அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
இங்கு நான் எழுதுவது நடந்த நிகழ்ச்சியை பற்றி தான்.
பின்னூட்டத்தில் உள்ள கருத்துகளுக்காக
@ஐயா சிவனருள் கூறியது போல ,
சிவ அனுபவத்தை எழுதுவது சாதாரண விஷயம் இல்லை . பல தடங்கலுக்கு இடையில் தான் இதை நான் எழுதுகிறேன். தற்சமயம் ஞான பாதையில் செல்வதால் ,எதைப்பற்றியும் கவலை கொள்வதில்லை ,எல்லாம் அவனின் ஆட்டம் என்று நினைக்கும் போது இதுவும் அதில் ஒன்று தான் என என் மனது கூறுகிறது.
@சங்கர் குருசாமி கூறுவதைப்போல் , இவ்வுலகில் 'வணங்குதல்' என்ற சொல் இன்றியமையாதது.
நேற்றைய தொடர்ச்சி...
ஆதி சித்தன் உள்ளே வந்ததும், எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் எழுந்து வரவேற்றோம். எனக்கு ஒண்ணுமே புரியவில்லை , இது கனவா, இல்ல நினைவா என்று.
ஆர்வ மிகுதியால் ,நான் ஒரு பாத்திரத்தை எடுத்துகொண்டு பால் வாங்க புறப்பட்டேன். அந்த நேரம் அவர் என்னை தடுத்து நிறுத்தினார்.
எங்கப்பா போற என அவர் கேட்க, நானோ பால் வாங்க என்றேன்.
அதற்க்கு அவர் சிரித்துக்கொண்டே பாதி பாவத்தை எனக்கு கொடுக்க ஏண்டா போற , முழு பாவத்தையும் எனக்கு கொடுடா என்றார் .
எனக்கு ஒன்றுமே புரியவில்லை . பின் என் தாயாரிடம் சொல்லி ஒரு சொம்பு தண்ணீர் மட்டும் வாங்கி அருந்தினார்.
பின் என்னைப்பார்த்து , ரொம்ப சந்தோசாம என்றார் , நான் பதில் எதுவும் கூறாமல் இருந்தேன். பிறகு என்னிடம், உன் பெற்றோர்கள் யார் என வினவினார் , நான் அமைதியாக கைலாசநாதனும், காமாட்சியும் என்று கூறினேன். அவர் சிரித்துக்கொண்டே ஹிம்ஹீம் என்றார். பின் என்ன வேலை செய்கிறாய் என கேட்டார் , வேலை தேடி கொண்டு இருக்கிறேன் என கூறினேன். அதற்கும் ஒரே சிரிப்பு தான் அவரிடம் இருந்து கிடைத்தது . பிறகு எந்த தெய்வத்தை வணங்குகிறாய் என்று கேட்டார் , அதற்க்கு சிவன் என்றேன். அதற்கும் சிரிப்பு தான் அவரிடம் இருந்து கிடைத்தது.
உன் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் நலமா என்று கேட்டார் ,அதற்க்கு நான் அனைவரும் நலமே என்று கூறினேன், அதற்கும் அவருடைய பதில் சிரிப்பு தான். அசைவ உணவினை விரும்பி உண்பாயா என கேட்க, ஆம் ஆனால் இப்ப இல்லை என கூறினேன்.
அனைவரும் அமைதியாக உட்கார்ந்து இருந்தோம் , அவர் பட்டினத்து அடிகளாரின் சில பாடல்களையும் ,வள்ளலாரின் சில பாடல்களையும் பாடி அதற்க்கு விளக்கம் கூறினார். எனக்கோ ஒன்றும் புரியவில்லை அந்த பாடல்களை அதற்க்கு முன் நான் கேட்டது கூட கிடையாது.
பிறகு என்னை நோக்கி கூறினார்,
மகனே இந்த உலகில் வணங்க வேண்டிய முதல் தெய்வம் இரண்டு என்றார் ,ஆம் என்றேன் அவை சிவனும் அந்த சக்தியும் என்றேன்,
அவரோ அதை மறுத்துவிட்டார் , உன்னை ஈன்ற உன் தந்தையும் தாயும் தான் என என் செவிலில் அறைந்தாற்போல் கூறினார்.
உனக்கு சிவன் மேல் மோகம் உள்ளதால் இவர்களை மறந்துவிட்டாய் அது தவறு , முதலில் உன்னை மாற்றிகொள் என கூறினார். நான் அமைதியாக ஆகட்டும் என்றேன்.
பிறகு வேலை தேடி கொண்டு இருக்கிறாய் என கூறிவிட்டு சிவனை சுற்றி வந்தால் ஒன்னும் கிடைக்காதப்பா ,அவன் ஞானத்தை தான் கொடுப்பான் வேலையை இல்லை ,முதலில் ஊரை விட்டு கிளம்பி வேலை தேட வெளியூருக்கு போ என்றார்.
பிறகு, உன் வீட்டில் உள்ளவர்கள் நலம் என்கிறாய் ஆனால் அது பொய் அவர்கள் உன்னை நினைத்து மனம் வெதும்பி ,இவ்வாறு வெட்டியாக ஊரை சுற்றுகிறானே ,எப்படி கடனை அடைப்பது, எப்படி பெண்களை திருமணம் செய்து கொடுப்பது, எப்படி உன் சகோதரனுக்கு படிப்பு செலவுக்கு காசு கொடுப்பது என பல தரப்பட்ட மன உளைச்சலில் உள்ளார்கள் ஆனால் நீயோ ,சதா காலம் என்னை நினைத்தால் உன் குடும்பத்தை யார் நினைப்பார்கள், முதலில் உன் குடும்பத்தில் உள்ளவர்களை சந்தோஷபடுத்து என்று இப்படி தான் இல்லை என திட்டி தீர்த்தார்.
பிறகு கோவிலுக்கு போகிறாயா என கேட்டார் ,ஆம் சிவன் கோவிலுக்கு என்றேன் . அதற்க்கு முதலில் குல தெய்வ கோவிலுக்கு போய் வர முயற்சி செய் என்றார் , உன் குலத்தில் தோன்றியவர்கள் தான் உம்மை முன்னுக்கு கொண்டு வரமுடியும், ஆகையால் அவர்களை மனமார வழிபடு என கூறினார்.
அசைவ உணவினை என் நிறுத்தினாய் என்றார் , உடல் நிலை சரியில்ல அதனால தான் என்றேன. ரொம்ப சந்தோசம் ஒருவனுக்கு நோய் வருகிறது என்றால் அவனுடைய கர்மவினைகள் குறைகிறது என்று அர்த்தம். பரவாவில்லை அதை நீ புரிந்து கொண்டால் போதும் என சொன்னார்.
ஏறக்குறைய ஒன்ற நாழிகை உரையாடல் நடைப்பெற்றது. பின் அவரை வழி அனுப்ப சென்றேன்,
எங்கள் வீட்டில் உள்ள எல்லாருக்கும் மகிழ்ச்சி ,ஏனெனில் என்னை சித்தர் நன்றாக திட்டி அறிவுரை வழங்கியதற்கு .
அவரை வழி அனுப்ப வந்த போது நிகழ்ந்த நிகழ்ச்சியை நாளைய பதிவில் காணலாம்.
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.