சனி, 31 டிசம்பர், 2011

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்-2012

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

உலகில் உள்ள அனைத்து உள்ளங்களுக்கும்  எமது புத்தாண்டு நல்வாழ்த்துகள் .

பழையன கழிதலும் புதியன புகுதலும் -என்ற கோட்பாட்டில் வாழும் நாம் கடந்த ஆண்டில் நடந்த கசப்பான அனுபவங்களின் துணை கொண்டு இனி வரும் நாட்களில் அதுப்போன்ற அனுபவங்களை மீண்டும் ஏற்படுத்தி கொள்ளாமல் வாழ்ந்தால் போதும்.

குருவின் துணை கொண்டு தான் நாம் இந்த பிறவியை முடித்து பிறவா
வாழ்க்கையை  மேற்கொள்ளவேண்டும் .

பாம்பாட்டி சித்தரின் பாடல் -குருவணக்கம்

பொய்ம்மதங்கள்  போதனைசெய் பொய் குருக்களைப்
புத்தி  சொல்லி நன்னெறியிற் போக விடுக்கும்
மெய் மதந்தான் இன்னதென்றும் மேவ விளம்பும்
மெய்குருவின் பதம் போற்றி ஆடாய் பாம்பே

மதம் பிடிப்பது என்பது விலங்குகளுக்கு தான் மனிதர்களுக்கு அல்ல . மதங்களை தாண்டி மனித உள்ளங்களை  நேசித்தால் போதும் .  எல்லா  மதங்களும்   மனிதனால் உருவாக்கப்பட்டவை தான் .

உண்மையான மதத்தை நமக்கு விளக்கம் கூற சற்குருவினால் மட்டும்  தான் முடியும் .

இவ்வாண்டில் எந்தவித  சாதி  சண்டையும், மதக்கலவரங்களும் ஏற்படாமல்
இருக்க எல்லாவல்ல சித்தர்களின் பாதங்களை தொட்டு வணங்கி வேண்டி கொள்வோம் .

http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

வியாழன், 29 டிசம்பர், 2011

நெஞ்சறி விளக்கம்-சிவன் உறையும் இடம்

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

மதிப்பிற்குரிய ஐயா சங்கர் குருசாமி கேட்டுதர்க்கிணங்க எனக்கு தெரிந்த
விளக்கத்தை இங்கே தருகிறேன்.

முதல் பாடலில் நாடு,நகரம்,  வீடு ,நல்ல வாழ்க்கை ,இல்லாள் , மைந்தர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் நம்முடன் இருக்கிறார்கள் என்று நினைத்து கொண்டு இருக்கின்றாயே ,இந்த கூடும் ஒரு நாள் அழிந்து போகுமே , இப்படி அழிந்து போகும் கூட்டினை வைத்து கொண்டால் பிறவிகள் பல எடுக்க வேண்டி இருக்குமோ கூறு நெஞ்சே என்று கேட்கிறார் . இந்த கூட்டினை அழியாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?


இரண்டாவது பாடலில் கூறுவது , என்னதான் படித்தாலும் ,எத்தனை ஏடுகள் படித்தாலும் எத்தனை  நூல்கள் படித்தாலும் ஒன்றும் புண்ணியம் இல்லை என கூறுகிறார்.  இன்று நிறைய ஏடுகள் தியானத்தை பற்றி நமக்கு கிடைக்கிறது ,ஆனால் ஏடுகளை படித்துவிட்டு நாம் தியானத்தை தொடர்ந்தால் பல விளைவுகளை தான் சந்திக்க வேண்டீருக்கும் . எனவே குருவினை கொண்டு இது போன்ற
பயிற்சிகளை கற்று கொள்ளவேண்டும் .

முற்காலத்திலும் சரி, தற்காலத்திலும் சரி மனிதன் தனது இறுதி காலத்தினை கழிக்க கானகத்தை தான் தேர்வு செய்து கொள்கிறான் .ஏனெனில் அங்கு தான் மன  நிம்மதி கிடைக்கும் என நினைக்கிறான். பல சித்திகளை பெறுவதற்காக பல மாதங்களாக காட்டில்
தவம் செய்து கொண்டு மாண்டு போனவர்கள் எண்ணிலா கோடி ஆகும். இதுவும் நமக்கு தேவை இல்லை . இங்கு கானல் நீரினை உண்மையான நீர் என நினைத்துகொண்டு நாம் அலைவதை குறிப்பிடுகிறார். அதுபோல நாட்டிலே தெய்வம் இங்கு இருக்கிறது அங்கு இருக்கிறது என்று மக்கள் அலைவதை பார்த்து தெய்வம் என்பது நமது கூட்டினுள் தான் இருக்கிறது என்று தெளிவாக கூறுகிறார்.

இது உண்மையும் கூட தான் , நமது ஜீவன் நம்மை விட்டு போனால் நாம் சடம் ஆவோம் .இந்த உடலையும் உயிரையும் ஆட்டுவிப்பவனே இறைவன் ஆவான் .


மூன்றாம் பாடலில் நாம் எவ்வாறு இந்த ஆக்கையை அழியாமல் பாதுகாக்க முடியும் என்று கூறுகிறார்  . இதற்க்கு முதலில் நமக்கு ஞானம் கிடைக்கவேண்டும்,  ஞானம் கிடைக்க நல்ல குரு வேண்டும் , நல்ல குரு கிடைத்தால் வாசி போன்ற பயிற்சிகளை நமக்கு கற்று கொடுத்து உண்மையான கயிலையை நமக்கு காட்டுவார்கள் , அவ்வாறு கண்ட கயிலையில் குண்டலினி மூலம் தீபத்தை நெற்றியின் புருவ மையத்தில் எப்படி ஏற்றுவது என்று கற்று கொடுப்பார்கள் . அவ்வாறு ஏற்றிய தீபத்தின் மூலம் உண்மையான சிவலிங்கத்தை நமக்கு காட்டுவார்கள் .

நமது உயிரின் வடிவம் சிவலிங்கம் ஆகும். இதை தான் நமது சித்தர்கள்
எல்லா கோவிலிலும் நாகலிங்கத்தை பிரதிஸ்டை பண்ணி இருப்பார்கள் .
குண்டலினி மூலம் நமது ஜீவனை நம்மால் அடைய முடியும்.

இது எமக்கு தெரிந்த கருத்துகள் .


http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

செவ்வாய், 27 டிசம்பர், 2011

நெஞ்சறி விளக்கம் -இறைவன் உறையும் இடம்

அன்புள்ள சித்த  உள்ளங்களுக்கு ,

நெஞ்சறி விளக்கம் -இறைவன் உறையும் இடம்

நாடென்றும் நகரமென்றும் நலந்திகழ் வாழ்வதென்றும்
வீடென்றும் மனையாளேன்றும் மிக்கதோர் மைந்தரென்றும்
மாடன்றுஞ்  சம்பத்தென்றும் வாஞ்சை கொண்டலைந்தாய் இந்தக் கூடொன்றும் அழிந்தாற் கூடத்தொடருமோ கூறு நெஞ்சே.

 ஏட்டிலே எழுதும் நூல்கள் எத்தனை படித்தும் தீதான்
 காட்டிலே எறித்த திங்கள் கானலிற்  சலம்போலானாய்
நாட்டிலே தெய்வமென்று நடந்தலை யாமாலுன்றன்
கூட்டினுலே நாகைநாதர் குறிப்பறிந் துணர்வாய் நெஞ்சே ...

கிட்டுமோ ஞானயோகம்  கிடைக்குமோ குருவின் பாதம்
கட்டுமோ மூல வாசி காணுமோ கயிலை வீடு
எட்டுமோ நாகலிங்கம் ஏற்றுமோ தீப ஜோதி
தட்டுமோ பளிங்குமேடை தனையரி யார்க்கு நெஞ்சே ...

இறைவன் நம்முள்ளே இருக்கிறான் ....

இந்த சான்று ஒன்றே போதும் என நினைக்கிறேன் ...

http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

நெஞ்சறி விளக்கம்-எண்ணத்தின் வலிமை

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

கீழ்காணும் பாடலில் தெளிவான விளக்கங்கள் உள்ளதால்
எமது விளக்கம் தேவைப்படாது என நினைக்கிறேன்.


குளத்திலே கிடக்கும் ஆமை குளக்கரை முட்டையிட்டு
குளத்துநீர்க்  குள்ளிரிந்து குறிப்புடன் நினைக்கும்போது
குளத்திலே புதைத்த முட்டை கருவுரு வானாற் போலுன்
உளத்திலே நாகை நாதர் உருவறிந்து உணர்வாய் நெஞ்சே .


மருவிய சிலந்திப் பூச்சி வயிற்றினில் நூலுண்டாக்கி
உருவுடன் கூடுக்கட்டி உகந்ததிலிருக்கு மாபோல்
குருபர னுனது கூட்டில் குடியிருப்பதனைப் பார்த்துப்
பெருவெளி நாகை நாதர் பெருமை கண்டருள் சேர்  நெஞ்சே . 

தண்ணீரிலிருக்கும் மீன்கள் தண்ணீரிற் கருவைப்பித்திக்
கண்ணினாற் பார்க்கும்போது கயலுருவானாற் போல
நண்ணிய குருவைக்கண்டு  நாதனல் லுருவைச் சேர்த்து
விண்ணின்மேல் நாகை நாதர் மெல்லடி வெளியார் நெஞ்சே.


எண்ணம் போல் வாழ்க்கை என்பது உண்மை தான் . உயிர்கள் உருவாகும் விதத்தை உவமையாக கூறிய நமது சித்தர்களை நம்மால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை .

பதிநென்மர் சித்தர் பாதம் போற்றி ...
http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

வியாழன், 8 டிசம்பர், 2011

கார்த்திகை தீபவாழ்த்துகள்...

அன்புள்ள சித்தஉள்ளங்களுக்கு ,

நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. 
எனக்கு பணியில் சிறிது இடமாற்றம் ஏற்பட்டுள்ளதால் தங்களை சந்திக்க முடியவில்லை, தினந்தோறும்    காலை 3 மணி நேரம் பயணம் செய்து அலுவலகத்திற்கு செல்வதும் அதற்குபின் 10 மணி நேரம் அலுவலக
வேலை பார்ப்பதும் ,பின் 3 மணி நேரம் பயணம் செய்து வீட்டுக்கு திரும்ப வேண்டியாகி உள்ளது. 

இருப்பினும் இதுவும் அந்த ஆதி சித்தனின் வேலையாக தான் இருக்கும் . நடப்பது நன்மைக்கே என்ற கோட்பாட்டில் மீண்டும் எழுத முயற்சிக்கிறேன்.

இன்று கார்த்திகை தீபம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த கார்த்திகை தீபவாழ்த்துகள்.

திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம் போல உங்கள் மனதிலும் ஆன்ம ஜோதியை ஏற்றுங்கள் . இறையருள் பெறுங்கள் .

நெஞ்சறி விளக்கம் -10

வீட்டிருள் போகவென்றே விளக்கினை ஏற்றி வைத்தால்
வீட்டிருள் எங்கே போச்சு விளக்கொளி எங்கே போச்சு
கூட்டினுள் நடஞ்செய் ஈசன் குறிப்பறியாமல் நீதான்
நாட்டினுள் அலைந்தால் நாகை நாதரை வணங்கு நெஞ்சே ..


http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.