திங்கள், 29 ஆகஸ்ட், 2011

இமயமலையில் உள்ள பாபாஜியின் குகை தரிசனம்...


                                        ஓம் கிரியா பாபாஜி நம அஉம்.

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

கடந்த இரண்டு வாரங்களாக  எந்தவொரு பதிவினையும் எம்மால் பதிவு செய்ய முடியவில்லை ஏனெனில் நாங்கள் அனைவரும் பாபாஜியின் குகை தரிசனத்திற்காக சென்றுவிட்டோம்.

"எதுவும் நம் கையில் இல்லை" என்பதருக்கு இந்த யாத்திரை ஒன்றே போதும் என்னும் அளவிற்கு சிறப்பாக அமைந்தது.

என்னதான் நாம் திட்டங்கள் போட்டு நடத்தினாலும் அவன் அருளின்றி எதுவும் நடைபெறுவதில்லை .

அவனின்றி அவன் தாள் வணங்கமுடியாது என்பதும் இந்த யாத்திரையின் மூலம் புரிந்தது .

கடுமையான நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட நாங்கள் எப்படி பாபாஜியின் மூலம் காப்பாற்றப்பட்டோம் என்றும் ,  அவர் எங்களிடம் எப்படி உரையாடினார் என்றும். அவர் எங்களுக்கு எப்படி அமுதளித்தார்  என்றும் பின்வரும் நாளில் காணலாம் .

அவர் நடத்துகின்ற ஒவ்வொரு அற்புதத்தையும் நினைக்கும்போது  என்  நெஞ்சம் ......சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ....

இந்த இமயமலை யாத்திரை அவரின் விருப்பத்திற்கு ஏற்றார் போல நடந்தது. தாய் வீட்டுக்கு சென்று வந்தது போல இருந்தது .

பல ஜென்மங்கள் கூடவே இருந்து உரையாடிய உணர்வு எங்களுக்கு பல இடங்களில் ஏற்பட்டது . அவர் சூட்சமாக உலாவருவதை எம்மால் உணர முடிந்தது .  அவரை நினைக்கும்போதெல்லாம் உடல் சிலிர்க்கும் .அவரை பார்க்க நினைக்கும்போது எங்களுக்கு முன்னால் அவர் சென்றதை நினைக்கும்போது உடல் சிலிர்க்கிறது .

அவரின் அருளோடு இந்த யாத்திரையின் சில பகுதிகளை வரும் நாள்களில் பகிர்ந்து  கொள்கிறேன்..


"இதுவும் எமது குருநாதர் அகத்தியர்  உத்தரவின் பெயராலே நடைபெற்றது ".

ஓம் கிரியா பாபாஜி நம அஉம். 

என்றும்-சிவனடிமை-பாலா.

சனி, 13 ஆகஸ்ட், 2011

அடியேனின் பிறந்த நாள்...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

பிறந்த நாள் வாழ்த்து   அனுப்பிய  அனைத்து  நல்ல  உள்ளங்களுக்கும்  எனது மனமார்ந்த நன்றியை  தெரிவித்து கொள்கிறேன்.

 முகம் தெரியாத எத்தனை முகங்களின் உண்மையான அன்பினை கண்டு
மனம் உண்மையிலே  தான் நெகிழ்ந்து போகிறது .

இதுவரை சாதித்தது என்னவென்று பார்த்தால் ஒன்றும் இல்லை .
ஆன்மிகத்திற்கு வயது தேவையில்லை அவன் அருள் ஒன்று இருந்தாலே போதும்.

பொறுமையாக இருக்கவேண்டும் என்பதற்காக  எதையும் பயிற்சி செய்யாமால் இருந்தால் எதுவும் கிடைக்காது .

பெற்றோர்களின் அரவணைப்பு இல்லாத எல்லா குழந்தைகளும்  அனாதைகள் தான் இதில் நானும் ஒன்று.

சித்தர்கள்  விளையாடும் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று .

பாசம் என்பது எவ்வளவு கொடியது என்பது பாசத்தில் இருந்து விடுபடும்
ஒருவனுக்கு தான் தெரியும் . எல்லாவற்றையும் கடந்து தான் வரவேண்டும் என்பது சித்தர்களின் கொள்கையாக கூட இருக்க தோன்றுமே என்று எனது மனம் கூறுகிறது. 


உயிர் என்ற தத்துவத்தை உணர்ந்தவனுக்கு இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களும் சமம் தான் இதில் அவனுக்கு எந்தவொரு பேதமும் இல்லை .

பாம்பாட்டி சித்தர் பாடலில் இருந்து

  மணக்கோலங் கொண்டும் மிக மனமகிழ்ந்துமே
  மக்கள் மனை சுற்றத்தோடு மயங்கி நின்றாய்
  பிணக்கோலங் கண்டு பின்னுந் துறவாவிட்டால்
  பிறப்புக்கே துணையா மென்றாடாய் பாம்பே ...

பட்டினத்து அடிகளின் பாடலில் இருந்து

  தாய் தந்தை பெண்டுபிள்ளை தானென் றிரங்கிநித்தம்
  காய் பறிக்கிராயே கனியிருக்க ---தாய் தந்தை
  எத்தனைபேர் பெற்றாரோ என் மனமே நாமுந்தான்
  எத்தனைபேரைப் பெற்றோமோ இங்கு .....

 பத்திரகிரியாரின் பாடலில் இருந்து

தந்தை தாய் மக்கள் சகோதரரும் பொய்யெனவே
சிந்தை தனிற் கண்டு திருக்கறுப்ப தெக்காலம் ....


 என்றும்-சிவனடிமை-பாலா.

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

பிருகு முனிவரின் பாடலில் இருந்து ....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
                            ஆசையை தள்ளு
       என்னவே பிறர் மனை மேல் ஆசை தள்ளு
           எடுத்தோத பிறர் பொருளின் ஆசை தள்ளு
       கன்னமே வைக்காதே காமந் தள்ளு
           கண்மணியே மாங்கிசமும் புகையுந் தள்ளு
       பின்னமே வேண்டாம்பார் மாய்கை  தள்ளு  
           பிசக்குள்ள கசடரை நீ சாடித் தள்ளு
       கன்னமுடன் தாம்பூலங் கள்ளு கஞ்சா
           சுகமில்லா பொய் முதலாங் கோபந் தள்ளே....

எளிமையான தமிழில் உள்ள இதற்க்கு விளக்கம் தேவை இல்லை ..

மாந்திரகத்தை கற்று கொள்ளவேண்டியவன் தள்ளவேண்டியவை இவை ..


என்றும்-சிவனடிமை-பாலா.

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

சதுரகிரியில் உடல் பூமியை விட்டு கிளம்ப ஆரம்பித்தல் ......

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு , 

நேற்றைய தொடர்ச்சி ,

           இரவு ஒன்பது மணிக்கே தூங்க ஆரம்பித்து விட்டேன் . எல்லாம் மகாலிங்கத்தின் செயல் என்று நினைத்து கொண்டு தூங்க ஆரம்பித்து விட்டேன். எனக்கு மனதில் எப்படியும் இந்த வருடம் அந்த நட்சத்திர தரிசனம் பார்த்தே ஆகவேண்டும் என்று தோன்றியது .   இருப்பினும் மகாலிங்கம் நல்ல உணவினை கொடுத்து எம்மை  தூங்க வைத்துவிட்டார் . 

 என்னுடன் உள்ள நண்பர்கள் எல்லாரும் மகாலிங்கத்தின் பெருமைகளை பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள் . அதனை கேட்டு கொண்டே நான் என்னை மறந்து தூங்க ஆரம்பித்தேன் .  திடீரென என் உடலில் ஒரு மாற்றம் ஏற்படுவதை  உணர்ந்தேன் . நாங்கள் தூங்கிய இடம் சிவா சித்தரின் ஜீவசமாதி ஆகும்.   ஆகையால் இது அவரின் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு தோன்றியது .

நான் ஒரு கட்டிலில் உறங்குவது போல கனவு கண்டேன் , ஒரு மிகப்பெரிய நல்ல பாம்பு ஒன்று எனது கட்டிலுக்கு அடியில் வந்து என்னை பார்த்தது . என் மனமோ நம்மை பாம்பு கடித்தால் நமக்கு  பிடித்த பீடைகள் விளங்கும் என மனது நினைத்தது. ஆனால் அது என்னை உற்றுப்பார்த்து விட்டு பின் அதன் தலையால் என்னை தூக்க அது முயற்சித்தது .

அதனால் என்னை தூக்கமுடியவில்லை . திடீரென அதன் உருவம் அதிகரித்து எனது பாதத்தில் இருந்து ஒவ்வொரு பகுதியாக என்னை தூக்க தூக்க எனது உடலும் பாம்பு தூக்குவதுர்க்கு ஏற்றார்போல வளைந்து கொடுத்து வந்தது . கொஞ்சம் நேரம் கழித்து எனது உடல் எனது கட்டப்பாட்டில் இல்லை . கடலில் வரும்  அலைகள் போல் எனது உடல் அசைந்து அசைந்து ஆடி கொண்டு இருந்தது .பாம்பு எப்படி நெளிந்து ஓடுமோ அதுபோல எனது உடல் நெளிய ஆரம்பித்தது .

பின் எனது உடல் மெதுவாக மேலே கிளம்புவதற்கு தயாராக இருந்தது .இதுவெல்லாம்  நடப்பது எனக்கு நன்றாக தெரிந்தும் ,என்னால் எனது உடலை கட்டுபடுத்த முடியவில்லை  .

நான் சுதாரித்து கொண்டு குருநாதரின் மந்திரத்தை கூறியபோது ,எனது உடல் மெதுவாக கீழே இறங்கியது . அகத்தியரின் மந்திரத்தை கூறிக்கொண்டே எழுந்திரித்தேன் . அப்போது சரியாக இரவு  மணி 12  ஆகும் . கண் திறந்து பார்த்தபோது வானில் அந்த நட்சரத்தை பார்த்தேன்.  பின்  குருவே நீயே துணை என்று  கூறிவிட்டு படுத்துவிட்டேன்.

அதற்குபின் எனக்கு தூக்கம் வரவில்லை ,மனதில் ஒரே குழப்பம் ,ஏன் இதுமாதிரி கனவும் நினைவும் உணர்வும் சேர்ந்து வருகின்றது .

எனது உடல் பாம்பு போல நெளிந்து ,பின் ஆகாயத்தில் பறப்பதற்கு தயாராக இருந்ததை  இப்ப நினைத்தாலும் கொஞ்சம் பயமாகவும் அதே நேரம்ஆச்சர்யமாகவும் இருக்க  தான் செய்கிறது .  


இதன் விளக்கம் என்னவென்று  எனக்கு தெரியவில்லை . தெரிந்தவர்கள் விளக்கம் கொடுத்தால் ரொம்ப நன்றாக இருக்கும்.

சித்தர்களின் விளையாட்டா ? 
ஆதி சித்தனின் விளையாட்டா ?
இல்லை என் மனதின் விளையாட்டா ?


மறுநாள் சாப்டூர் பாதையில் பயணித்து  இந்த பயணத்தை முடித்து கொண்டேன்.  இந்த பாதை கொஞ்சம் கடினம் தான் இருந்தாலும் கைலாயத்திற்கு போயிட்டு வந்த மாதிரி ஒரு மன திருப்தி ஏற்பட்டது .


எங்கும்  நிறைந்த சிவன் எல்லாமாகவும் இருக்கிறான் .
புரிந்தும் புரியாமாலும் தெரிந்தும் தெரியாமாலும் நடக்கின்ற ஒவ்வொரு  செயலும் நமக்கு நன்மையே செய்கிறது .
என்றும்-சிவனடிமை-பாலா.

புதன், 10 ஆகஸ்ட், 2011

ஆடி அமாவாசை நிகழ்வின் தொடர்ச்சி .....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
 
 சரியாக 9  மணிக்கு சந்தன மகாலிங்கத்தை அடைந்தபோது , அங்குள்ள மக்கள் கூட்டத்தை பார்த்து மயங்கி போனேன் . எங்கள் ஊரை சேர்ந்த 25 க்கும் மேற்பட்ட மக்கள் எம்மை வரவேற்றார்கள் . பின் தலையாட்டி சித்தர் மடத்தை சேர்ந்த அனைவர்களும் வரவேற்று அங்கு எம்மை தங்குமாறு அழைத்தார்கள் .  நானும் சரி என்று கூறிவிட்டு அங்கு அமர்ந்து விட்டு பின் மகாலிங்கத்தை தரிசனம் செய்ய புறப்பட்டேன்.  காவல் அதிகாரிகளோ ஐயா வரிசையில் வாருங்கள் என்று கூறினார்கள் . சரியான கூட்டம் வேறு , நான் கூறினேன் , ஐயா நான் சாமி  கும்பிடவரவில்லை மகாலிங்கத்திருக்கு சேவை செய்ய தான் வந்துள்ளேன் என்று கூறியதும் ,என்னை நேரடியாக தரிசனம் செய்ய அனுமதித்தார்கள் .

அங்கு சென்றதும் ,அப்போது தான் தலைவருக்கு தீப ஆராதனை ஆரம்பித்தது . நல்ல தரிசனம் கிடைத்தது . பின் வழக்கம் போல மக்கள் சேவையில் இறங்கி விட்டேன், தரிசனம் செய்ய வரும் பக்தர்களை ஒழுங்கு படுத்தி வரிசையில் அனுப்பவதை மேற்கொண்டேன், உடன் காவல் அதிகாரிகள் இருந்தாலும் ,எமது கடமையை சிரமேற்கொண்டு செய்தேன், அன்றைய மாலை தலையாட்டி சித்தர் மடத்தின் சார்பில் நடைபெற்ற யாகத்தில் கலந்து கொண்டு அதையும் சிறப்புற செய்தேன் .

இந்த வருடம் , காவல் அதிகாரிகள் 500 க்கும் மேற்பட்டவர்கள் பணியில் ஈடுபடுத்த பட்டார்கள் .
காட்டு தீ பரவியதால் ஆயிரக்கணக்கான மக்கள் தானிபாறையிலே தங்க வைக்க பட்டார்கள் , ஆகையால் தரிசனம் செய்ய வந்த மக்கள் கூட்டம் கட்டுபாட்டுகுள்ளே இருந்தது .

கோவில் சேவையில் உள்ளவர்களுக்கு எப்போதும் தனி மரியாதை அங்கு  உண்டு ,அவர்கள் தங்குவதற்கு இடமும், உணவும் தரப்படும் . இந்த வாய்ப்பு கிடைப்பதற்கும் அவன் அருள் தேவை.
அன்றைய சேவை முடிந்தவுடன் வழக்கம் போல தூங்க சென்றேன். அங்கு எம்மை போல நிறைய நண்பர்கள் இருப்பார்கள் .எல்லாரும் ஆடி அமாவாசைக்கு கண்டிப்பாக வந்து விடுவார்கள்.
ஆகையால் எங்களிடம் தூக்கம் வராது . ஏதாவது மகாலிங்கத்தின் மகிமையை பத்தி பேசி கொண்டு இருப்போம்.

வழக்கம் போல இந்த வருடமும் சித்தர்களின் தரிசனத்திருக்கு காத்திருந்தேன் . 
மகாலிங்கம் ரொம்ப புத்திசாலி . ஏனெனில் வரும் பக்தர்களுக்கு நல்ல ஆரோக்கியமான அன்னத்தை தந்து உறங்க வைத்து விடுவார். இதனை மனதில் கொண்டு நான் கொஞ்சமாக இரவு உணவினை உண்டுவிட்டு காத்திருந்தேன் .

ஆனால் வழக்கம் போல உறங்கிவிட்டேன் . அப்போது ஒரு அருமையான நிகழ்வு நடந்தது. நான்  உறங்கிக்கொண்டு இருந்த இடம் சட்டைநாதர் சித்தரின் குகைக்கு மேல். அங்கு தான் சிவா சித்தரின் ஜீவசமாதி அமைந்துள்ளது . அந்த ஜீவசமாதியின் அருகே தான் நான் உறங்கி கொண்டு இருந்தேன் .

அந்த அற்புத நிகழ்வினை நாளைய பதிவில் பதிவு செய்கிறேன்.


என்றும்-சிவனடிமை-பாலா.

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

பலவேறு பணிகளுக்கு இடையில் என்னால் பதிவுகளை பதிவு செய்ய முடியவில்லை. கடந்த ஆடி அமாவாசை திருவிழா மிக விமர்சையாக சதுரகிரியில் நடைபெற்றது.  தற்சமயம் இருக்கும் பணியில் விடுப்பு கிடைக்காதலால் வெள்ளிகிழமை அன்று தான் எனது பயணம் சென்னையில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மூலம் ஆரம்பித்தது .

மதுரைக்கு வந்தடைந்ததுபோது சரியாக அதிகாலை மணி 2 ஆகும் . பிறகு தானிபாறைக்கு செல்லும் பேருந்தில்  இருந்து சதுரகிரிக்கு புறப்பட்டேன்.  வரும் வழியில் சதுரகிரி மலையில் காட்டு தீ பிடித்து எரிந்து கொண்டு இருந்ததை கண்டு மிகவும் மன வேதனை பட்டேன் .
நாங்கள் சென்ற பேருந்து தானிபாறையில் இருந்து  10 மைலுக்கு முன்னால் நிறுத்தப்பட்டது .

ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் அங்கு நிறுத்தப்பட்டது .  பிறகு நான் எனதுநடைபயணத்தை ஆரம்பித்தேன் .எனது பயணம் 10 கிலோ மீட்டர் தூரத்தை  ஒன்னே கால் மணி நேரத்தில்  நடந்தே  கடந்து விட்டேன் . சரியாக 6 :25 க்கு தானிபாறையை வந்தடைந்தபோது   அங்கு இருந்த மக்கள் கூட்டத்தை பார்த்து வியந்து போனேன் . ஏறக்குறைய ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கூட்டம் அங்கு நிரம்பி இருந்தது.   

எங்கும் காவல் அதிகாரிகள் நிரம்பி இருந்தார்கள் ,யாரையும் அவர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கவில்லை . இரவு 11 மணி  முதல் மலை ஏறுவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை ஏனெனில் காட்டு தீ மக்கள் நடந்து செல்லும் பாதைக்கு அருகில் வந்துவிட்டதால் யாருக்கும் அனுமதி இல்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்கள் .

மிகவும் மனசோர்வு அடைந்து விட்டேன் . "என்ன மகாலிங்கம் இவ்வளவு தூரம் நடந்து வந்து இப்படி பண்ணிட்டியே " என்று மனதில் அவரை நினைத்து கொண்டேன் .  காவல் அதிகாரிகளோ காட்டு தீ அணைந்தால் தான் நாங்கள் மலை ஏற அனுமதிப்போம் அதுவரை அமைதியாக இருங்கள் என்று கூறிவிட்டனர் . வேறு வழியில்  போகவேண்டுமானால் அது ரொம்ப சிரமமாக இருக்கும் என்று நினைத்து கொண்டு அருகில் இருந்த ஒரு பாறையில் அமர்ந்து கொண்டு சிந்தித்துக் கொண்டு இருந்தேன் .

அந்த பாறையில் அமர்ந்திருந்த கூட்டம் திடீரென ஒரு பாதைக்குள் செல்ல ஆரம்பித்தது . நானும் அவர்களை தொடர்ந்து அந்த பாதையில் சென்றேன் . அந்த பாதை சரியாக ஆசிர்வாத பிள்ளையார் இருக்கும் இடத்தை வந்தடைந்தது. எங்கள் எல்லாருக்கும் ரொம்ப சந்தோசம். எப்படியோ மலை ஏறுவதருக்கு ஒரு வழி கிடைத்து விட்டது என்று சந்தோஷ பட்டோம் .

காலை 6 : 45 மணிக்கு மலை ஏற ஆரம்பித்தேன் ,என்னால் நடக்கவே முடியவில்லை ஏனெனில் அதிகாலை 4 மணிக்கே நடக்க ஆரம்பித்ததால் .எப்படியோ மகாலிங்கத்தின் அருளால் காலை 9 மணிக்கு சந்தன மகாலிங்கத்தை அடைந்தேன் . நான் எப்படி மலை ஏறிவந்தேன் என்று எனக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் ஆச்சர்யமாக இருந்தது .

அவனின்றி ஆவது ஒன்றும் இல்லை ......

என்றும்-சிவனடிமை-பாலா.