செவ்வாய், 22 நவம்பர், 2011

நெஞ்சறி விளக்கம் 1 -5

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
     
கணபதி தாசர் அருளிச்செய்த  நெஞ்சறி விளக்கம் 1 -5 

விநாயகர் காப்பு

வஞ்சக மனத்தினாசை மாற்றிய பெரியோர் தாளில்
கஞ்சமா மலரிட் டோதுங் கணபதி தாசன் அன்பால்
நெஞ்சறி விளக்க ஞான நீதிநூல் நூரும்பாடக்
குஞ்சர முகத்து மூலக் குருபரன் காப்ப தாமே .

பாடல் : 1
பூமியிற் சவுந்தர ப்பெண் புணர்ந்திடு நாகை நாதர்
நாமெந்  நாளும் நாவினவின்று செந் தமிழாற் பாடிக்
காமமு மாசா பாசக் கன்ம முமகற்றி மூல
ஓமெனு மெழுத்தை ந்தாலே யுனையறிந்துணர்வாய் நெஞ்சே..

பாடல்: 2 
தந்தை தாய் நிசமுமல்ல சனங்களும் நிசமுமல்ல
மைந்தரும் நிசமுமல்ல மனைவியும் நிசமுமல்ல
இந்தமெய் நிசமுமல்ல இல்லறம் நிசமுமல்ல
சுந்தர நாகை நாதர் துணையடி நிசம்பார் நெஞ்சே..

பாடல் :3 
காண்பது மழிந்துபோகும் காயமு மழிந்துபோகும்
ஊண்பொருள் அழிந்து போகும் உலகமும் அழிந்து போகும்
பூண்மணி நாகை நாதர் பொற்பாதம் அழியாதென்று
வீண்பொழு தினைப்போக்காமல்  வெளிதனில் ஒளிபார் நெஞ்சே.

பாடல் :4 
மனமெனும் பேயினாலே மாய்கையாம் இருடான் மூடச்
சனமெனும் ஆசா பாசந் தலைமிசை ஏற்றிக் கொண்டு
கனமெனுஞ் சுமையைத் தூக்கிக் கவலையுற்றிட்டாய் நீயும்
பனமெனும் நாகை நாதர் பதம்பணிந் தருள்சேர் நெஞ்சே ..

பாடல் : 5 

இருவினைப் பகுதியாலே எடுத்திந்தத் தேகந்தன்னை
மருவிய நானான் என்று  மாயையில் அழிந்தாய் நீதான்
குருவினாற் குறியைப்பார்த்துக்  குண்டலி வழியே சென்றங்கு
உருவினால் நாகை நாதர் உண்மையை  உணர்வாய் நெஞ்சே ..


விளக்கம் :

ஓமெனும் எழுத்துடன் ஐந்தெழுத்து மந்திரத்தை சேர்த்து செந்தமிழால் தினந்தோறும்
மனதில் தோன்றும் ஆசாபாசங்களையும் காமத்தையும் கன்மத்தையும் அகற்றி நாகை நாதரின்
பாதத்தை நெஞ்சினால் உணர்ந்து அவர் பாதம் சரணடையவேண்டும் .

இவ்வுலகில் நிலையானவர் யாரென்று இரண்டாம் பாடலில் கூறியுள்ளார் . நம்மை ஈன்ற பெற்றோர்களும் ஒரு நாள் இறந்து போவார்கள் , நாம் ஈன்ற மக்களும் ஒரு நாள் அழிந்து போவார்கள் . நம்முடன் வாழ்ந்து நமது வம்சத்தை விருத்தி செய்யும் மனைவியும் ,ஏன் நமது இந்த உடலும் கூட ஒரு நாள் அழிந்து போகும்  ஆனால் நாகை நாதரின் துணை ஒரு நாளும்
அழிந்துபோகாது  என்று கூறுகிறார்.  இது உண்மையும் கூட நமது சித்தர்கள் கட்டிய கோவில்கள் இன்றும் நிலைத்து நிற்க தான் செய்கிறது.

தொடரும் .....
     

http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

1 கருத்து:

  1. எது நிலையானது என்பதை அழகாக பாடல் மூலம் விளக்கி இருக்கிறார்.. ஓம் நம சிவாய...

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு