அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
இன்றைய பதிவுடன் பட்டினத்து அடிகளின் பூரணமாலை முற்றுபெறுகிறது . இதற்க்கான விளக்கம் கூடிய விரைவில் வரைய முயற்ச்சிக்கிறேன் . இதுகாறும் இப்பதிவினை படித்து வந்தும், பலருடன் இதனை பற்றி பேசியவர்களும் நிச்சயம் கூடிய விரைவில் ஞானத்தை பெறுவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை .
உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளிலும் இறைவன் நீக்கமற நிறைந்துள்ளார் என்பதை தான் பின்வரும் பாடல்கள் கூறுகிறது.
இறைத்தன்மையை அகத்திலும் புறத்திலும் காண முயலுங்கள் . இதுவே ஞானத்தின் ஆரம்பம்.
ஊன் உடலுக்குள்ளிருந்த உயிர்ப்பறியேன் பூரணமே !
62 ) பொய்யும் புலையும் மிகப்பொருந்தி வீண் பேசலின்றி
ஐயோ உனை உரைக்க அறிகிலேன் பூரணமே !
63 ) நிரந்தரமாய் எங்கும் நின்று விளையாடினதைப்
பரம் அதுவே எனைப் பதம் அறியேன் பூரணமே !
64 ) கொல்வாய் பிறப்பிப்பாய் கூட இருந்தே சுகிப்பாய்
செல்வாய் பிறர்க்குள் செயல் அறியேன் பூரணமே !
65 ) வாரிதியாய் வையம் எல்லாம் மன்னும் அண்டபிண்ட எல்லாம்
சாரதியாய் நின்ற தலம் அறியேன் பூரணமே !
66 ) வித்தாய் மரமாய் வெளியாய் ஒளியாய் நீ
சத்தாய் இருந்த தரம் அறியேன் பூரணமே !
67 ) தத்துவத்தைப் பார்த்து மிகத் தன்னை அறிந்த அறிவால்
உய்த்து உனைத்தான் பாராமல் உய்வாரோ பூரணமே !
68 ) ஒன்றாய் உயிராய் உடல் தோறும் நீ இருந்தும்
என்றும் அறியார்கள் ஏழைகள் தாம் பூரணமே !
69 ) நேற்றும் என்றும் நாளை என்றும் நினைப்பு மறப் பாய்படைத்தும்
மாற்றமாய் நின்ற வளம் அறியேன் பூரணமே !
70 ) மனம் புத்தி சித்தம் மகிழ் அறிவு ஆங்காரமதாய்
நினைவாம் தலமான நிலை அறியேன் பூரணமே !
71 ) உருப்பேதம் இன்றி உய்ந்த சப்த பேதமாய்க்
குருப்பேதமாய் வந்த குணம் அறியேன் பூரணமே !
72 ) சட்சமய பேதங்கள் தான் வகுத்துப் பின்னும் ஒரு
உட்சமயம் உண்டென்று உரைத்தனையே பூரணமே !
73 ) முப்பத்திரண்டு உறுப்பாய் முனைந்து படைத்த உள்ளிருந்த
செப்பிடு வித்தைத் திறம் அறியேன் பூரணமே !
74 ) என்னத்தான் கற்றால் என் ? எப்பொருளும் பெற்றால் என் ?
உன்னை அறியாதார் உய்வரோ ? பூரணமே !
75 ) கற்றறிவோம் என்பார் காணார்கள் உன்பதத்தைப்
பெற்றரியார் தங்களுக்குப் பிறப்பு அறுமோ பூரணமே !
76 ) வான் என்பார் அண்டம் என்பார் வாய் ஞானமே பேசித்
தான் என்பார் வீணர் தனை அறியார் பூரணமே !
77 ) ஆதி என்பார் அந்தம் என்பார் அதற்குள் நடுவாய் இருந்த
சோதி என்பார் நாதத் தொழில் அறியார் பூரணமே !
78 ) மூச்சென்பார் உள்ளம் என்பார் மோனம் எனும் மோட்சம் என்பார்
பேச்சென்பார் உன்னுடைய பேர் அறியார் பூரணமே !
79 ) பரம் என்பார் பானு என்பார் பாழ் வெளியாய் நின்ற
வரம் என்பார் உன்றன் பேர் அறியார் பூரணமே !
80 ) எத்தனை பேரோ எடுத்தெடுத் தான் உரைத்தார்
அத்தனை பேருக்கு ஒன்றானது அறிகிலேன் பூரணமே !
81 ) நகார மகாரம் என்பார் நடுவே சிகாரம் என்பார்
வகார யகாரம் என்பார் வகை அறியார் பூரணமே !
82 ) மகத்துவமாய்க் காம மயக்கத்துக் குள்ளிருந்து
பகுத்தறிய மாட்டாமல் பயன் இழந்தேன் பூரணமே !
83 ) உண்மைப் பொருளை உகந்திருந்து பாராமல்
பெண் மயக்கத்தாலே பிறந்து இறந்தேன் பூரணமே !
84 ) வாயார வாழ்த்தி மகிழ்ந்து உனைத்தான் போற்றாமல்
காயம் எடுத்து கலங்கினேன் பூரணமே !
85 ) சந்திரனை மேகமது தான் மறைத்த வாறது போல்
பந்தமுற யானும் உனைப் பார்க்கிலேன் பூரணமே !
86 ) செந் தாமரைத்தாளை தினந்தினமும் போற்றாமல்
அந்தரமாய் நின்றங்கு அலைந்தேன் நான் பூரணமே !
87 ) நீர்மேல் குமிழி போல் நிலையற்ற காயம் இதைத்
தாரகம் என்றெண்ணி நான் தட்டழிந்தேன் பூரணமே !
88 ) நெஞ்சம் உருகி நினைந்து உனைத்தான் போற்றிநெடு
வஞ்சககத்தைப் போக்க வகை அறியேன் பூரணமே !
89 ) எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்கும் நிறைந்திருந்து
உள்ளம் அறியாது உருகினேன் பூரணமே !
90 ) மாயாப் பிரபஞ்ச மயக்கத்திலே விழுந்தே
ஓயாச் சனனம் ஒழிந்திலேன் பூரணமே !
91 ) பூசையுடன் புவன போகம் எனும் போக்கியத்தால்
ஆசையுற்றே நானும் அறிவழிந்தேன் பூரணமே !
92 ) படைத்தும் அழித்திடுவாய் பார்க்கில் பிரமாவெலுத்தைத்
துடைத்துச் சிரஞ்சீவியாய்த் துலங்குவிப்பாய் பூரணமே !
93 ) மந்திரமாய்ச் சாத்திரமாய் மறைநான்காய் நீ இருந்த
தந்திரத்தை நான் அறிய தகுமோ தான் பூரணமே !
94 ) அல்லாய்ப் பகலாய் அனவரது காலம் எனும்
சொல்லாய்ப் பகுத்த தொடர்பறியேன் பூரணமே !
95 ) நரகம் சுவர்க்கம் என நண்ணும் இரண்டு உண்டாயும்
அரகரா என்பது அறிகிலேன் பூரணமே !
96 ) பாவபுண்ணியம் என்னும் பகுப்பாய்ப் படைத்து அழித்திங்கு
ஆவலையுண்டாக்கி வைத்த அருள் அறியேன் பூரணமே !
97 ) சாந்தம் என்றும் கோபம் என்றும் சாதிமதங்கள் என்றும்
பாந்தம் என்றும் புத்தி என்றும் படைத்தனையே பூரணமே !
98 ) பாசம் உடலைப் பசு அதுவும் தான் உயிராய்
நேசமுடன் நீ பொருளாய் நின்றனையே பூரணமே!
99 ) ஏதில் அடியார் இரங்கி இகத்துள் வந்துன்
பாதம் அதில் தாழப் பரிந்தருள்வாய் பூரணமே !
100 ) நானேநீ நீயே நான் நாம் இரண்டும் ஒன்றானால்
தேனின் ருசியது போல் தெவிட்டாய் பூரணமே !
101 ) முடிவில் ஒரு சூனியத்தை முடித்து நின்று பாராமல்
அடியில் ஒரு சூனியத்தில் அலைந்தேன் பூரணமே !.
102 ) பூரணமாலை தனை புத்தியுடன் ஒதினருக்கு
தாரணியில் ஞானம் தழைப்பிப்பாய் பூரணமே !.
பூரணமாலை முற்றும்.
என்றும்-சிவனடிமை-பாலா.
வணக்கம் பாலா..
பதிலளிநீக்குபட்டினத்து அடிகளின் பூரணமாலைக்கு விளக்கம் எழுதலாமே ?
நன்றி..
அன்பன் சிவ. சி.மா.ஜா
http://sivaayasivaa.blogspot.com
அருமையான பாடல்கள். ஓரளவுக்கு புரிந்தாலும், தங்களின் விளக்கத்துக்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/