .
எனக்கு ஒன்றுமே புரியவில்லை .  பின் என் தாயாரிடம் சொல்லி ஒரு சொம்பு தண்ணீர் மட்டும் வாங்கி அருந்தினார்.


பின் என்னைப்பார்த்து , ரொம்ப சந்தோசாம என்றார் , நான் பதில் எதுவும் கூறாமல் இருந்தேன்.  பிறகு என்னிடம், உன் பெற்றோர்கள் யார் என வினவினார் , நான் அமைதியாக கைலாசநாதனும், காமாட்சியும் என்று கூறினேன். அவர் சிரித்துக்கொண்டே ஹிம்ஹீம் என்றார். பின் என்ன  வேலை செய்கிறாய்  என கேட்டார் , வேலை தேடி கொண்டு இருக்கிறேன் என கூறினேன். அதற்கும் ஒரே சிரிப்பு தான் அவரிடம் இருந்து கிடைத்தது . பிறகு எந்த தெய்வத்தை வணங்குகிறாய் என்று கேட்டார் , அதற்க்கு சிவன் என்றேன். அதற்கும் சிரிப்பு தான் அவரிடம் இருந்து கிடைத்தது. 

உன் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் நலமா என்று கேட்டார் ,அதற்க்கு நான் அனைவரும் நலமே என்று கூறினேன், அதற்கும் அவருடைய பதில் சிரிப்பு தான்.  அசைவ உணவினை விரும்பி உண்பாயா என கேட்க, ஆம் ஆனால் இப்ப இல்லை என கூறினேன்.

அனைவரும் அமைதியாக உட்கார்ந்து இருந்தோம் , அவர் பட்டினத்து அடிகளாரின் சில பாடல்களையும் ,வள்ளலாரின் சில பாடல்களையும் பாடி அதற்க்கு விளக்கம் கூறினார். எனக்கோ ஒன்றும் புரியவில்லை அந்த பாடல்களை அதற்க்கு முன் நான் கேட்டது கூட கிடையாது.

பிறகு என்னை நோக்கி கூறினார்,
மகனே இந்த உலகில் வணங்க வேண்டிய முதல் தெய்வம் இரண்டு என்றார் ,ஆம் என்றேன் அவை சிவனும் அந்த சக்தியும் என்றேன்,
அவரோ அதை மறுத்துவிட்டார் , உன்னை ஈன்ற உன் தந்தையும் தாயும் தான் என என் செவிலில் அறைந்தாற்போல் கூறினார்.


உனக்கு சிவன் மேல் மோகம் உள்ளதால் இவர்களை மறந்துவிட்டாய் அது தவறு , முதலில் உன்னை மாற்றிகொள் என கூறினார்.  நான் அமைதியாக ஆகட்டும் என்றேன்.

பிறகு வேலை தேடி கொண்டு இருக்கிறாய் என கூறிவிட்டு சிவனை சுற்றி வந்தால் ஒன்னும்  கிடைக்காதப்பா  ,அவன் ஞானத்தை தான்  கொடுப்பான் வேலையை இல்லை ,முதலில் ஊரை விட்டு கிளம்பி வேலை தேட வெளியூருக்கு போ என்றார்.

பிறகு, உன் வீட்டில் உள்ளவர்கள் நலம் என்கிறாய் ஆனால் அது பொய் அவர்கள் உன்னை நினைத்து மனம் வெதும்பி ,இவ்வாறு வெட்டியாக ஊரை சுற்றுகிறானே ,எப்படி கடனை அடைப்பது, எப்படி பெண்களை திருமணம் செய்து கொடுப்பது, எப்படி உன் சகோதரனுக்கு படிப்பு செலவுக்கு காசு கொடுப்பது என பல தரப்பட்ட மன உளைச்சலில் உள்ளார்கள் ஆனால் நீயோ ,சதா காலம் என்னை நினைத்தால் உன் குடும்பத்தை யார் நினைப்பார்கள், முதலில் உன் குடும்பத்தில் உள்ளவர்களை சந்தோஷபடுத்து என்று இப்படி தான் இல்லை என திட்டி தீர்த்தார்.

பிறகு கோவிலுக்கு போகிறாயா என கேட்டார் ,ஆம்  சிவன்  கோவிலுக்கு என்றேன் . அதற்க்கு முதலில் குல தெய்வ கோவிலுக்கு போய் வர முயற்சி செய் என்றார் , உன் குலத்தில் தோன்றியவர்கள் தான் உம்மை முன்னுக்கு கொண்டு வரமுடியும், ஆகையால் அவர்களை மனமார வழிபடு என கூறினார்.

அசைவ உணவினை என் நிறுத்தினாய் என்றார் , உடல் நிலை சரியில்ல அதனால தான் என்றேன.  ரொம்ப சந்தோசம் ஒருவனுக்கு நோய் வருகிறது என்றால் அவனுடைய கர்மவினைகள் குறைகிறது என்று அர்த்தம். பரவாவில்லை அதை நீ புரிந்து கொண்டால் போதும் என சொன்னார்.

ஏறக்குறைய ஒன்ற நாழிகை உரையாடல் நடைப்பெற்றது.   பின் அவரை வழி அனுப்ப சென்றேன்,

எங்கள் வீட்டில் உள்ள எல்லாருக்கும் மகிழ்ச்சி ,ஏனெனில் என்னை சித்தர் நன்றாக திட்டி அறிவுரை வழங்கியதற்கு .

அவரை வழி அனுப்ப வந்த போது நிகழ்ந்த நிகழ்ச்சியை நாளைய பதிவில் காணலாம்.

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

செவ்வாய், 8 மார்ச், 2011

...மகளிர் தின வாழ்த்துகள்...

அன்புள்ள வலைப்பூ நேயர்களுக்கு ,

எமது இனிய மகளிர் தின வாழ்த்துகள் .

உங்களுக்காக இடைகாட்டு சித்தரின் பாடலில் இருந்து...

அன்னையைப் போலெவ்வுயிரும் அன்புடனே  காத்துவரும்
முன்னவனைக் கண்டு முக்தியடை புல்லறிவே....

பெண்களை பேணி காப்போம் , சாதி சமயமற்ற உலகினை உருவாக்குவோம் .

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

ஆதி சித்தனின் வருகை...

நேற்றைய தொடர்ச்சி...

இது நம்ப முடியாதது என பலர் நினைக்கலாம் ,அதைப்பற்றி  நான்  கவலைப்பட போவதில்லை, ஏனெனில் இதனை எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் ,என் நண்பர்களும் அனுபவத்தால் கண்டவர்கள்.


தலைவனை  தரிசனம் செய்து விட்டு, வீட்டுக்கு வந்தாகி விட்டது. என் மனதில் ஒரே கவலை வருவாரா இல்ல வரமாட்டாரா ? என்ன செய்வது தேவை இல்லாமல் நண்பர்களிடம் வேறு பந்தயம் கட்டியாகிவிட்டது .
என்செயல் யாவது ஒன்றும் இல்லை இனி தெய்வமே உன்செயல் என்று பட்டினத்தாரை மனதில் நினைத்துக்கொண்டு எனக்கு தெரிந்த ஆதி சித்தனின் தமிழ் மந்திரத்தை மனதில் உச்சரித்து கொண்டு இருந்தேன்.

அவன் வரமாதிரி தெரியவில்லை ,அதனால் மனதை தேற்றிகொண்டு நண்பர்களிடம் சென்று தோல்வியை ஒப்பு கொள்ளலாம் என்று வீட்டை விட்டு கிளம்பினேன்.

எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள கடையில் தான் உட்கார்ந்து நாங்க சத்சங்கம் செய்வது வழக்கம் . எல்லாரும் என்னைப்பார்த்து சிரித்தார்கள்.
பாலா ரொம்ப ஆசைப்படாத சித்தன் வரானா பார்க்கலாம் என்று கேலியாக என்னைப்பார்த்து சிரித்தர்ர்கள்.

அப்போது மணி சரியாக எட்டாக 10  நிமிடம் இருந்ததது.  எல்லாரும் என்னைப்பார்த்து இப்படி தான் நக்கல் பண்ணனும் சொல்லமுடியாத அளவுக்கு என்னை பாடா படுத்தினார்கள் . எல்லாம் அவன் செயல் என்று இருந்தபோது , எங்கள் ஊருக்கு வரும் பேருந்தில் இருந்து , ஒரு வயதான பெரியவர் இறங்கி வந்து கொண்டு இருந்தார்.  தூரத்தில் இருந்து பார்க்கும் போது அவர் ஒரு பரதேசி போல் இருந்தார்  யாரும் அவரை சரியாக உன்னித்து பார்க்கவில்லை . நேரம் நெருங்க நெருங்க எங்களை நோக்கி அவர் வந்து கொண்டு இருந்தார்.

அவர் எங்களை கிட்டவந்து நெருங்கும் நேரம்,  நாங்க அனைவரும் வெலவெலத்து போனோம். நல்லதொரு வெள்ளை வேஷ்டி , மார்பில் துணி இல்லை , நீண்ட ஜடா முடி , கையில் கமண்டலம் , உடல் முழுக்க ருத்ராட்சை அணிந்து இருந்தார். அவருடைய கண்களை எங்களால் பார்க்க முடியவில்லை ஏனென்றால், எங்களுக்கு  அந்த சக்தி இல்லை .
தலையில் ஜடாமுடியை நன்றாகா முடித்து போட்டு அழகாக  வைத்திருந்தார் .

அவரை பார்த்தவுடன், எங்களுக்கு ஒன்றும் பேச தோன்றவில்லை , இருப்பினும் என் வீட்டருகே வந்து நின்றார்.  பின் என்னைப்பார்த்து இங்கே வா என்று உரிமையாக அழைத்தார்.  அவரிடம் மிக மரியாதையாக சென்று , ஐயா என்று அழைத்தேன்.

இன்று உனக்கு பிறந்த நாள் தானே என்று வினவினார், நான் எதுவும் கூறாமல் மெளனமாக நின்றேன்.
உனக்கு இன்று பிறந்த நாள் , ஆகையால் உன்னை சந்திக்க சொல்லி எனக்கு உத்தரவு வந்துள்ளது வா மகனே  உன் வீட்டுக்குள் போகலாம் என்று அழைத்தார்.

நான் எதுவும் பேசவில்லை ,என் நண்பர்களோ அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை .

நம்ப முடியவில்லையா உங்களால் ?  இந்த கலியுகத்தில்....

அவருடன் நடந்த உரையாடலை நாளைய பதிவில் காணலாம்,

சிவ அனுபவம் தொடரும்...
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

திங்கள், 7 மார்ச், 2011

சிவனின் வருகை...

மந்திரங்களைப்பற்றி தற்சமயம் நான் கொண்டுஇருக்கும் எண்ணம் வேறு, இருப்பினும் நான் கடந்து வந்த பாதையை தான் இங்கு எழுதுகிறேன், "

"யாரும் தவறாக என்னை எண்ண வேண்டாம். "

எமக்கு கிடைத்த அமான்ஷ்ய சக்தியைப்பற்றி எழுத முயற்சித்த போது, பல தரப்பட்ட பழைய நினைவுகள் எம்மைசுற்றிசுற்றி வந்து.. ஒரு மாதிரியாகி போய்விட்டது. சித்தர்களின் உத்தரவு கிடைக்கவில்லைபோலும் என உள்மனது கூறுகிறது.

இருப்பினும், எம் வாழ்வில் அந்த ஆதி சித்தன் எம்மை தேடி வந்ததை இன்று  பகிர்ந்து கொள்கிறேன்.

இது நடந்தது 2004  ம் ஆண்டு.
எங்கள் ஊரில் உள்ள சிவனாலயம் மிகச்சிறப்பு வாய்ந்தது. கைலாசநாதர் மற்றும் காமாட்சி அம்மனுடன் உள்ள ஒரு சின்ன கோவில் ஆகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்ப்பட்டது , சோழர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இது விளங்கியது .

சதா காலம் சிவனின் திருவிளையாடல்கள் பற்றி பேசிக்கொண்டு இருந்ததொரு காலம்( வேலை வாய்ப்பு இல்லாததனால் ) . நன்று படித்தும் ,வேலை கிடைக்காத விரக்தியால் ஆன்மிகத்திற்கு ஈர்க்கப்பட்ட காலம் அது.   எமது நண்பர்கள் ஈசா யோகத்தில் பயிற்சி பெற்றவர்கள் நானோ எதுவும் தெரியாத ஆனால்  சிவன் மேல் மட்டும் பித்து கொண்டவனாக இருப்பவன். பல நல்ல ஆத்மாக்களின் நட்புறவு கிடைத்தால் எங்கள் மனம் எப்போதும் சிவனை நோக்கியும் , சத்சங்கத்திலும் இருக்கும்.


அன்று தான், வாழ்க்கையின் மிக சிறந்த நாளாக கருதுகிறேன், எம்மை எம்பெற்றோர்கள் இந்த தரணிக்கு அறிமுகப்படுத்திய(பிறந்தநாள்) நாளாகும்.
வழக்கம் போல் எல்லாரும்( நண்பர்களுடன் ) சாயங்காலம் கோவிலுக்கு சென்றோம்.   எப்போதும் எம் தந்தையை சுத்த தமிழால் அர்ச்சனை செய்வது வழக்கம்.  அன்றும் அதுப்போல் நடந்தது.  அந்த அர்ச்சனைக்கு நிகர் இந்தவுலகில் எதுவும் கிடையாது . அவனே வந்து வழிய கேட்கும் மந்திரம் அது .  இதனை பல இடங்களில்( இமய மலையிலும் கூட) பரிச்சித்து பார்த்தவன் என்ற முறையில் கூறுகிறேன்.


மனதில் எம்தந்தை நினைத்து , பின்வருமாறு கூறினேன்.
ஐயா,
  எனக்கு இன்னைக்கு பிறந்த நாள்,   வாழ்த்து சொல்ல எல்லாரும் வந்தார்கள் உம்மை தவிர.
என் மேல் உங்களுக்கு எண்ண கோபம், என்னை ஏன் வந்து பார்க்க மாற்றிங்க ,இருந்தாலும் நீங்க ரொம்ப பெரியவங்க , உலக மக்களை காக்கும் மிகப்பெரிய பொறுப்பு உங்களிடம் இருக்கிறது. இருப்பினும் இந்த பிள்ளையை பார்க்க ஒரு முறை  வாங்க என்று கூறினேன்,  உங்களால் நேரில் வர முடியலனா கூட  பரவாயில்லை  கனவிலாவது வாங்க என்று கூறினேன்,


பிரார்த்தனை முடிந்து , என் நண்பர்களிடம் கூறினேன் , இன்று எம் தந்தை எம்மை பார்க்க வருவார் என்று.

எல்லாரும் சிரித்தார்கள் , இந்த சிலை (சிவலிங்கம்) எப்படி வரும் என்று நன்றாக நக்கலடித்தார்கள் . என் மனமோ சித்தனை நோக்கி , அப்பா இவர்களுக்கு நல்ல என்ணத்தை கொடுக்க வேண்டும் , அதுக்காவது வாங்க என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து விட்டேன்  .

இது கதை அல்ல , நடந்தது என் வாழ்வில் ...

சித்தன் வந்தானா ? கனவிலா  இல்லை  நினைவிலா --

 நாளைய  பதிவில் பார்க்கலாம்.

 என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

புதன், 2 மார்ச், 2011

நமது சிவஇராத்திரி வாழ்த்துகள்.

அன்புள்ள சிவசி(சு/பி)த்த ஆன்மாக்களுக்கு,

நமது சிவராத்திரி வாழ்த்துகள்.

பல புராண கதைகள் இந்த ராத்திரிக்கு பின்னிபினையப்பட்டு இருக்கிறது. அதைப்பற்றி விவரிக்க, விமர்சிக்க எமக்கு உரிமை இல்லை,  ஆயினும் நமது முன்னோர்கள் வழிவகை செய்த அனைத்து சமய சடங்குகளும் மனிதனின் வாழ்கையின் முன்னேற்றத்திற்கு தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமும் இல்லை.

சிவ (சிவனை வழிபட வேண்டிய) இராத்திரி என்பதால் அனைவரும் அருகில் உள்ள கோவிலுக்கோ அல்லது வீட்டில் இருந்தோ அந்த ஆதி சித்தனை வழிபடுங்கள் ( இன்று ஒருநாளாவது ).

உபாவாசம் இருந்து தான் அவனை வழிபடவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் எந்தவொரு பெற்றோரும் தம் குழந்தைகள் பட்டினி கிடக்க விரும்புவதில்லை.

அவனை அன்பாலின்றி வேறொரு எந்த வகை முயற்சியினாலும் அடையமுடியாது.

கோவிலுக்கு சென்று முடிந்த வரை, அமைதியாக அமர்ந்து அந்த ஆதி சித்தனை நினைவு கூறுங்கள்.

எல்லாம் வல்ல அந்த ஆதி சித்தன் அனைத்து உள்ளங்களுக்கும் நல்லதொரு வாழ்க்கையை தருவானாக.

நேற்று நான் கூற இருந்த ஒரு மகாமந்திரம் கீழே தரப்பட்டுள்ளது.
இதன் பலனை கூறுவதோடு அனுபவித்து பார்த்தால் தான் புரியும்.

எந்தவொரு செயலை செய்யும் முன் இந்த மந்திரத்தை மூன்று முறை மனதால் தியானித்துவிட்டு  செய்து பாருங்கள் (ஆதி சித்தன் அருளிருந்தால் ).

இதற்க்கு விதிவிலக்கு எதுவும் இல்லை,  தூய அன்பு மட்டும் போதும்.

இரவில் படுக்கும் முன்பு கூறுவது ரொம்ப நல்லது. அதைப்போல் படுக்கையில் இருந்து எழுந்திரிக்கும் போதும் கூறுவது சால சிறந்தது.

மந்திரங்களின் தாய் சமஸ்கிரிதம் என்று  எல்லோரும் நினைத்து கொண்டு இருக்கிறார்கள் . ஆனால் நம் தாய் மொழி தமிழ்  அதையும் தாண்டியது. அதனை விவரிக்க வார்த்தைகளே கிடையாது.

தமிழுள்ள சித்த மந்திரங்களை அவ்வளவு  எளிதாக யாராலும் பிரயோகிக்க முடியாது.  அதை உச்சரிக்கவே நாக்கு பயப்படும். உடல் நடுங்கும். 


மகாமந்திரம் :
உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்.


இம்மந்திரத்தின் மூலம் நான் கண்ட அமான்ஷ்ய சக்திகளை நாளைய பதிவில் காணலாம்.
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

செவ்வாய், 1 மார்ச், 2011

எமது சிவ பயணத்தில்....


அன்புள்ள சித்த நெஞ்சங்களுக்கு  ,

எமது வாழ்க்கையில் நடைப்பெற்ற சம்பவங்கள் , எமக்கும் அந்த சிவனுக்கும் நடைப்பெற்ற  உரையாடல்கள் எத்தனை எத்தனையோ !
ஆனால் எல்லா போட்டிகளிலும் ஆதி சித்தனே வெற்றிபெற்றான் . 
ஆகையால் தான் நான் அவனுக்கு(அவருக்கு) அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டேன்.

நாம் வாழும் இந்த கலியுகத்தில் இது சாத்தியாமா ?சாத்தியம் என்றால் அது எப்படியாகும் ?

நம்மால் இறைவனை சந்திக்க முடியுமா ? அப்படி சந்தித்தால்
நமது மன நிலை எப்படி இருக்கும் ,அதே வேலையில் மற்றவருடைய மன நிலை எப்படி இருக்கும் ?

நம் இல்லத்திருக்கு அவன் தேடி வருவானா ? அப்படி தேடி  வந்தால்
அவன் நம்மிடம் வந்து என்ன கேட்பான் ?


மேற்கண்ட கேள்விகளை பார்க்கும்போது ,பிரமிப்பாகவும் இருக்கும் , சில சமயங்களில் கேலி கூத்தாகவும் இருக்கும்.

எமது அனுபவதிருக்கு நான் மட்டும் அல்ல எம்மை சுற்றியுள்ள நண்பர்களும் இன்று வரை சாட்சியாக உள்ளார்கள், நடைபெற்ற நிகழ்வுகள்
அனைத்தும் காகபுசன்டரின் ஓலை சுவடியுளும் வந்துள்ளது(எம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது) .


ஆனால்,இன்று அதையும் தாண்டி அவனருளால் சித்தர்களின் பாதகமலங்கலுக்கு வழிபாடு(மன) செய்வதால் .எதையும் வெளிச்சொல்ல மனம் விரும்புவதில்லை. ஆயினும் யான் பெற்ற சில நல்ல நிகழ்வுகளை உங்களுடன் பரிவர்த்தனம் செய்துகொள்ள முயற்சிக்கிறேன்..

நாளை ஒரு மிக அருமையான மந்திரத்தை உங்களுக்கு கூறுகிறேன்.
இந்த மந்திரத்தை வைத்து கொண்டு சாமியாடும் பெண்களை கட்டுபடுத்தலாம் .  தெய்வதிருக்கு எதிரியாக செயல்படும் அனைத்து தீய சக்திகளையும் முறியடிக்கலாம். உங்களை நீங்களே மாற்றிக்கொள்ள முடியும்.

"மந்திரம் கால் மதிமுக்கால் "

உங்களுக்கு மனவேகம் , மனதைரியம் இருந்தால்....முயற்சித்து பாருங்கள்.

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.